Published:Updated:

'கோமாதா'க்களைக் காக்கும் குலமாதா !

'கோமாதா'க்களைக் காக்கும் குலமாதா !

பட்டதாரிப் பெண்மணியின் பாசக் கொட்டில்

'கோமாதா'க்களைக் காக்கும் குலமாதா !

உலகம் போகிற வேகத்துக்கு ஈடுகொடுக்க... சொந்த, பந்தங்களையே உதறித் தள்ளிவிட்டுப் போய் கொண்டிருக்கும் காலம் இது. இத்தகைய சூழலில், கால்நடைகளை வாஞ்சையோடு கவனித்துக் கொள்வதற்காகவே தன்னுடைய காலத்தை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண் என்றால்... ஆச்சர்யம்தானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலா, நாகர்கோவிலில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பி.எஸ்சி. விலங்கியல், கூட்டுறவு பட்டயப் பயிற்சி, ஹோமியோபதியில் டிப்ளமோ... எனப் படித்தவர். பொதுவாகவே வசதி படைத்தவர்கள் செல்லமாக நாய்க் குட்டிகளை வளர்ப்பதும், ஓய்வு நேரங்களில் அவற்றோடு கொஞ்சிப் பொழுதை கழிப்பதும்தான் வாடிக்கை. ஆனால், தன் ஆர்வம், அக்கறையால் மாடுகள் வளர்க்கும் சசிகலா, முழு நேரத்தையும் செலவழிப்பது அவற்றுடன்தான்! அதற்காக மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கும் பண்ணைக்காரர் இல்லை; மாடு வளர்ப்பில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டமடைந்து வருபவர். அதற்குக் காரணம்... அவரிடம் மிகுந்து கிடக்கும் ஜீவகாருண்யம்!

''தாத்தா காலத்துல, அப்பா காலத்துல நூறுக்கும் மேல மாடுங்க எங்ககிட்ட இருந்துச்சு. மாவட்ட அளவுல நடைபெறும் கால்நடைக் கண்காட்சியில எங்க மாடுங்கதான் முதலிடம் வாங்கும். அப்பா காலமானதும், டீச்சர் வேலை பார்த்த எங்கம்மா வால மாடுகளைப் பராமரிக்க முடியல. அதனால வள்ளியூர் பக்கம் ஒருத்தர் தோட்டத்துல விட்டிருந்தோம். எங்களுக்கே தெரியாம அதுங்கள வித்துட்டு, 'மேய்ச்சலுக்கு போனது திரும்பி வரலை’னு ஏமாத்திட்டாரு. மிஞ்சின வெறும் மூணு மாடுங்கள மட்டும் கூட்டிட்டு வந்துட்டோம். அதுகளோட வாரிசுதான் இங்க நிக்குற எல்லாமே!'' என்ற சசிகலாவிடம் 20 காளைகள், 20 பசுக்கள் மற்றும் 15 கன்றுகள் என தற்போது 55 மாடுகள் இருக்கின்றன.

பால் கிடைக்கும் என்பதால், பசு மட்டும் வளர்ப்பதுதான் பொதுவான வழக்கம். காளைகளை விற்றுவிடுவார்கள். ஆனால், எண்ணிக்கையில் சரிக்குச் சமமாக காளைகள் வளர்ப்பதால் வித்தியாசப்பட்டு நிற்கிறார் சசிகலா.

##~##
'கோமாதா'க்களைக் காக்கும் குலமாதா !

''பல வருஷங்களுக்கு முன்ன, கறிக்கடையில நான் பார்த்த காட்சிதான் இதுக்குக் காரணம். ஒரு காளை மாட்டை அலறித் துடிக்க அதோட நடு முதுகுல பிரம்பை வெச்சு அடிச்சு, கொலைக் களத்துல ஏத்தி, துள்ளத் துடிக்க கொன்னாங்க. நம்ம தாத்தா காலத்துல வயசான மாடுகளையும், காளைகளையும் ஊர்லயே ஒரு இடத்துல வெச்சு பராமரிப்பாங்க. வயல்ல நெல் அறுவடை முடிஞ்சதும், முதல் கட்டுக் கதிரை அந்த மாடுகளுக்குத்தான் கொடுப்பாங்க. இன்னிக்கு வயசான மாடுகளைத் தள்ளி விடற இடம் கறிக்கடைதான். 'நம்மகிட்ட இருக்கற காளைகள வித்தா, அது கண்டிப்பா இப்படி ஏதாச்சும் கறிக்கடைக்குத் தான் போகும்’னு அடி மனசுல சுரீர்னு அடிச்சுச்சு. அப்ப முடிவு பண்ணினதுதான்'' என்றவர், தன் பராமரிப்புப் பாசம் பற்றித் தொடர்ந்தார்...  

''நான் 20 வருஷமா மாடு வளர்க்கிறேன். ஒரு நாள்கூட காளை மாடுகள வளர்க்கறதை பாரமா நினைச்சதில்ல. பசுக்கள் தினம் 50 லிட்டர் வரைக்கும் பால் கறக்கும். பாலை கூட்டுறவு சங்கத்துல கொடுத்துட்டு இருக்கேன். இதுல வர்ற வருமானம் போக, கூடுதலா 20 ஆயிரம் ரூபாய் வரை தீவனச் செலவு, பராமரிப்புனு ஆயிடும். எங்ககிட்ட இருக்கற சொத்துக்கள் மூலமா வருமானம் கிடைக்கறதால, இதைச் சமாளிக்க முடியுது.

'காளைகளை வித்துட்டு பசுக்கள மட்டும் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும்ல...’னு ஆலோசனை சொல்லாதவங்க பாக்கி இல்ல. ஆனா, என் மனசாட்சி இடம் கொடுக்கல. 'இவ்வளவு படிச்சுட்டு, இப்படி மாட்டை பார்த்துட்டு இருக்கியே’னு பலர் ஏளனமாவும் கேட்டிருக்காங்க. என் தலை தென்பட்டதும் துள்ளி குதிச்சு ஓடி வர்ற கன்னுக்குட்டியை பார்த்ததும் அந்த வார்த்தையோட வலி மறைஞ்சிடும். வயசாகி இறந்து போற மாடுகளைக்கூட எங்களுக்குச் சொந்தமான தோட்டத்திலேயே அடக்கம் பண்ணிடுவோம்'' என்ற சசிகலா, குலமாதாவாகவே தெரிந்தார்.

'கோமாதா'க்களைக் காக்கும் குலமாதா !

அலமேலு, ஐஸ்வர்யா, ஜனனி, பட்டாபி, அரவிந்த், ரோகித் என்று ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர், பாசம் வைத்து ரசித்து வளர்க்கும் சசிகலா வசிக்கும் நாகர்கோவில், சைமன் நகர் பகுதியில் வீட்டுக்கு ஒரு காராவது நிற்கும். அவர்களுக்கு மத்தியில் வீடு முழுக்க கால்நடை செல்வங்களை தாயுள்ளத்தோடு பராமரிக்கும் நாற்பது வயது சசிகலா, திருமணமே செய்து கொள்ளவில்லை!


என்.சுவாமிநாதன்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்