Published:Updated:

குடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயரவைத்த 'ஹாலோ பிளாக்' !

சவால்களுக்கு நடுவே சாதித்த சரஸ்வதி

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

''குடும்பத்துல உள்ள ஆண்கள் செய்யற தொழிலை, 'நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’னு ஒதுங்கி நின்னுடாம, பெண்களும் ஈடுபாட்டோட தெரிஞ்சு வெச்சுக்கணும். கஷ்ட காலத்துல அந்தத் தொழிலே நம்மள கை தூக்கிவிடற துடுப்பு ஆகலாம்..!''

குடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயரவைத்த 'ஹாலோ பிளாக்' !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- வாழ்க்கையின் வெற்றிப் படிகளில் ஏறி நிற்கும் திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதி, வெளிச்சம் நிறைந்த வார்த்தைகளால் தன் அனுபவம் சொல்கிறார்.

##~##

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பொருளாதார ரீதியாகப் பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தபோது... தன் குடும்பத்து ஆண்கள் ஈடுபட்டிருந்த 'சிமென்ட் கட்டுமானப் பொருட்கள்’ தொழிலில் தனக்கிருந்த பரிச்சயத்தில் தைரியமாக இறங்கிய சரஸ்வதி, இன்று 'ஹாலோ பிளாக்’ தொழிலில் மாதம் அரை லட்சத்துக்கும் மேல் லாபம் பார்க்கிறார். குடிசை வீட்டில் இருந்து தொழிலைத் தொடங்கிய இவர், இன்று பலருக்கு வேலை கொடுக்கும் 'முதலாளி’!

குரலில் அத்தனை உற்சாகம் சரஸ்வதிக்கு! ''பொன்மலைதான் சொந்த ஊர். சிமென்ட்ல நிலை, ஜன்னல் செஞ்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தார் அப்பா. வீடும், கடையும் ஒண்ணாவே இருந்துச்சு. ஸ்கூல் போயிட்டு வந்ததும், 'பொம்பளப் புள்ளையினா வீட்டுலயேதான் அடைஞ்சு கிடக்கணுமா? கடையில கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பாரு. தொழில் என்ன, வியாபாரம் எப்படி, வரவு-செலவு எந்த மாதிரினு புரியும். பிற்காலத்துல உனக்கு அது கை கொடுக்கும்’னு எங்கம்மா சொன்னது தீர்க்கதரிசி வார்த்தைகள்னு அப்போ எனக்குத் தெரியாது. ஆரம்பத்துல அம்மா சொன்னதுக்காக கடையில உட்கார்ந்தாலும், போகப் போக தொழில் நுணுங்கங்களை ஆர்வத்தோட கத்துக்கிட்டேன். பத்தாவது பாஸ் பண்ணின பிறகு, குடும்பச் சூழ்நிலையால மேற்கொண்டு படிக்க முடியல...'' என்பவருக்கு, துறையூரைச் சேர்ந்த கணேசனோடு திருமணம் முடிந்திருக்கிறது.

''கணவரோட கூடப் பொறந்தவங்க மூணு பேர். கூட்டுக் குடும்பமாதான் வாழ்ந்தோம். என் மாமனாரும் சிமென்ட் ஜன்னல், நிலை விற்பனை செய்ற கடைதான் வெச்சிருந்தாரு. ஒட்டுமொத்த குடும்பமுமே அந்த ஒரு கடையையே நம்பி இருந்தா... எப்படிச் சமாளிக்க முடியும்? பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டப்பட்டோம். என்னதான் அண்ணன்... தம்பினாலும் கூட்டுத் தொழிலா இருந்ததால, அவசர செலவுகளுக்குக்கூட பணம் எடுத்துக்க முடியாத நெருக்கடியான சூழலும் இருந்துச்சு. குழந்தைங்க பிறந்ததும் சமாளிக்கவே முடியல. திணறிப் போயிட்டோம்..''

- இந்தச் சூழல்தான் தனியாக தொழில் தொடங்கும் முடிவை சரஸ்வதிக்குள் விதைத்திருக்கிறது.

''தனியா தொழிலைத் தொடங்குவோம். உங்களுக்குத் துணையா இருக்கேன். 'பொம்பள சொல்றதக் கேட்டு இறங்கலாமா..?’னு யோசிக்காதீங்க. இந்த தொழில் பத்தி எனக்கு எல்லா நெளிவு, சுளிவுகளும் தெரியும்னு உறுதியா சொன்ன என்னை நம்பினார் என் கணவர். சின்ன குடிசை வீட்டை வாடகைக்குப் புடிச்சோம். சிமென்ட் நிலை, ஜன்னல் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்க அப்போவே அம்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்டுச்சு. நகைகளையெல்லாம் வித்து, தொழிலை ஆரம்பிச்சோம்.

அவருக்கு சரிக்கு சமமா நின்னு நானும் உழைக்க, விற்பனை நல்லாதான் நடந்துச்சு. ஆனா, உழைப்புக்கு ஏத்த லாபம் கிடைக்கல. அந்தச் சமயத்துல மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்ததுனால முழுமையா அதுல கவனத்தை திருப்பினோம். நிறைய லாபமும் கிடைச்சுது. கடுமையா உழைச்சோம். கொஞ்ச நாள்லயே அரசாங்கம் மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டாயப்படுத்தாம விட்டதால, தொழில் சரியா போகல. அதுக்காக கவலைப்பட்டு முடங்கிடல. ஜெயிச்சே ஆகணும்னு மனசுக்குள்ள உறுதியை இன்னும் ஏத்திக்கிட்டேன்'' எனும் சரஸ்வதி, மிகத் தெளிவான திட்டத்தோடு 'ஹாலோ பிளாக்' தொழிலில் இறங்கியிருக்கிறார்.

''சின்ன வயசுல இருந்தே இந்தத் தொழிலைப் பார்த்து வளர்ந்ததால, கட்டுமானத் தொழில் சார்ந்த வேலைகளுக்கு எப்பவுமே வாய்ப்பிருக்கும்னு நல்லாவே புரிஞ்சு வெச்சுருந்தேன். ஆனா, அதுல காலத்துக்கு ஏத்த மாதிரி புது விஷயங்களையும் புகுத்தணும்ங்கிறது கொஞ்சம் தாமதமா புரிஞ்சது. சிமென்ட் ஜன்னல், மழை நீர் சேகரிப்பு தொட்டினு அதுவரை பண்ணிட்டிருந்த நான், 'இதுல என்னவெல்லாம் புதுசா செய்யலாம்..?’னு தேடினப்போதான், ஹாலோ பிளாக் கல் பத்தி தெரிய வந்தது. 'ஆழம் தெரியாம காலை விட்டுடக் கூடாது’னு அதைப் பத்தின தகவல்களுக்காக தேடித் திரிஞ்சேன். உற்பத்தியாளர்கள், பயனீட்டாளர்கள்னு எல்லா தரப்புலயும் ஏக வரவேற்பு இருக்கறது தெரிஞ்சது'' என்பவர், பெரும் முயற்சிக்குப் பின் அதில் நம்பிக்கையுடன் இறங்கிஇருக்கிறார்.

''ரொம்பவே கஷ்டமான தொழில்ங்கறது, ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது. ஆனாலும் உழைப்புக்கான பலன் கிடைக்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போயிடும்தானே..? தொழில்ல நாங்க எடுத்த முதல் லாபம், எங்களை அப்படித்தான் சந்தோஷப்பட வெச்சது. தொடர்ந்து உழைச்சோம். படிப்படியா முன்னேறி வளர்ந்து நிக்கறோம். இப்போ எங்ககிட்ட 18 பேர் வேலை பார்க்கறாங்க. மாசம் சராசரியா 60 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது!''

- சரஸ்வதியின் பேச்சில் வலி நிறைந்த சந்தோஷம் பளிச்சிடுகிறது.

இத்தொழிலில் இருக்கும் சவால்கள், பயிற்சி, முதலீடு, சந்தை உள்ளிட்ட ஏ டு இசட் வழிகாட்டல் விவரங்கள்... அடுத்த இதழில்!

- சாதனைகள் தொடரும்...

படங்கள்: கே.குணசீலன்
கு.ராமகிருஷ்ணன்