Published:Updated:

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

''ஆயிரம்தான் இருந்தாலும், மண் பானையில சமைக்கிற ருசி வருமா?’'

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பாட்டி, அம்மா காலத்தில் இருந்த மண்பாண்டங்களையும் காலத்தின் கைகளில் தின்னக் கொடுத்துவிட்டு... எவர்சில்வர், இண்டோலியம், நான்ஸ்டிக், 'மைக்ரோவேவ் அவன்’ என வாயில் நுழையாத பெயர்களில் வரும் பாத்திரங்கள் மற்றும் கருவிகளில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இப்படித்தான் பலரும் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்கள்.

இவர்களில் பலரும், அட்லீஸ்ட் பொங்கலுக்காவது மண்பானை வாங்கிவிடுகிறார்கள். அதற்குக் காரணம்... மண் மணம் என்பது நம்முடைய உயிரோடும் உடலோடும் கலந்த ஒன்று என்பதுதான்! இதுதான், திண்டுக்கல் பகுதியில் உள்ள அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களை, 'சாலைப்புதூர் மண்பானை ஹோட்டல்’ சுவைக்கு அடிமை ஆக்கி வைத்திருக்கிறது!

திண்டுக்கல்லிருந்து வத்தலகுண்டு வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபத்தைந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது, சாலைப்புதூர். பஸ் ஸ்டாப்பிங் அருகில் ஒதுக்குப்புறமாக இருக்கிறது மண்பானை ஹோட்டல். வத்தலக்குண்டு, பெரியகுளம் பகுதிகளுக்கு ஏதாவது வேலையாகச் செல்பவர்களின் வண்டிகள், 'சட்டிச் சோறு சாப்பிட்டு போகலாம்' என்றபடி மதிய உணவுக்கு இங்கே அனிச்சையாக 'ஹால்ட்’ ஆகிவிடும்! அந்தளவுக்கு பிரபலம் அந்த ஹோட்டலின் மட்டன் குழம்பும், கரண்டி ஆம்லெட்டும்!

##~##

ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஓலைத் தடுக்கு வைத்து மறைக்கப்பட்ட ஒரே ஒரு அறைதான் ஹோட்டல்! மதியம் பன்னிரண்டு மணியில் இருந்து மூன்று மணி வரைக்கும் கும்பல் வெளியில் காத்துக் கொண்டே இருக்கிறது... முழுக்க முழுக்க மண்பானையில் சமைக்கப்படும் உணவுகளை ருசி பார்த்துவிட்டுத்தான் நகர்வது என்றபடி!

சமையல் மாஸ்டர், சப்ளையர், டேபிள் கிளீனர் என அனைத்து வேலைகளுக்கும்... கடையின் உரிமையாளர், ராமசாமி ஒருவர்தான். கூடமாட உதவி செய்வது மனைவி சகுந்தலா. கல்லாவைக் கவனிப்பதும், 'கரண்டி ஆம்லெட்’ போடுவதும் சகுந்தலாவின் வேலை. சுடச்சுட சாதத்தையும், மட்டன் குழம்பையும் ஒரு கை பார்த்து விட்டு, ராமசாமியிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினோம்.

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

''50 வருஷமா இந்த ஊர்ல கடை போட்டிருக்கோம். எங்கப்பாதான் ஆரம்பிச்சார். எவர்சில்வர், அலுமினியப் பாத்திரமெல்லாம் வர்றதுக்கு முன்ன... இட்லிச் சட்டி, தோசைச் சட்டி, பணியாரச் சட்டினு எல்லா பாத்திரங்களும் மண்ணுலயேதான் இருக்கும். அந்தப் பாத்திரங்கள்ல சமைக்க ஆரம்பிச்ச எங்கப்பா, அலுமினியம், சில்வர் பாத்திரங்கள்னு வந்ததுக்கு அப்பறம் வசதிக்காக அதுக்கு மாறிடல. 'மண்ணு பானையில சமைக்கறதுல கெடைக்கற ருசியும் மணமும் அதுல கெடைக்காது’னு தொடர்ந்து அதுலயே சமைச்சதுதான், எங்க கடையோட வெற்றி!'' என்றவர்,

''ஏழாவது படிக்கறப்பவே கடையில வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அதனால எனக்கும் சமையல் அத்துப்படி. அப்பா காலத்துக்கு அப்பறம் நானே கடையை நடத்த ஆரம்பிச்சுட்டேன். முழுசா நான் பொறுப்பெடுத்து இருபது வருஷம் ஆகுது. எங்க கடைக்கு வர்ற கூட்டம் எல்லாமே மண் பானை சமையல் ருசிக்காக மட்டும்தாங்கிறதால, தொடர்ந்து அதுலயே சமையல் செய்யறேன். இதுல சாதத்தை பொங்க விடாம வடிக்கறதால சீக்கிரம் செரிச்சுடும். கறி பஞ்சு மாதிரி வெந்துடும். அதிக மசாலா, மத்த கடைச்சரக்கெல்லாம் உபயோகப்படுத்தாம, வீட்டுல சமைக்கற மாதிரியே இஞ்சி, பூண்டெல்லாம் அம்மியில அரைச்சு ஊத்தி சமைக்கறது சாப்பாட்டை கூடுதலா மணக்க வைக்குது. கஸ்டமர்களை எங்களத் தேடி வர வைக்குது!'' என்றவர், ''மீதியை என் வீட்டுக்காரப்பிள்ளைகிட்ட கேட்டுக்கங்க'' என்றபடி குழம்பு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சப்ளைக்குச் சென்றார்.

'

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

கரண்டி ஆம்லெட்’ போடுவதற்காக கரண்டியை அடுப்பில் நீட்டிக் கொண்டே பேசினார் சகுந்தலா. ''நாங்க ரெண்டு பேருமே எட்டாங் கிளாஸ்தான் படிச்சுருக்கோம். இவர் எனக்கு தாய்மாமன். கல்யாணம் பண்ணி வந்ததுல இருந்து நானும் கடையைப் பாத்துக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ ஆட்டுக்கறி எடுத்து, ஒரே தடவையில குழம்பு வெச்சுடுவோம். கடை எவ்வளவு ஓடினாலும் ஒன்றரை கிலோவுக்கு மேல கறி எடுக்க மாட்டோம். அதனாலதான் அந்தக் கைமணம் மாறிடாம இருக்கு. மண்பானையில மூணு கிலோ அரிசிதான் வேக வைக்க முடியும். அதனால தேவைக்கேத்த மாதிரி அடுத்தடுத்து மூணு, நாலு தடவையா வடிச்சுக்குவோம். அதனால சாப்பிடுற எல்லாருக்குமே சாதம் சூடா கிடைக்கும்.

இத்தனை வருஷமா ஆட்டுக்கறிக் குழம்பும் கரண்டி ஆம்லெட்டும் மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷமா கோழிக்கறிக் குழம்பும் போடறோம். சாம்பார், ரசம், புளிக்குழம்புனு சைவமும் இருக்கு. எல்லாச் சமையலுமே மண்பானையிலதான்...'' என்றவர், தன் கஸ்டமர்கள் பற்றிப் பகிர்ந்தார்...

பாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்

'' 'மெட்ராஸ்ல பெரிய பெரிய ஹோட்டல்ல எல்லாம் மண்சட்டிலதான் மீன் குழம்பு வெப்பாங்க. அதுக்காக கொள்ளக் காசு வாங்குவாங்க. ஆனாலும் இந்த ருசி வராது...’னு எங்க கடைக்கு வர்றவங்க சிலர் பாராட்டுவாங்க. அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நிறைய எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் எங்க கடைக்கு ரெகுலரா வருவாங்க. தாசில்தாரு, பி.டி.ஓ-னு கவர்மென்ட் ஆபீஸருங்களும் வருவாங்க. பேச்சாளர் லியோனிகூட வருவாரு. பலர் பார்சல் வாங்கிக்குவாங்க. எங்க கடையோட ஓட்டத்தைப் பார்த்து, 'மண்பானை சமையல்’னு சிலர் புதுசா கடை ஆரம்பிச்சுருக்காங்க. ஆனாலும், அரை மணி நேரம் காத்திருந்தாகூட எங்க கடையிலதான் சாப்பிடணும் நிக்கற கஸ்டர்மர்கள் மட்டும் இடம் மாறல'' என்றவர் நிறைவாக,

''ஆளுங்களைப் போட்டு வியாபாரத்தைக் கூட்டினா ருசி மாறிடுங்கறதால, எங்க கையளவுக்கு மட்டும் வெச்சுக்கிட்டு ஓட்டிக்கிட்டுருக்கோம். போதுமான அளவுக்கு வருமானம் வர்றதால இதுவே எங்களுக்குப் போதும்'' என்றார் சந்தோஷமாக!

 ஜி.பிரபு
படங்கள்: வீ.சிவக்குமார்