Published:Updated:

”இதுதான் ஹோலியா?!” - குர்மெஹர் கவுரின் சில கேள்விகள்

”இதுதான் ஹோலியா?!” - குர்மெஹர் கவுரின் சில கேள்விகள்
”இதுதான் ஹோலியா?!” - குர்மெஹர் கவுரின் சில கேள்விகள்

டெல்லி ஸ்ரீராம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தன் மீது திரவம் நிரப்பப்பட்ட பலூன் வீசப்பட்டதும் அதிர்ந்த அவர், அதை உன்னிப்பாகக் கவனித்ததில், அது விந்து (செமன்) எனத் தெரியவந்ததில் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார். வண்ணக்கலவையும் மகிழ்ச்சியும் என்பதாக மட்டுமே நம்பப்படும் ஹோலிப் பண்டிகை, உண்மையில் பல பெண்களுக்கு மகிழ்ச்சியாக முடிவதில்லை என்பதை #buranamanoHolihai (தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இது ஹோலியா?) என்னும் ஹேஷ்டேக் வழியாக வெளிப்படுத்திவருகிறார்கள் டெல்லி  இளம்பெண்கள். பாலியல் சீண்டல்களுக்கும் வன்புணர்வுக்கும் உள்ளான பெண்கள், சில நாள்களுக்கு முன்னர் #Metoo ஹேஷ்டேகில் உடைத்துப் பேசியதைப்போல...

``நான் படிக்கும் கல்லூரி, என்னைப் பொறுத்தவரை பாதுகாப்பான சொர்க்கம். என் குரலை சுதந்திரமாக வெளிப்படுத்தும் எனது இடம் அது. கடந்த ஒரு வருடமாக நான் அமைதி குலையாமல் இருந்ததற்கு என் கல்லூரிதான் காரணம். டெல்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில், மாணவிகள் எதையும் செய்யும் சுதந்திரமுண்டு. ஆனால், கல்லூரிக் கதவுகளுக்கு வெளியே எவ்வளவு போராடினாலும் பாதுகாப்பான சூழலை அமைப்பது என்பது நடக்காத ஒன்று.

சிறிய வயதில் நானும் நண்பர்களும் ஹோலிப் பண்டிகை குறித்து மகிழ்ச்சியான கட்டுரைகளை எழுதுவோம். ஹோலி, வண்ணங்களையும் மகிழ்ச்சியையும் தரும் பண்டிகை என்பதுதான் எங்கள் மூளையில் பதிந்த விஷயம். ஆனால், 12 வயதாகும் வரைதான் அந்த எண்ணமெல்லாம்.  அதன் பிறகு வந்த ஹோலி விழாக்களில், எனது உடல் சீண்டலுக்குரிய பண்டமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வருடமும் `எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது’ என்ற பட்டியல் அதிகரித்தது. 16 வயதானதும் பொதுவான ஹோலி விழாக்களில் பங்கேற்காமல், வீட்டிலேயே தனியாக ஹோலி கொண்டாடிக்கொள்ளலாம் என்று நானும் என் குடும்பத்தினரும் முடிவுசெய்துவிட்டோம்.

இந்த வருடம் என் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் மீது, விந்து கலந்த திரவத்தைக்கொண்ட பலூனை வீசியிருக்கிறார்கள். சோஷியல் மீடியாக்களில் வைரலான அந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜீசஸ்&மேரி கல்லூரியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மேலும் ஒருவரும் இதே புகாரைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஹோலிப் பண்டிகை தருணத்தில், அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக இங்கு பலரும் குரல்கொடுக்கிறார்கள். எனது கல்லூரியில் உடனடியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன்,  பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகை பாதுகாப்பும் ஆதரவும் இந்த வட்டத்துக்குள் மட்டும்தான். வெளியே என்ன நடக்கிறது தெரியுமா?

ஹோலிப் பண்டிகையை, பெண்களை அவமதிப்பதற்கான இலவச டிக்கெட்டைப்போல பயன்படுத்தியவர்களைப் பற்றி, சமூக வலைதளத்தில் பதிந்த என் கல்லூரி மாணவிக்குக் கிடைத்த பெயர்கள் என்ன தெரியுமா? அந்தப் பெண்ணை இழிவுப்படுத்தி, கேள்விக்குள்ளாக்கி, கேலிசெய்து வந்த எதிர் பதிவுகளுக்குப் பிறகு, அவள் இதைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். `விந்து கலந்த திரவத்தை பலூனில் வைத்து வீசினார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?, பலூனின் கொள்ளளவுக்கு விந்தை நிரப்புவது சாத்தியமா?, சாதம் வடித்த நீரை உடையில் தடவிக்கொண்டு ஏமாற்றுகிறாயா?' - சமூக வலைதளங்களில் இருக்கும் மனிதர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் இவை.

நீங்கள் எழுப்பவேண்டிய கேள்விகள் இவைதானா? விந்து திரவமோ, சாதம் வடித்த நீரோ... எந்தத் தொடர்புமற்ற ஒரு பெண்ணிடமும், அவரது ஒப்புதல் இல்லாமல் பலூனை வீசியெறிந்து அவமானப்படுத்தும் கயமையை ஏன் கேள்வி கேட்பதில்லை? தீமையை அழிப்பதற்காகக் கொண்டாடப்படும் விழா, பெண் வெறுப்பாக, பெண்ணுடல் மீதான வன்முறையாக மாறுவது ஏன்?  பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு வன்முறைகளில் ஒன்றான இந்தச் சம்பவத்துக்கு, ஒரு சாக்கு இருக்கிறது. `தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்... இது ஹோலி’ என்பதுதான் அந்தச் சாக்கு. இதுதான் ஹோலியா?'' - பிரின்ட் இணைய இதழில் வெளியாகியிருக்கும் எழுத்தாளர் (Small Acts of freedom), மாணவச் செயற்பாட்டாளர் குர்மெஹர் கவுரின் கேள்விகள் இவை.

கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? இந்தக் கேள்விகளை, உங்களுக்குள் மற்றொருமுறை கேட்டுக்கொள்ளுங்கள்.

குர்மெஹர் கவுரை நினைவிருக்கிறதா? தன்னுடைய இரண்டு வயதில் கார்கில் போரில் தன் தந்தையை இழந்தவர் குர்மெஹர். போரில் அவரின் தந்தை கொல்லப்பட்டதால், இஸ்லாமியர்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்திலும், அவர்களைப் பழிவாங்கும் உணர்வோடும் வளர்ந்திருக்கிறார். இஸ்லாமிய வெறுப்பின் உச்சக்கட்டமாக, ஆறு வயதாகும்போது பர்தா அணிந்த பெண்ணைக்  கத்தியால் குத்த முயன்றிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்த அவருடைய தாய், குர்மெஹரின் கண்ணோட்டத்தைப் படிப்படியாக மாற்றியிருக்கிறார். காலப்போக்கில் தன் தந்தையின் மரணத்துக்குக் காரணம் பாகிஸ்தான் அல்ல... போர்தான் என்பதை உணர்ந்திருக்கிறார். இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு ஜெர்மனியும் பிரான்ஸும் நட்பு பாராட்டிவருவதுபோல, கடந்தகாலக் கசப்புகளை மறந்து ஜப்பானும் அமெரிக்காவும் நல்லுறவு பேணுகையில்... இந்தியாவும் பாகிஸ்தானும் மாற முடியும் என உறுதியாக நம்பி வீடியோ வெளியிட்டவர். குர்மெஹர் தன் தந்தையை இழந்ததைப்போல, வேறு எவரும் இழந்துவிடக் கூடாது என்கிற அன்பு அழைப்பாகவே இருந்தது அந்த #ProfileForPeace வீடியோ பதிவு.