Published:Updated:

''ஹோலி பெயரில் விந்தணு பலூன் வீசியவர்களை விரட்டுங்கள்!'' - ட்விட்டரில் கொந்தளித்த பெண்கள்

''ஹோலி பெயரில் விந்தணு பலூன் வீசியவர்களை விரட்டுங்கள்!'' - ட்விட்டரில் கொந்தளித்த பெண்கள்
''ஹோலி பெயரில் விந்தணு பலூன் வீசியவர்களை விரட்டுங்கள்!'' - ட்விட்டரில் கொந்தளித்த பெண்கள்

''ஹோலி பெயரில் விந்தணு பலூன் வீசியவர்களை விரட்டுங்கள்!'' - ட்விட்டரில் கொந்தளித்த பெண்கள்

 வாழ்க்கைப் பயணத்தில் ஆணும் பெண்ணும் சக பயணிகளே. இதில், ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக்கொண்டே இருப்பதும், அத்துமீறிக்கொண்டே இருப்பதும் பயணத்துக்கு ஆரோக்கியமானதல்ல; பெரும் விபத்தையே உண்டாக்கும். ஆனால், இந்த அத்துமீறல்களைக் காலம் காலமாக சில ஆண்கள் செய்துகொண்டே வருகிறார்கள். இதுவரை, ஹோலி கொண்டாடும்போது பெண்களை உரசுவது, கிண்டலடிப்பது என்றிருந்தவர்கள் வக்கிரத்தின் புதிய பரிமாணத்துக்குத் தற்போது சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்! பலூன்களில் வண்ணப்பொடிகள் கலக்கிய தண்ணீருக்குப் பதிலாக, விந்தணுக்களை நிரப்பி, பெண்கள்மீது வீசியிருக்கிறார்கள். நிர்பயாவைக் கொன்ற அதே தலைநகரில்தான் இந்தக் கொடுமையும் நடந்திருக்கிறது. 

டெல்லியில் உள்ளது, லேடி ஶ்ரீராம் மகளிர் கல்லூரி. ஹோலிப் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, இங்கு படிக்கும் பெண்கள்மீது, கல்லூரியின் அருகே வசிக்கும் சில ஆண்கள், தண்ணீர் நிரம்பிய பலூன்களைத் தொடர்ந்து எறிந்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வக்கிரத்தின் உச்சமாக, பலூன்களில் விந்தணுக்களை நிரப்பி வீசுவதில் முடிந்திருக்கிறது. இது, மாணவிகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும் மன வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து, அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தன் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். (பார்க்க மேலே உள்ள படம்)

''நானும் என் தோழியும் அமர் காலனி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, மாலை 5 மணி அளவில் ரிக்‌ஷாவில் காலேஜ் ஹாஸ்டலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, என்மீது தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று வீசப்பட்டது. அது என் இடுப்பில் விழுந்து உடைந்தது. அதற்குள்ளிருந்து ஒரு திரவம் என் டாப் மீதும், என் பிளாக் கலர் லெக்கின் மீதும் வழிந்து ஓடியது. இப்படி நடந்தது குறித்து நான் அதிர்ந்துபோனேன். ஆனால், அதை விந்தணு என்று எப்படி நினைத்திருக்க முடியும்? இப்படி ஒரு சம்பவம் முன்பு நடந்ததில்லையே'' என்று தன் முகநூலில் பதிவிட, விஷயம் காட்டுத் தீயாகப் பரவியது. 

உடனே  சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரச்சொல்லிக் கேட்டிருப்பதாக கல்லூரி நோட்டீஸ் போர்டில் ஒட்டியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில், பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், 'இது ஹோலிப் பண்டிகை சமயங்களில் மட்டும் நடைபெறவில்லை. வருடம் முழுக்கவே இந்த அசிங்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது' என்று கொதித்துள்ளனர். 

ஐஸ்வர்யா என்பவர், 'என் கஸினின் தோழி ஒருவர், லேடி ஶ்ரீராம் கல்லூரியில்தான் படிக்கிறார். அவரும் ஹோலி வாழ்த்துகளுடன் விந்தணு நிரம்பிய பலூனால் தாக்கப்பட்டிருக்கிறார். பண்டிகைக் கொண்டாட்டங்கள், எந்த வகையில் பெண்களிடம் அத்துமீற இவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது' என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

சான்யா என்பவர், 'பெண்கள்மீது இப்படி பலூன் எரிபவர்களை நாட்டைவிட்டே தூக்கி வீச வேண்டும்' என்று ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார். 

சேகர் குப்தா என்கிற எழுத்தாளர், 'விந்தணுக்கள் நிரம்பிய பலூனாகட்டும், வேறு என்னவாகவும் இருக்கட்டும், ஹோலிப் பண்டிகை என்பது பெண்களிடம் அத்துமீற ஆண்களுக்குக் கிடைத்த ஃப்ரீ பாஸா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சாக்‌ஷி என்பவர், 'பண்டிகைகள் எல்லாம் பெண்களிடம் பாலியில் அத்துமீறல் செய்ய உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பா?' என்று ஆவேசப்பட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, டெல்லி போலீஸ் ஹெட்குவாட்டர்ஸ் முன்பு கூடிய பெண்கள், வக்கிரம் பிடித்த அந்த ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். சீக்கிரம் தீர்வு கிடைக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு