சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

இணைந்த இதயங்கள்!

வெடிங் லவ்

திருமணம் என்பது இருமனம் இணையும் திருவிழா. உண்மைதான். அஃப்ரினா யாஸ்மின் - முஹமது கமில் திருமணத்தில் இணைந்தது மணமக்களின் இதயங்கள் மட்டுமல்ல... யாஸ்மினின் தங்கையும் மணப்பெண் தோழியுமான அஸ்லினா மற்றும் கமிலின் சகோதரனும் மணமகன் தோழனுமான இம்ரான் ஆகியோரின் இதயமும்தான்!

இணைந்த இதயங்கள்!

``நான்தான், அந்தத் தோழி, தங்கை, இப்போது இம்ரானின் மனைவி... அஸ்லினா! இரண்டு தங்கைகள், ஒரு சகோதரருடன் பிறந்தவள் நான். ஒரு சகோதரன், ஒரு சகோதரி, மற்றும் ட்வின் பிரதர்ஸ் உடன் பிறந்தவர் இம்ரான். பார்க்க மாடர்னாக இருந்தாலும், எங்கள் இருவரின் குடும்பமும் மிகவும் பாரம்பர்யமானது. அது 2009... எனக்கு அப்போது 18 வயது. சென்னையில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு இம்ரான் வீட்டினர் வந்து என் அக்கா தலையில் பூச்சூடி திருமணத்துக்கு ஒப்புதல் செய்துகொண்டனர். அப்போது மணமகனான கமில் வரவேண்டும் என்றில்லை. இதர சொந்தங்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர், என் கண்களுக்குத் தனித்துத் தெரிந்தார். கமிலின் தம்பி இம்ரான். பார்த்ததும் காதலா புரியவில்லை. ஆனால், மீண்டும் அவரைப் பார்க்கக் காத்திருந்தேன்.

திருமண ஏற்பாடுகள் பற்றிப் பேச இம்ரான் மீண்டும் வந்தார். அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. இருவரும் தொலைபேசி எண்கள் பகிர்ந்தோம். திருமண வேலைகளை ஏற்பாடு செய்யும் சாக்கில் நிறையப் பேசினோம். ஆனால், மனதில் உள்ள பிரியத்தை இருவருமே வெளிப்படுத்திக்கொள்ளாமல், வாழ்வின் அந்த ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ எபிசோடை ரசித்தோம்.

இணைந்த இதயங்கள்!

திருமணத்துக்கு நாள் நெருங்க நெருங்க, ஆடைகள், நகைகள் என்று ஷாப்பிங் பொழுதுகளில் எல்லாம் பெண் வீட்டின் சார்பாக நான் முதல் ஆளாகிக் கிளம்பி நிற்பேன். இம்ரான் உறவினர்களோடு காரில் செல்வோம். நான் எனக்கு ஆடை தேர்ந்தெடுக்கும்போது, அதற்கு மேட்சிங்கான ஒரு ஆடவர் ஆடையை இம்ரான் தனக்குப் பில் செய்துகொண்டிருப்பார். காரில் மீண்டும் ஏறும்போது, டிரைவர் ஸீட் அருகே உள்ள இடத்தை இம்ரானின் அங்கிள் எனக்காக ரிசர்வ் செய்திருக்க, இம்ரான்தான் காரை ஓட்டுவார். எங்கள் குறுகுறு கெமிஸ்ட்ரியை மற்றவர்கள் தெரிந்துகொண்டார்களோ என்று அஞ்சியதுண்டு. சற்று வெட்கத் துடன், அதேசமயம் உள்ளே ஒருவித மகிழ்ச்சியுடன் அந்தத் தருணத்தை ரசித்தேன்.

தொடர்ந்து அழைப்பிதழ் தேர்வு, கேட்டரிங் தேர்வு என்று பேசித்தீர்த்த பந்தம், ஒருநாள் ‘ஐஸ் பிரேக்கிங்’ கட்டத்தை அடைந்தது. நீண்ட நேரம் இருவரும் பேசிவிட்டோம் அன்று. ‘ஏன் இப்படி நாம பேசிட்டு இருக்கோம்?’ என்று அவரிடம் கேட்டேன். மௌனமாக இருந்தார். அந்த மௌனமே எனக்குப் பதிலளித்தது. பிறகு, ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. பேசணும்போல தோணுது’ என்றார். உள்ளுக்குள் அவ்வளவு பேரானந்தம். காதல் மொட்டவிழும் நேரம், மிக ரம்மியம்!

இப்போது பகிர்ந்துகொண்ட, பெற்றுக்கொண்ட காதலுடன் மீண்டும் திருமண வேலைகளைக் கவனித்தோம். மெஹந்தி ஃபங்ஷனில் ஒவ்வொரு விருந்தினருக்கும் பட்டமளிக்க நினைத்தோம். அடிக்கடி சண்டையிடும் ஜோடி ‘டாம் அண்ட் ஜெரி’, டிஷ்யூம் டிஷ்யூம் மாமியார் - மருமகளுக்கு ‘சின்ன பாப்பா - பெரிய பாப்பா’, அழகாகப் பாடுபவர்கள் ‘சூப்பர் சிங்கர்’ என்று பெயர்களைத் தேர்ந்தெடுக்க, மணமகன் வீட்டினர் பற்றி இம்ரான் கூறியபோது, அவரின் குடும்பம் பற்றி எங்க அக்காவுக்கு முன்னாலேயே நான் புரிந்துகொள்ள முடிந்தது.

திருமண நாள். விருந்தினரை வரவேற்பது, பந்திக்கு அழைத்து உபசரிப்பது, புகைப்படம் எடுக்க வருவோரை மேடை ஏற்றி இறக்குவது என இருவரும் மிகவும் பிஸியாக இருந்தோம். கன்னியின் கடைக்கண் பார்வைபோல ஆடவனின் பார்வையும் குமரிக்கு ஒரு பூஸ்ட்தான். ஒருவரை ஒருவர் கண்ணுக்குக் கண்ணாகக் காணாமல் அவர் என்னைப் பார்ப்பதும், பிறகு நான் அவரைப் பார்ப்பதும் என்று செம ரொமான்ஸ் மூடு. அதில் வேலைகள் குறித்து எந்தச் சலிப்பும் அலுப்பும் தெரியவில்லை. எங்கள் நட்பு வட்டாரம் சின்னதாக கிண்டல்களை ஆரம்பித்தது. எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ?!

திருமணம் முடிந்து என் அக்கா, தன் கணவருடன் கோலாலம்பூர் சென்றுவிட்டார். 20 நாட்களில், எங்கள் குடும்பமும் கோலாலம்பூருக்கு ரிசப்ஷனுக்குச் சென்றோம். அப்போது என்னை அடுத்த மணப்பெண்போலவும், இம்ரானை அடுத்த மணமகன்போலவும் பாவித்து பரவலாகப் பேச்சாகிவிட்டது. ‘எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்று நாங்களே சொன்னாலும், இனி யாரும் நம்புவதற்கில்லை என்றாகிவிட்டது.

நீண்ட நாட்கள் கழித்து சென்னைக்கு வேலைவிஷயமாக இம்ரான் வந்தபோது, இருவரும் சந்தித்தோம். சற்று நேரம் பேசிவிட்டு, ‘வில் யூ மேரி மீ?!’ என்றார். வெட்கமும் பரவசமும் தின்ன, தலையசைத்தேன். என் கண்களை மூடச்சொன்னவர், ஒரு வைர வெடிங் ரிங்கை அணிவித்தார். இப்போது வீட்டுக்கு விஷயத்தைச் சொல்லும் நேரம். என் உடன்பிறந்தவர்களிடம் முதலில் சொன்னேன். ‘எங்களுக்கு எப்பவோ தெரியும்!’ என்று ஜாலியாகக் கேலி பேசினார்கள். இம்ரானின் வீட்டிலும் பச்சைக்கொடி. ஆனால், என் அம்மா மட்டும், ‘ஒரே வீட்டில் ரெண்டு பெண் தர வேணாம். நாளைக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னைன்னா, யாருக்காகப் பேசுறது?’ என்று ஒரேயடியாக மறுக்க, எனக்கும் இம்ரானைச் சந்திக்க `தடா’ போடப்பட்டது.

இணைந்த இதயங்கள்!

அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் போனில் பேசுவோம். பிறகு நான் சென்னை, `நிஃப்ட்’டில் (NIFT) ஃபேஷன் டிசைனிங் சேர்ந்தேன். இம்ரான் மலேசியாவில் முதுகலைப்பட்டம் முடித்தார். `நிஃப்ட்’ நுழைவுத்தேர்வுக்கு எனக்குக் கணக்குப் பாடம் சொல்லித்தந்தது இம்ரான். இம்ரானுக்கு பக்கம் பக்கமாக தீஸிஸ் டைப் அடித்து உதவியது நான். படிக்கச் சென்றால் காதல் மறந்துவிடும் என்று பெரியவர்கள் நினைக்க, கல்வியால் எங்கள் காதல் மேலும் ஸ்திரமானது. நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்தபோது, எங்கள் காதலுக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் கிடைத்தது. கோவளம் பீச்சில் டிசம்பர் 2015-ல் நிச்சயம். திருமண விழாவில் அரேபியன் ஸ்டைலில் பெல்லி டான்ஸுடன் மெஹந்தி. அதன் பின்னர் ஜனவரி 2016-ல் பாரம்பர்ய முறைப்படி திருமணம். சில நாட்கள் கழித்து, மலேசியாவில் பாலிவுட் தீமில் ரிசப்ஷன். காதலில் ஆரம்பித்து, அழகானஅரேஞ்சுடு மேரேஜுடன் கனிந்தது வாழ்க்கை. இதில் பியூட்டி என்னவென்றால், எங்கள் திருமணத்தில், எங்களது கஸின்கள் பார்த்துப் பேசி அடுத்த மணமக்களாக தயாராகிவிட்டனர். குடும்பராசியா?!

இன்று நானும் அக்காவும் கோலாலம்பூரில் 10 நிமிட நடை பயண தூரத்தில் வசிக்கிறோம். அடிக்கடி மீட்டிங், அவுட்டிங், மகிழ்ச்சி, ஆனந்தம். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இருபிள்ளைகளையும் சந்திப்பது, இரு வீட்டாருக்கும் எளிதாகிவிட்டது. எங்கள் அனைவருக்கும் இப்போது சந்தோஷம் அன்லிமிட்டட்!’’

தொகுப்பு: ச.சந்திரமௌலி, படங்கள்: அமர் ரமேஷ்