சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

பெருமைமிகு பொட்டு..!

திலகம்

பொட்டு... மங்கலத்துடன் தொடர்புடையது... திருமணங்களில் அதிக முக்கியத்துவம் பெறுவது. அத்தகைய நெற்றித் திலகம் குறித்த பாரம்பர்ய மற்றும் கலாசார விஷயங்களை நிறையவே அறிந்தவர், சென்னையைச் சேர்ந்த, மஞ்சுளா பரத். Desi fiesta என்ற பிளாக்கில் எழுதிவரும் பிளாக்கரான மஞ்சுளா பரத், பொட்டு பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்கிறார்...

பொட்டின் பாரம்பர்யம்!

``நமது முன்னோர்களால் அழகியலின் வெளிப்பாடாக, மங்கலத்தின் குறியீடாக உருவாக்கப்பட்டது, நெற்றித் திலகம். பெண்களுக்கு இன்றியமையாததாக பொட்டு வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, திருமணமான பெண்கள் அதை அடையாளப்படுத்த இரண்டு நெற்றிக்கு நடுவிலும், வகிடிலும் குங்குமம் இடுவது கட்டாய வழக்கம். இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் பெற்ற பொட்டுக்குப்பின், அறிவியல் மற்றும் ஆன்மிகக் காரணங்களும் உண்டு.

பெருமைமிகு  பொட்டு..!

நமக்கு இரண்டு கண்கள் தாண்டி மூன்றாவது கண் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதேபோல, ஆறாம் அறிவு குறித்தும் பேசப்படுகிறது. மூன்றாம் கண், ஆறாவது அறிவு எல்லாம் மையம்கொண்டிருக்கும் இடமாக, இரண்டு நெற்றிக்கு இடையுள்ள பகுதி சுட்டப்படுகிறது. அதனால்தான் அந்த மூன்றாம் கண்ணை, ஆறாம் அறிவை தீயவையில் இருந்து விலக்கி நேர்கோட்டில் செலுத்தும் விதமாக, அங்கு பொட்டு வைக்கப்படுகிறது. இது சுயபுரிதலின் மூலம் வெற்றிக்கு இட்டுச்செல்லும் காரணியாக நம்பப்படுகிறது.

இன்னொருபுறம், குங்குமம் மன அழுத்தத்தைக் குறைப்பது, திறனளவை அதிகரிப்பது, எதிர்மறை சக்தியில் இருந்து பாதுகாப்பது போன்ற மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.

16 அழகுப் பொருட்களில் பொட்டு!

பொட்டு என்பது, டிக்கா, திலக், குங்குமம், சிந்தூர், டீப் என்று தேசம் முழுக்கப் பல பெயர்களால் அழைப்படுகிறது. பொட்டின் அடிப்படை வண்ணம் மற்றும் வடிவம், சிவப்பு வட்டம். முந்தைய காலத்தில் சீரான வடிவத்துக்காக, நாணயத்தில் ஒட்டும்தன்மையுள்ள திரவத்தை தடவி, அதனை குங்குமத்தில் அழுத்தி, நெற்றியில் அழகு வட்டப் பொட்டாகச் சூடிக்கொண்டார்கள் பெண்கள். வடஇந்தியாவில், மணமகளை அழகுபடுத்தும் 16 பொருட்களை ‘சோலா சிங்கர்’ என்பார்கள். நெத்திச்சுட்டி, கண்மை, காதணி, மூக்குத்தி, வளையல், மருதாணி, கைப்பட்டை, ஒட்டியாணம், பூ, கொலுசு, மெட்டி, நறுமணப்பொருள் உள்ளிட்ட அந்த 16 பொருட்களில், பொட்டுக்குத் தனிச்சிறப்புண்டு.

பெருமைமிகு  பொட்டு..!
பெருமைமிகு  பொட்டு..!

ஆண்களுக்கும் திலக்!

வடஇந்தியாவில், திருமணமான பெண்கள் விரும்பி அணிவது சிவப்பு வண்ணப் பொட்டைதான். பெண்கள் மட்டும் அல்லாமல், அங்கு ஆண்களும் ‘டிக்கா’, ‘திலக்’ என்று அழைக்கப்படும் பொட்டுவைத்துக்கொள்வது வழக்கம். அது வெற்றிக் குறியீடாகக் கொண்டாடப்படும். தீபாவளி, ராக்கி, வீட்டில் நடக்கும் பூஜை, விழாக்களில் எல்லாம், வடஇந்திய ஆண்கள் தவறாமல் ‘திலக்’ இட்டுக்கொள்வார்கள். 

பெருமைமிகு  பொட்டு..!

மகாராஷ்ட்ராவின் சந்திர பொட்டு!

மஹாராஷ்ட்ராவில் பொட்டை ‘சந்திரக்கோர்’ என்பார்கள்... சந்திரப்பொட்டு. அதாவது பிறை வடிவில், கீழே ஓர் சின்னப்புள்ளியுடன் இருக்கும் பொட்டு. அவர்களின் பாரம்பர்ய உடையான ஒன்பது முழம் புடவையை அணியும்போது, தவறாமல் சந்திரக்கோர் அணிவது அவர்களின் வழக்கம். விழாக்காலங்களில் சந்திரக்கோர் இட்டுக்கொள்வதே அதன் நிறைவைத் தரும் அவர்களுக்கு!
பண்டைய மஹாராஷ்டிராவில் பெண்களைப் போலவே ஆண்களும் சந்திரக்கோர் வைப்பது வழக்கமாக இருந்தது. மராட்டிய மன்னர் சிவாஜியில் இருந்து, அந்த மண்ணின் துறவிகள் வரை சந்திரக்கோர் இட்டிருந்தனர். முன்பு குங்குமத்தாலேயே வரையப்பட்ட இந்தப் பிறை பொட்டு, இப்போது ரெடிமேடு ஸ்டிக்கராகக் கிடைக்கிறது.

வங்காள சந்தனப்பொட்டு!

வங்காளப் பாரம்பர்யப் பொட்டு, ‘சந்தன்’. அதாவது, சந்தனத்தால் வரையப்படும் பொட்டு. வங்காளத் திருமணங்களில் இது முக்கிய அம்சம். புருவங்களுக்கு இடையில் மட்டும் அல்லாது, புருவங்களைச் சுற்றி, கன்னம் வரை குங்குமம் மற்றும் சந்தனத்தால் வரையப்படும் பொட்டு அது. இதை, மணமகளின் முக அமைப்புக்கு ஏற்ப வரைந்துகொள்கிறார்கள். உதாரணமாக, பெரிய முகம் என்றால் கன்னம் முழுவதும் வரைந்து முகவட்டத்தைக் குறைத்துக்காட்டலாம். சின்ன முகத்துக்கு கன்னங்கள் தவிர்த்து புருவங்களில் மட்டும் வரைந்து, முகத்தைப் பெரிதாகக் காட்டலாம்.

திருமணம் தவிர்த்து மற்ற விழாக்களில், சந்தன் எளிமையாக, சிவப்பு, வெள்ளை புள்ளிகளாக வரையப்படுகிறது. இப்போது சிவப்பு மட்டுமல்லாது, மற்ற நிறங்களிலும் மணமகள்கள் சந்தன் இட்டுக்கொள்கிறார்கள். வங்காளத்தில் திருமணமான பெண்கள் பொதுவாக விரும்புவது, சிவப்பு வண்ண ஒற்றைப் பெரிய பொட்டு.

ராஜஸ்தான் ‘டிக்கோ’!

ராஜஸ்தானின் பாரம்பர்யப் பொட்டு, ‘டிக்கோ’. வட்ட வடிவ அல்லது நீள வடிவிலான இந்தப் பொட்டை, திருமணங்களில் மணமகள் மட்டும் அல்லாமல் மணமகனும் அணிவது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. ராஜஸ்தான் மாப்பிள்ளை, பொட்டு மட்டுமல்ல... கையிலும், காலிலும் மருதாணியும் அணிந்துகொள்ள வேண்டும். அதேபோல ஜெயின் கலாசாரத்தில் கோயில்
களில் பிரசாதமாக தென்னிந் தியாவைப்போல குங்குமமோ, விபூதியோ தரப்படுவதில்லை. சந்தனம் தரப்படும்.
 
பொட்டு... அன்றும், இன்றும்!

நம் முன்னோர் குங்குமம், கண்மை போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்தனர். குங்குமம் தயாரிக்கத் தேவை, சுண்ணாம்பு, மஞ்சள், தண்ணீர். இதைத் தவிர சந்தனமும் சேர்த்துக்கொள்ளலாம். இப்போதும் மூலிகைவகை குங்குமங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இப்போதும் சிலர் வீட்டிலேயே மை தயார் செய்துகொள் கிறார்கள். குழந்தைக்கு நெற்றி யிலும் கன்னத்திலும் இடப்படும் அந்த வட்ட மைப்பொட்டு, குழந்தையை  திருஷ்டியில் இருந்து காக்கும் என்பது நம்பிக்கை.

இன்னொரு பக்கம், இன்று செயற்கை குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக, மணப்பெண்களுக்கான பிரத்யேக பிந்திகள், செட்டாகக் கிடைக்கிறது. இதை ‘பொட்டு நகை’ என்றும் அழைக்கும் அளவுக்கு, அவை வடிவம், விலையில் உயர்ந்ததாக இருக்கின்றன. இந்த பிந்தி செட்களில் நெற்றிக்கு மட்டுமல்லாமல், கண்களின் ஓரம், புருவங்களின் முடிவு, கையில் மருதாணியை அலங்கரிக்க என்று பலதரப்பட்ட பொட்டுகள் உள்ளன. பெல்லி நடனம் ஆடுபவர்கள், ஆலங்காரத்துக்கு இடுப்பில் பொட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்.

பிந்தி பேக்கஜ், பிந்தி டிசைனர்!

வங்காள ‘சந்தன்’ போல, பிந்திக்கு அதிக முக்கியத்துவம் உள்ள திருமணங்களில், மெஹந்தியுடன் பிந்தியையும் பேக்கேஜ் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். மெஹந்தி போட பிரத்யேக டிசைனர்கள் உள்ளதுபோல, பொட்டுவைப்பதற்கென்றே பிரத்யேக பிந்தி டிசைனர்களும் இருக்கிறார்கள்!’’

பொட்டு... டிப்ஸ்!

 பெரிய நெற்றி, பெரிய கன்னம் உள்ளவர்களுக்கு நடுத்தர அளவிலான வட்ட வடிவப்பொட்டுகள் பொருத்தமாக இருக்கும்.

 நீள முகமுள்ளவர்களை நீளப்பொட்டு இன்னும் நீளமாகக் காட்டும் என்பதால், அவர்களுக்கு வட்டப்பொட்டே சிறந்தது.

 வட்டமுகம் கொண்டவர் களுக்கு நீளப்பொட்டு அம்சமாக இருக்கும்.

சென்னை, சௌகார்பேட்டை யில் சில கடைகளில் எடுக்கப்பட்ட பிந்தி ஸ்டிக்கர்ஸ் இங்கே... இவை ஆண்கள், பெண்கள் இருவருக்குமானது. பெண்கள் நெற்றியில் பொட்டுவைத்துக் கொள்வதுபோல, ஆண்கள் இவற்றை ஷெர்வானியின் மேல் ஒட்டிக்கொள்கிறார்கள்.

45 ரூபாயில் இருந்து சில ஆயிரங்கள் வரை பொட்டுக்கள் இங்கு கிடைக்கின்றன. இவை சருமத்துக்குப் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக உத்தரவாதம் தருகிறார்கள்.

- வே.கிருஷ்ணவேணி, வெ.மோ.ரமணி

படங்கள்: தி.ஹரிஹரன்