Published:Updated:

வலை யில் சிக்க வைத்த வக்கிர கணவன்!

வலை யில் சிக்க வைத்த வக்கிர கணவன்!

கூடவே ஒரு குற்றவாளி!

வலை யில்  சிக்க வைத்த வக்கிர கணவன்!

பெண்களின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்தான், அவர்களை சைபர் வில்லங்கங்களில் மாட்டிவிடும் வில்லன்கள் என்பதற்கு உதாரணம் இந்த வழக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அழகான, இளமையான பெண் டாக்டர் அவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒரே மகளுடன் தனியாக வசிக்கிறார். நோயாளிகளின் அவசரத் தேவைகளை மனதில் வைத்து, இரவு நெடு நேரமானாலும் தனக்கு வரும் செல்போன் அழைப்புகளில் பேசத் தவறுவது இல்லை.

அன்றும் அப்படித்தான்... லேட் நைட்டில் வந்த அழைப்பை அட்டெண்ட் செய்தவருக்கு, அதிர்ச்சி. ''ஹலோ நிஷாந்தினியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)? எவ்ளோ பணம்னாலும் தர்றேன். இன்னிக்கு நைட் என்கூட தங்க முடியுமா..?'' என்ற வார்த்தைகளைக் கேட்ட டாக்டர், விக்கித்துப் போய் இணைப்பைத் துண்டித்து விட்டார். தொடர்ந்த நாட்களில் பகல், இரவு என அவரைத் துரத்த ஆரம்பித்தன இதுபோன்ற வக்கிர அழைப்புகள். ஒரு கட்டத்துக்கு மேல் சகிக்க முடியாமல், எங்களிடம் வந்தார்.

##~##

''போலீஸ்கிட்ட போனா, விஷயம் வெளியில பரவிடும். என்ன பண்றதுனே தெரியல. மொபைல் நம்பரை மாத்திடறதுதான் பிரச்னை இல்லாத தீர்வுனு எனக்குத் தோணுது. எதுக்கும் உங்ககிட்ட ஆலோசனை கேட்டுக்கலாம்னுதான் வந்தேன்...'' என்றார் மிரண்ட கண்களுடன். ''வர்றது எல்லாம் ஏதோ ராங் கால்ஸ் இல்ல. உங்க பெயரைக் குறிப்பிட்டுப் பேசறாங்க. அதனால அவங்க புது நம்பர்லயும் உங்களைத் தொந்தரவு பண்ணினா..? கூடவே, இந்த வக்கிரத்தனம் பண்றவங்க யாருனு தெரிய வேண்டாமா..?'' என்று எடுத்துச் சொல்லி, எங்கள் விசாரணைக்கு சம்மதிக்க வைத்தோம்.

அவருடைய செல்போனில் வந்த அத்தனை அழைப்புகளையும் கண்காணித்தோம். ஒரு நாளில் கிட்டத்தட்ட 25 ஆபாச அழைப்புகள். அனைத்துமே வேறு வேறு எண்கள், மாறுபட்ட குரல்கள், நபர்கள். அந்த போனின் அழைப்புகளை எங்கள் பெண் ஊழியர் ஒருவரை அட்டெண்ட் செய்ய வைத்தோம். அழைக்கிறவர்களைத் திட்டாமல், ''என் மொபைல் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது..?'' என்று நிதானமாகக் கேட்க வைத்தோம். ஒரு சிலர் நண்பர்கள் கொடுத்ததாகவும், சிலர் ''உங்க விளம்பரத்தை வெப்சைட்ல பார்த்தேன்'' என்றும், வெப்சைட் அட்ரஸையும் கூறினார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட அந்த வெப்சைட்டைத் திறந்தால்... ஏக அதிர்ச்சி! ''ஒரு இரவுக்கு 25 ஆயிரம் ரூபாய்... அணுகவும்'' என்று அந்த பெண் டாக்டரின் புகைப்படத்துடன் மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. ''ஐயோ... இதென்ன கொடுமை? இதைச் செஞ்சது யாரு..?'' என்று அழுகையும் ஆத்திரமும் பொங்கியது அவருக்கு. எந்தவொரு வெப்சைட்டிலும் விஷயங்களைப் பதிவேற்றம் செய்யும்போது, அது எந்த கணினியிலிருந்து பதிவு செய்யப்பட்டுஇருக்கிறதோ, அதன் அடையாளமான ஐ.பி. (மி.றி.) நம்பரும் பதிவாகிவிடும். அதை வைத்து குற்றவாளியை நெருங்கிவிடலாம். வெளிநாட்டிலிருந்து இயங்கும் அந்த வெப்சைட்டின் உரிமையாளருக்கு நிலைமையை விளக்கி, சம்பந்தபட்ட கணினியின் ஐ.பி. நம்பரைப் பெற்றோம். அந்தக் கணினி இருந்த இடம்... சென்னையில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனை!

''உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் அங்க வேலை பார்க்கறாங்களா..?'' என்ற எங்களிடம், ''என் கணவர் இங்கதான் பிராக்டீஸ் பண்றார்'' என்றார். ''அப்போ... உங்க கணவர் ஏன் குற்றவாளியா இருக்கக் கூடாது..?'' என்ற எங்களை அவசரமாக மறுத்ததுடன், ''எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கறது உண்மை. ஆனா, சொந்த மனைவியையே 'விபச்சாரி’னு நெட்ல போடற அளவுக்கு அவர் மோசமானவர் இல்ல...'' என்றார் கண்கள் கசிய.

அவர் கணவர்தான் குற்றவாளி என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டதால், அவரிடம் ஆதாரத்துடன் நிரூபித்தோம். உடைந்து அழுதார். ''கோர்ட்ல விவாகரத்து வழக்கு போட் டிருக்கார். ஆனா, அவர்கூட சேர்ந்து வாழ விரும்புறேன்னு கோர்ட்ல சொன்னதால, வழக்கு நிலுவையில இருக்கு. ஆனா, அவரோ இன்னொரு பெண்ணோட தொடர்புல இருக்கறார். அவளைத் திருமணம் செய்றதுக்கு நான் தடையா இருக்கறதால, பழி வாங்கறதுக்காக இப்படி ஒரு ஈனக் காரியம் பண்ணியிருக்கார்'' என்றார் மனது உடைந்து.

''போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணலாம்...'' என்று நாங்கள் அழைக்க, ''என் கணவர் இவ்வளவு கீழ்த்தனமானவர்னு வெளி உலகத்துக்குக் காட்டினா, அது என் மகளோட எதிர்காலத்தைப் பாதிக்கும். எனக்கு வில்லனா இருந்தாலும், என் பொண்ணுக்கு அவர்தான் அப்பா. அவர் என்கிட்ட எதிர்பார்க்கறது விவாகரத்துதானே? அதுக்கு சம்மதிச்சு கையெழுத்துப் போட்டுடறேன். அவர் பண்ண தப்புக்கு ஆண்டவன் அவருக்குத் தண்டனை கொடுக்கட்டும்!'' என்று பரிதாபமாக சொல்லி அந்த விஷயத்தை அத்தோடு முடித்துக் கொண்டவர், தன்னுடைய செல்போன் எண்ணை மாற்றிவிட்டார்.

பெரும்பாலான இளம் பெண்களுக்கு உடன் படிக்கும் ஆண் நண்பர்கள், ஒருதலைக் காதலால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர்கள் அருகில் இருக்கும் ஆண்களேதான், பழிக்குப் பழி வாங்குவதற்காக இப்படி சைபர் வில்லன்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இது இப்படி என்றால், புகைப்படங்களை ஒட்டி வெட்டும் 'மார்ஃபிங்’ மூலம் பெண்களுக்கு வரும் பிரச்னைகள்..?

- திகில் பரவும்...

இர.வரதராஜன்
ஓவியம்: அரஸ்