சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

காலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்!

சாரட் வண்டி

ராஜா காலத்தில் முடிசூட்டுதல் போன்ற அரசக் குடும்ப சுப நிகழ்வுகளில் குதிரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ‘ஜட்கா’ எனப்படும் குதிரை வண்டிகள் இந்தியாவில் மிகப் பிரபலமானது பிரிட்டிஷ் காலத்தில். பெரும்பாலும் கிழக்கு இந்திய நிறுவன அதிகாரிகள் பயணிக்கவே இவை தயாரிக்கப்பட்டன. பிரசித்தி பெற்ற ‘சிம்ப்சன்’ நிறுவனம் முதல் முதலாக அன்றைய மெட்ராஸில் காலடி வைத்தது, இதே குதிரை வண்டிகள் தயாரிக்கத்தான்.

காலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்!

இன்றைய வேகமான உலகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் குதிரை வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய் விட்டன.  ஆனாலும் கல்யாண வீடுகளிலும், சில அரசியல் ஊர்வலங்களிலும் தற்போதும் காணக்கிடைக்கின்றன. அந்தத் தேவைகளுக்காக குதிரைகளையும், சாரட்களையும் வெகு சிலர் வைத்திருக் கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தென்னவன். ‘தென்னவன் குதிரை லாயம்’ என்றால் வடசென்னையில் தெரியாத வர்கள் கிடையாது.

ரயில் நிலையத்துக்கு எதிரே அமைந் திருக்கும் தென்னவனின் லாயத்தைக் கடந்துபோகும்போது ஏதோ ஒரு பழைய திரைப்படத்துக்குள் நாம் நுழைந்துவிட்ட ஓர் உணர்வு ஏற்படுகிறது. 144 வருடங் களுக்கு முன்

காலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்!

தன் கொள்ளுத் தாத்தா தொப்ப பிள்ளை ஆரம்பித்த இந்தத் தொழிலை, தலைமுறைகள் தாண்டி நடத்தி வருகிறார் தென்னவன். 

‘‘கொள்ளுத் தாத்தா ஜட்கா வண்டி ஓட்டி வந்தார். என் தாத்தா காலத்திலேயே தெருக்கள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போக ஆரம்பிச்சது குதிரை வண்டிகள். பஸ்ஸும், காரும் பாய்ந்து போற இடத்துல குதிரைகளுக்கு இடமில்லாம போக, நான் என் பரம்பரைத் தொழிலை கொஞ்சம் மாத்தி யோசிச்சதுதான், இந்தக் குதிரை வண்டிகளை வாடகைக்கு விடும் தொழில். ஆரம்ப காலத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விட்டுட்டு இருந்தேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதானு பல நட்சத்திரங்கள் சவாரி செய்தது, என் குதிரை வண்டிகளில்தான். அதுக்கு அப்புறம், திருமணங்களுக்கு சாரட் வாடகைக்கு விட ஆரம்பிச்சேன். இப்போ படப்பிடிப்புகளுக்கு கொடுக்கிறதே இல்லை’’ என்பவர்,

‘‘பொதுவா ஜெயின், சீக்கியக் கல் யாணங்களில் குதிரை வண்டியிலதான் மாப்பிள்ளை வரணும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதால, ஆரம்பத்தில் அவங்களுக்கு தான் வாடகைக்கும் விட்டுட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் அவங்களைப் பார்த்து பல தொழிலதிபர்களும் தங்களோட வீட்டு விசேஷங்களுக்குச் சாரட் வைக்க என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு சென்னையில குதிரை வண்டினாலே, தென்னவன்தான் எனும் அளவுக்கு நிலைச்சிருக்கிறதுக்குக் காரணம், 100 வருடங்கள் கடந்த இந்தத் தொழிலின் பாரம்பர்யம்தான்!’’ எனும் தென்னவனிடம் 100 வயதான சாரட்கள்கூட இருக்கின்றன. அவற்றை நவீன யுகத்துக்கு ஏற்ப அலங்காரங்கள்செய்து ராஜாக்களின் தேர்போலவே வடிவமைத்துள்ளார். என்னதான் வண்டிகள் அழகாக இருந் தாலும், அதைக் கம்பீரத்துடன் இழுக்கும் குதிரைகள், தென்னவன் சாரட்களின் ஸ்பெஷல்.

காலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்!

‘‘இப்போ எங்கிட்ட 20 வண்டிகளும், 15 குதிரைகளும் இருக்கு. குதிரைங்க எல்லாமே கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கும் மேலா நம்மகிட்ட நிக்குதுங்க. ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை பராமரிப் புக்குச் செலவாகும். நல்லா பழக்கப்பட்ட ஆண் குதிரைகளை மட்டும் வண்டிக்குப் பூட்டுவேன். பட்டாசு, ஆரவாரத்துக்கு எல்லாம் பயப்புடாம நிக்கணும்ல? சிலர் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை யானையை மாலையணிவிக்கச் செய்து வரவேற்கவும் எங்கிட்ட வருவாங்க. என் நண்பர்கள் மூலமா, அந்த யானைகளையும் ஏற்பாடு செஞ்சு தருவேன். அதே மாதிரி பேண்டு வாத்தியம், சிப்பாய்களுக்கும் என்னை அணுகலாம். ஏற்பாடு செஞ்சு தந்துடுவேன். சில வருஷங்களுக்கு முன்னால சென்னையில நடந்த அம்பானி - பிர்லா குடும்பக் கல்யாணத்துக்கு குதிரை வண்டிகள், பேண்டு வாத்தியம், சிப்பாய்கள்னு எல்லா ஏற்பாடு செஞ்சு தந்தது நான்தான்’’ என்ற தென்னவன், இரண்டு குதிரைகள் கொண்ட சாரட்டுக்கு 4,000 - 6,000 ரூபாய் வரை இடத்துக்குத் தகுந்தபடி வாடகை நிர்ணயிக்கப்படும் என்கிறார்.  

‘‘சைதாப்பேட்டை, எழும்பூர் பகுதிகள்ல திருமணம்னா, குதிரைகளை நடந்தே கூட்டிட்டுப் போயிடுவோம். தூரம்னா, லாரியிலதான் ஏத்திட்டுப் போகணும். அதனாலதான் தூரத்தைப் பொறுத்து வாடகை மாறுது. வெளிமாநிலங்களுக்கும் நம்ம குதிரைங்க, சாரட் எல்லாம் போகுது. பொதுவா விசேஷத்துக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே முன்பதிவு செஞ்சாதான், குதிரைகள், சாரட் வண்டிகளை ஏற்பாடு செய்துதர முடியும்’’ என்று தன் பிஸி பிசி னஸ் சொல்லி ஆச்சர்யப்பட வைத்தவர்,

‘‘எங்களைப் பார்த்து, சென்னையில இப்போ பலர் குதிரை, சாரட் வாடகைக்கு விட ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, எங்க மேல இருக்கிற நம்பிக்கையாலும், பாரம்பர்யத்தாலும் எங்களைத் தேடி வர்றவங்க வந்துட்டேதான் இருக்காங்க. இந்தக் குதிரைங்களை நம்பிதான் என் பிழைப்பு ஓடுது.

குதிரை வண்டி ஓடுற வரைக்கும் என் வண்டியும் ஓடும்!’’ என்கிறார் தென்னவன் பெரிய சிரிப்புடன்!

- ஐ.மா.கிருத்திகா படம்: க.பாலாஜி