சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

கல்யாணத்தை கலகலக்க வைக்கும் `எம்சி’!

எம்சி

கைகள், சீர்வரிசைப் பொருட்கள், மண்டபம், சாப்பாடு என காசைக்கொட்டி ஜமாய்த்துவிடலாம் திருமணத்தை. ஆனால், இரு வேறு குடும்பங்களின் வாழ்க்கையை இணைக்கும் அந்தப் புள்ளியில் உயிர்பெறும் உணர்வுகளையும் நினைவுகளையும் பத்திரப்படுத்துவது குறித்து பலரும் சிந்திப்பதில்லை. அதற்கான ஏற்பாடுதான் வெடிங் எம்சி (MC - Master of Ceremonies)!

எளிமையாகச் சொல்வதென்றால், திருமணத்தை சந்தோஷமாகவும், துள்ளலுடனும், உயிர்ப்புடனும், உல்லாச கேளிக்கைகளுடனும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்! ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் திருமணம் குறித்த கனவுகள் ஆயிரம் இருக்கும்... வருங்கால கணவன் கைகோத்து  மேடையில் நடனம் ஆடுவது தொடங்கி, தன்னோடு இத்தனை வருடங்கள் பயணித்த நண்பர்கள், உறவினர்களுக்கு எல்லோர் முன்னிலையும் நன்றி சொல்வதுவரை! அவற்றையெல்லாம் அவரிடம் கேட்டறிந்து, முகூர்த்தநாளில் அழகுற நிறைவேற்றிக் கொடுப்பது, இரு வீட்டினரை ஜாலியாக இணைக்கும் வகையிலான விளையாட்டுகளை நடத்துவது, என ஒரு திருமண நிகழ்வில் எந்தளவுக்கு உற்சாகம் கூட்டமுடியுமோ அதைச் செய்பவரே எம்சி.

கல்யாணத்தை  கலகலக்க வைக்கும் `எம்சி’!

‘‘கார்ப்பரேட் நிறுவனங்கள், பொது விழாக்களைப்போல இப்போது திருமணங்களிலும் எம்சி-க்கள் ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள்!’’ எனும் சென்னையைச் சேர்ந்த பிரபல புரொஃபஷனல் வெடிங் எம்சி, கிறிஸ்டபெல் பென்சனிடம் பேசினோம்.

‘‘இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐ.டி கம்பெனியில் ஐந்து வருடங்கள் வேலை. ஒருமுறை ஒரு எம்ப்ளாயி அவுட்டிங் சென்றிருந்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்த `எம்சி’ சில காரணங்களால் வர இயலாமல் போனது. சிறுவயதில் இருந்தே மேடைப்பிரியம் உள்ள நான், அன்று தானாக முன்வந்து மைக் பிடித்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அன்றிலிருந்து முழு வீச்சில் தொடங்கியதே இந்த அழகிய பயணம். கார்ப்பரேட் விழாக்களுக்கும் `எம்சி’யாக சென்றாலும் வெடிங் எம்சியிங்தான் நான் விரும்பிச் செய்வது!’’ என்றவர், வெடிங் எம்சி-யின் வேலை பற்றிச் சொன்னார்.

‘‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். வாழ்வின் முக்கியமான மைல்கல்லான திருமணநாளில், அந்த மணப்பெண்ணுக்கு ஒரு தோழியாக இருந்து அவரின் முகூர்த்த நாள் ஆசைகளை நிறைவேற்றுவது, மணமக்கள் பற்றிய பகிரப்படாத சில சுவாரஸ்யக் கதைகளை விளையாட்டு, நடனம் என செம ஜாலியாக வெளியேகொண்டு வருவது, மணமக்கள், இரு வீட்டினர், திருமண விருந்தினர்கள் என்று எல்லா தரப்புக்கும் சந்தோஷம் தரும் விதமான விஷயங்களைச் செய்வது, கூச்சத்தில் பேசிக்கொள்ளக்கூடத் தயங்கி நிற்கும் மணமக்களை மைக் பிடித்துப் பாடவைப்பது, ஆடவைப்பது வரை... இது சூப்பரான சவாலாக இருக்கும்’’ என்றவரிடம், ‘‘மணமக்களின் விருப்பம் ஓ.கே... ஆனால், அந்தக் குடும்பத்தினரிடம் இதற்கான ஒத்துழைப்பும் வரவேற்பும் எப்படி உள்ளது?’’ என்றோம்.

‘‘பொதுவாக, திருமணத்துக்கு முந்தைய நாள் மணமக்கள் தங்களின் நண்பர்களோடு ஒரு சிறு பார்ட்டி போல கொண்டாடுவார்கள். வடஇந்தியர்கள் இதனை ‘சங்கீத்’ என்பார்கள். நம் ஊரிலும் ‘சங்கீத்’ கொண்டாட இப்போது பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அது என்ன மாதிரியான நிகழ்ச்சி, அதை எப்படிக் கொண்டாடவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு எம்சி-யாக நாங்கள் அந்நிகழ்ச்சிக்கு முழு பிளானிங் செய்துதருவோம். கல்யாணத்துக்குப் பிறகு வீட்டில் யார் சமைப்பார்கள், இருவருக்கும் ஒருவரையொருவர் எவ்வளவு பிடிக்கும் போன்ற கேள்வி பதில் விளையாட்டுகள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவும். ஆரம்பத்தில், இந்தக் கேளிக்கைகளை எல்லாம் வீட்டுப் பெரியவர்கள், தாத்தா, பாட்டிகள் எப்படி அணுகுவார்கள், அனுமதி கொடுப்பார்கள் என்று நினைத்ததுண்டு. ஆனால், திருமண கலாட்டாக்களை அதிகம் ரசிப்பது அவர்கள்தான் என்பது இனிப்பான உண்மை! மொத்தக் குடும்பமும் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும்போது, நமக்கும் உற்சாகமாக இருக்கும்!’’ என்றவர், இந்தப் பொறுப்பில் இருக்கும் சவால்களையும் குறிப்பிட்டார்.

கல்யாணத்தை  கலகலக்க வைக்கும் `எம்சி’!

‘‘இது ரொம்பவும் சென்சிட்டிவ்வான வேலை. குறைந்த சிலமணி நேரங்களில் திருமணத்துக்கு வரும் பலதரப்பையும் பங்கேற்கவைக்கும் அவசரத்தில் யாரும் வருத்தப்படும்படி எதுவும் செய்துவிடக்கூடாது. பொதுவாகவே, ‘பொண்ணு வீட்டுல இப்படி சாப்பாடு போட்டுட்டாங்க’, ‘மாப்பிள்ளை வீடு இப்படி தட்டு அடுக்கிட்டாங்க’ என்று ஒரு சின்ன உரசல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். அப்படி ஒரு தருணத்தில், நாம் மேற்கொள்ளும் கேளிக்கை, கேலிகள் எல்லாம் இருவீட்டினரின் நெருக்கத்தை அதிகரிப்பதாகவே இருக்க வேண்டுமே தவிர, இடைவெளிக்குக் காரணமாகிவிடக்கூடாது. ஆனால், அவர்களைக் கையாளத் தெரிந்துவிட்டால், ஆனந்தக் கண்ணீரில் இருந்து ஓயாத சிரிப்பொலிவரை நிகழ்ச்சி ஹிட்தான்.

ஒருமுறை, அமெரிக்காவில் வாழும் இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்றின் திருமணத்தை சென்னையில் நடத்தினார்கள். நான் எம்சியிங் செய்து முடித்தபிறகு அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் என்னிடம் வந்து, ‘20 வருடம் கழித்து ஒன்று சேர்ந்த எங்கள் குடும்பம் மொத்தமும் கலகலவென இந்தக் கல்யாணத்தைக் கொண்டாடியதில், உங்கள் பங்கு நிறைய!’ என்று சொன்ன நன்றி, வாழ்வில் மறக்க முடியாதது!’’ என்பவரிடம், ‘‘இந்த `எம்சியிங்’குக்கு வருங் காலம் எப்படி இருக்கும்?’’ என்றோம்.

‘‘இப்போதெல்லாம் திருமணம் என்பது சாஸ்திரம் என்பதைத் தாண்டி, கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ‘வாழ்க்கையில ஒரு தடவை நடக்கிற திருமணத்தை ஆயுளுக்கும் மறக்காத சந்தோஷமா மாத்திடணும்!’ என்பது, இன்றைய மணமக்களின் விருப்பமாக வளர்ந்துவருகிறது. வரும் காலங்களில், அது இன்னும் வலுப்பெறும் என்பதால், அது தொடர்பான வேலைகளுக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. குறிப்பாக, வாய்ப்பேச்சில் கெட்டிக்கார இளைய சமுதாயத்தினர் தாராளமாக எம்சியிங் செய்ய முன்வரலாம்’’ என்றவர்,

‘‘காதல் திருமணம் செய்துகொண்டவள் நான். தனியாளாக ஒரு பெரும் நிகழ்ச்சியை எடுத்துச் செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எனக்கு அளிப்பது, என் குடும்பம்தான்!’’

- முகம் மலர்கிறார் கிறிஸ்டி!

- கோ.இராகவிஜயா