Published:Updated:

நாட்டுப் பொங்கல் !

நாட்டுப் பொங்கல் !

அனிதா... 'கிலி'தா!

நாட்டுப் பொங்கல் !

''நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லக்னோ. இங்க பொங்கல் கொண்டாடற மாதிரியே, எங்க ஊருல சங்கராந்தினு ஒரு விழாவைக் கொண்டாடுவோம். அந்தச் சமயத்துல கன்னிப் பொண்ணுங்கள்லாம் கூத்தும் கும்மாளமுமா திரிவோம். ஒரு தடவை தெரியாத்தனமா மாட்டோட வாலைப் பிடிச்சிட்டேன். அவ்வளவுதான்... அப்படியே அலேக்கா ஆளைத் தூக்கிப் போட்டுடிச்சு அந்த மாடு. அதிலிருந்தே மாடுனா... எனக்கு ரொம்ப கிலி. இப்ப வரையிலும் பத்தடி தூரத்துல நின்னுதான் மாடுகளைப் பார்ப்பேன்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி

குப்புசாமி... உப்புசாமி!

"பொங்கல் அப்ப மட்டும்தான் வயசுக்கு வந்த கன்னிப் பொண்ணுங்க எல்லாம், அலங்காரம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியில வர்றது எங்க ஊரு பக்கம் வழக்கம். அன்னிக்கு ஒரு நாள் மட்டும்தான் இஷ்டத்துக்கு வெளியில நடமாடறதுக்கு அனுமதி. காலையில பதினோரு மணிக்கு வெளியில வர ஆரம்பிப்பாங்க. வயசுப் பசங்க நாங்க ஒன்பது மணிக்கே வீதியில காத்திட்டிருப்போம். பொண்ணுங்கள்லாம் வீதியில இறங்கிட்டா... எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

நாட்டுப் பொங்கல் !

ஒருத்தனை ஒருத்தன் தூக்கறது... கடல்ல கன்னாபின்னானு நீச்சல் அடிக்கறது... குஸ்தி போடறதுனு எங்க வீரத்தையெல்லாம் காட்டுவோம். அந்தச் சமயத்துல எனக்கு நீச்சல் தெரியாது. ஆனா, பொண்ணுங்கள அசத்தறேன்கிற குஷியில கடலோட ஆழத்துக்கே போயிட்டேன். அப்புறமென்ன... உப்புத் தண்ணியை நல்லா வயிறு முழுக்க குடிச்சிட்டு மயங்கிட்டேன். கூட இருந்த பசங்கதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய் காப்பாத்தினாங்க."

- நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி

'மணி'க்கு மவுசு கூட்டிய பறை!

நாட்டுப் பொங்கல் !

"கென்யா நாட்டுல ஒரு இசை நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க. தமிழ்நாட்டுல இருந்து பறை இசைக்கலைஞர்கள் அஞ்சு பேரு போயிருந்தோம். அந்த நிகழ்ச்சி பொங்கல் நாள்லதான் அங்க நடந்துச்சு. பொங்கலுக்கு சாதி-சனம், ஊரு-உறவுனு இல்லாம, இப்படி தூர தேசத்துக்குப் போறேமேனு உள்ளுக்குள்ள ரொம்ப வருத்தமாவே இருந்துச்சு. அந்த நாட்டுல எல்லாருமே கறுப்பின மக்கள். நம்ம ஊருலயே, அறிமுகம் இல்லாதவங்க சிரிச்சுக்கக் கூட மாட்டாங்க. அப்படியிருக்கறப்ப, அது வெளிநாடாச்சே..! ரொம்ப சாதாரணமான அறிமுகத்தோட அவங்கவங்க வேலைகள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா... மேடையேறி நாங்க பறை முழங்கி, எங்க நிகழ்ச்சியை நடத்தின பிறகு, எங்களுக்கு தனி மவுசு கூடிப் போயிடுச்சு. அத்தனை பேரும் எங்கள சுத்திக்கிட்டு, ஆளாளுக்கு உபசரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னிக்கு வரைக்கும்கூட அந்த கென்யா உள்ளங்கள்ல பல பேரு, என்கிட்ட நட்பைத் தொடர்ந்துகிட்டிருக்காங்க.’’

- நாட்டுப்புற பாடகர் மணிமாறன்

வேல்முருகன்... ஐ லவ் யூடா!

நாட்டுப் பொங்கல் !

"இசைக்கல்லூரியில நான் படிச்சிட்டிருந்தப்ப, பிரேயர்ல பொங்கல் விடுமுறை பத்தி சொன்ன பிரின்ஸிபால், கூடவே ஒரு கடுதாசியையும் படிச்சாரு. அது, ‘ராணுவ வீரர்கள்' பத்தி நான் எழுதின புரட்சிகரமான கவிதையைப் படிச்சுட்டு, அப்துல் கலாம் ஐயா எழுதின பாராட்டுக் கடிதம். எல்லாரும் கிளாப் பண்ணி பாரட்டினாங்க. பிறகு, பொங்கலுக்காக நான் ஊருக்குக் கிளம்பிட்டிருந்தேன். அதே காலேஜுல படிக்கற ஒரு பொண்ணு என்கிட்டவந்து, அமைதியா நின்னா. 'என்ன?'னு கேட்டதுதான் தாமதம். 'ஐ லவ் யூ'னு அவ சொல்ல... மனசு முழுக்க ஆயிரம் பட்டாம்பூச்சி! மகாராஷ்ட்ராவை சேர்ந்த அந்தப் பொண்ணு, பரதநாட்டிய டான்ஸர். மொழிப் பிரச்னை மட்டுமில்லாம... ஆயிரத்தெட்டு பிரச்னைங்க கிளம்பி வந்தாலும், அடுத்து வந்த பொங்கல்... எங்க ரெண்டு பேருக்கும் தலைப்பொங்கல் ஆயிடுச்சுல்லே!"

கலா... செம கலக்கலா!

நாட்டுப் பொங்கல் !

''நாலு வருஷத்துக்கு முன்ன கரூர் மாவட்டம், புனவாசிப்பட்டியில பொங்கலுக்காக கலை நிகழ்ச்சி நடத்த கூப்பிட்டிருந்தாங்க. கலக்கலா வரவேற்பு கொடுத்த ஊர்க்காரங்க, 'நீயே முதல்ல வந்து பொங்கல் வைம்மா...'னு கூப்பிட்டு, பொங்கல் வைக்கச் சொன்னாங்க. நம்ம மேல இவ்வளவு பாசம் காட்டறாங்களேனு நெகிழ்ந்து போய், சந்தோஷம் பொங்க... அந்தப் பொங்கலைக் கொண்டாடினேன். அடுத்த வருஷமும் அதே ஊர்ல பொங்கல் நிகழ்ச்சி... முந்தின வருஷம் போலவே முதல் ஆளா பொங்கல் வைக்கச் சொன்னாங்க. அதிலிருந்து நாலு வருஷமா தொடர்ந்து அந்த ஊர்ல முதல் ஆளா பொங்கல் வைக்கிற மரியாதையை எனக்குக் கொடுத்துட்டு இருக்காங்க. பெரிய பெரிய விருதுகளுக்கு இணையான பாக்கியமா நினைச்சு நானும் விடாம அந்த ஊருக்கு போயிக்கிட்டிருக்கேன்.''

- நாட்டுப்புற இசைக்கலைஞர் கலாராணி

அண்ணா... தங்கதுரையண்ணா!

நாட்டுப் பொங்கல் !

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன பொங்கலுக்காக திண்டிவனத்துல இருக்கற சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு கலை நிகழ்ச்சியையும் நடத்தினேன். அப்புறம்... உரி அடிக்கறது, மாட்டுவண்டி ஓட்டறது, சறுக்கு மரம் ஏறுறதுனு போட்டிகள்லயும் கலந்துகிட்டு பரிசு வாங்கினேன். இந்த சந்தர்ப்பத்துலயெல்லாம் ஒரு பொண்ணு என்னையே அடிக்கடி பார்த்து சிரிச்சுக்கிட்டே இருந்துச்சு. ரெண்டு நாளா இது தொடரவும்... மனசுக்குள்ள ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிச்சுட்டேன். ஆனா, கிட்ட போய் பேசறதுக்கு பயம், அதேநேரம் பேசாமவும் இருக்க முடியல. அடுத்த நாள் ஊருக்கு கிளம்பறப்ப ஒரு வழியா தைரியத்தை வரவழச்சுக்கிட்டு பக்கத்துல போய் நின்னேன். 'உங்க பாட்டும் நிகழ்ச்சியும் ரொம்ப அருமை’னு சொன்ன அந்தப் பொண்ணு, கடைசியில 'தாங்க்ஸ் அண்ணா'னு சொல்லி கைகொடுக்க... எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க!''

- 'கானா’ பாடகர் தங்கதுரை

சின்னப்பொண்ணு... மாறுகண்ணு!

நாட்டுப் பொங்கல் !

'பொங்கலன்னிக்கு ஒரு புரோகிராமுக்காக திருவாரூர் பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன். பக்கத்துல நின்னுட்டு இருந்த பொண்ணு, திடீர்னு கத்தி கூச்சல் போட ஆரம்பிச்சுடுச்சு! 'ஏம்மா என்ன ஆச்சு?'னு பதறினா.. 'அதோ நிக்கற அந்த தாத்தா, ரொம்ப நேரமா என்னையே ஒரு மாதிரி உத்துப் பார்த்துட்டு இருக்கார்'னு சொல்லுச்சு. உடனே அந்த தாத்தாவ ரவுண்ட் கட்டி நின்னுட்டோம். 'வயசான காலத்துல இதெல்லாம் நல்லா இருக்கா?'னு நாக்க புடுங்கற மாதிரி நான் கேட்டேன். அவரோ... 'என்ன பிரச்னை? ஏன் இவ்வளவு பேர் கூட்டமா நிக்கறீங்க?'னு கேட்டார். பயங்கர கோபத்தோட, 'என்னைப் பார்த்து பேசுங்க தாத்தா'னு சொன்னேன். 'உன்னைத்தாம்மா பார்த்துட்டு இருக்கே'னு அப்பாவியா சொன்னாரு. பிறகுதான் தெரிஞ்சுது... அவருக்கு மாறுகண்ணுங்கறது! விஷயம் புரிஞ்சபோது தாத்தாவும் எங்க கூட சேர்ந்து சிரிச்சாரு.

'' நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

விஜி... விரக்தி!

நாட்டுப் பொங்கல் !

சென்னை, மெரீனா பீச்சுல ஒவ்வொரு வருஷமும் போகியன்னிக்கு ராத்திரி 'கானா பஜார்'னு புரோகிராம் நடத்துவோம். அட்டு கானா, கப்பு கானா, ஜிகிரி கானா, தீப கானா, மரண கானானு எல்லா வகை கானாவும் அதுல போட்டி போடும். எதுகை, மோனையோட  ஒவ்வொருத்தரும் தொடர்ந்து விடாம பாடணும். அப்படி பாடி ஜெயிக்கறவங்களுக்கு பணப் பரிசு. போட்டியில கலந்துகிட்ட எல்லாரும் பணம் போட்டு, ஜெயிச்சவருக்கு கொடுப்போம். இதுல ஜெயிக்கறது லேசுபட்ட காரியமில்ல... சொல்லப் போனா, ஒருத்தராலயும் ஜெயிக்ககூட முடியாம போன போட்டிகளும் உண்டு. 92-ம் வருஷத்துல 42 ஆயிரம் ரூபாயை நான் ஜெயிச்சேன். ஆனா, இப்போலாம் இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தறதுக்கு போலீஸ் தடை விதிச்சிட்டதால... பொங்கல்னாலே எங்ககிட்டேயிருந்து புலம்பல்தான் எதிரொலிக்குது! -


'கானா' பாடகர் விஜி

திருத்தணி... மிதக்கற நீ!

நாட்டுப் பொங்கல் !

''கிராமங்கள்ல இருக்கற பெருசுங்ககிட்ட ஏகப்பட்ட நாட்டுப்புற பாட்டுங்க மறைஞ்சு கிடக்குங்கற உண்மைய, ஒரு பொங்கல் அன்னிக்குதான் நான் உணர்ந்தேன். ரெண்டு வருசத்துக்கு முன்ன, திருவாரூர் பக்கத்துல இருக்கற காக்கழனி கிராமத்துக்கு பொங்கல் புரோகிராமுக்காக போயிருந்தேன். ராத்திரிதான் நிகழ்ச்சி. அதனால, காலையில சும்மா ஊரைச் சுத்திக்கிட்டிருந்தேன். அந்த ஊர்ல இருந்த 95 வயசு பாட்டிகிட்ட பேச்சுக் கொடுத்த நான், 'ஏதாச்சும் பாட்டு தெரியுமா?'னு கேட்டேன். அதுவரைக்கும் நான் கேட்டிராத அற்புதமான பாட்டு ரெண்டை அவங்க எடுத்துவிட... அசந்துபோன நான், அப்படியே அடுத்த கேசட்ல சேர்த்துட்டேன். அந்தப் பாட்டி, நான் பாடின பாட்டு ஒண்ணையும் பாட, வானத்துல மிதக்கற மாதிரியே இருந்துச்சு எனக்கு.''

- நாட்டுப்புற பாடகர் 'நல்லிச்சேரி' திருத்தணி
தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி, சி.சுரேஷ்
படம்: கே.குணசீலன்