Published:Updated:

இளமை இதோ.... இதோ!

உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கெளசல்யா நாதன்படம் : வீ.நாகமணி

''எதைச் சொன்னாலும் கேட்கறதே இல்ல. எல்லாம் அவ இஷ்டப்படிதான் செய்யணும்ங்கறா'' என்று பெண் பிள்ளைகள், தங்கள் தாய்மார்களைப் புலம்ப வைக்கும் வயது... பதின்பருவ வயது!

 ''இந்த அம்மாக்களே இப்படித்தான். 'அதைச் செய்யாதே... இதைச் செய்யாதே’னு ஆயிரம் கண்டிஷன்ஸ்'' என்று பள்ளிப் பருவப் பெண் குழந்தைகள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதும் பதின் பருவத்தில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும்!

''எல்லாம் வயசுக் கோளாறு'' என்று பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டி வைப்பார்கள் பெரியவர்கள்.

ஆம், அது உண்மைதான்... வயசுக் கோளாறுதான். பதின்பருவத்துக்கு என்றே விதிக்கப்பட்டிருக்கும் மாற்றங்களின் விளைவாகத்தான் இவையெல்லாம் நடக்கின்றன!

'ஸ்வீட் டீன் ஏஜ்’-ல் நடக்கும் உடல், மன மாற்றங்கள் என்ன?

இளமை இதோ.... இதோ!

'இளமையின் ஊற்று' (ஃபவுன்டன் ஆஃப் யூத்) என்பார்கள் 16 வயதை. குழந்தைத்தனம் மாறி, பருவ மாற்றங்கள் பெண் பிள்ளைக்குள் வளரும் காலம் இது. நம் பாட்டி, அம்மா காலத்தில் எல்லாம் பெண் குழந்தைகள் பருவம் அடையும் வயது 11 - 14 என்றிருந்தது. சமீப காலங்களாக 9-13 வயது என அது குறைந்திருக்கிறது. இது, உடல் ரீதியாக வரவேற்கத்தக்க விஷயமல்ல... வருந்தத்தக்க விஷயமே!

எதுவுமே, இயற்கையாக விதிக்கப்பட்டிருக்கும் வயதுகளில் நடக்கும்போதுதான், அதற்கு அழகு. அதை மீறும்போது... 'பிஞ்சிலேயே பழுத்தது' என்கிறார்கள் அல்லவா? அந்த நிலைக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை உணரவேண்டும்! சொல்லப்போனால், இந்த விஷயம், முதுமையை விரைவுபடுத்துவதாகக் கூட மாறக்கூடும்!

பரம்பரை, ஹார்மோன்களின் சமச்சீரின்மை, நாகரிகம் என்னும் பெயரில் மாறிப்போயுள்ள உணவுப் பழக்க வழக்கங்கள்... இந்த மூன்று காரணங்களால்தான் பருவம் அடையும் வயது குறைகிறது. இன்றைய சூழலில் பரம்பரையைவிட, மற்ற இரு காரணங்கள்தான் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பெண் குழந்தைகளுக்கு முன்கூட்டியே வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இன்று பூக்களில்கூட செயற்கைச் சாயம் பூசுகிறார்கள். அப்படி இருக்க, நம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் அபாயங்களைச் சொல்லவே வேண்டாம். குறிப்பாக, நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவை, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரும், குளிர்பானங்களும்தான். அந்த பாட்டில்களை மறுபடி மறுபடி உபயோகிப்பதாலும், சூரிய ஒளியினால் பாட்டில்கள் சூடாகும்போதும், பிளாஸ்டிக்கில் உள்ள கெமிக்கலானது... பாட்டிலில் இருக்கும் தண்ணீர்/குளிர்பானங்களோடு கலந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இவை பெண்களின் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு தீமை படைத்தவை. கலர் கலராக பாட்டில்களில் வரும் குளிர்பானங்களை, பிள்ளைகள் கை நீட்டுகிறார்களே என்று நினைத்தபோதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம். அந்தக் குளிர்பானங்களிலும் பலவித கேடுகள் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.

இப்போது வாரம் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடுவது என்பது பல குடும்பங்களின் வழக்கமாக மாறியுள்ளது. அங்கு கொலஸ்ட்ரால் பொங்கிவழியும் உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள் என்று குழந்தைகள் வயிற்றை நிரப்புகிறார்கள். குறிப்பாக, உணவகங்களில் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வகைகள் ஆபத்தானவை. ஏனெனில், பிராய்லர் கோழிகள் சீக்கிரம் வளர வேண்டும்... நல்ல எடை வரவேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக, அவற்றுக்கு வழங்கப்படும் உணவுகளில் ஒருவித ஹார்மோன் சேர்க்கப்படுகின்றது. அத்தகைய கோழிகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, உடலில் இயல்பைவிட மேலும் ஹார்மோன்கள் கூடிவிடும். இதனால், 'ஒபிஸிட்டி' எனும் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். பொதுவாக ஆண்டொன்றுக்கு இரண்டு முதல் இரண்டரை கிலோ மட்டுமே எடை கூட வேண்டும். தவறான உணவுகளால் 3 முதல் 4 கிலோ வரைக்கும் எடை கூடிவிடும். இதன் காரணமாக, இயல்பை மீறி ஏழு வயதிலேயேகூட பருவமடைந்து விடுவார்கள். 'இதை பாலிசிஸ்டிக் ஒவ்வரியன் சிண்ட்ரோம்' (Polycystic ovarian syndrome) என்பார்கள். திடீரென எடை கூடினால்...  அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இளமை இதோ.... இதோ!

ஹோட்டலில் மட்டுமல்ல... பாப்கார்ன், பீட்ஸா, பர்கர் என்று இப்போது வீட்டிலும் அதே உணவு வகைகளை குழந்தைகளுக்குக் கிடைக்க வழிசெய்கிறோம். இவையும் 'ஒபிஸிட்டி'க்கு காரணமாகிவிடுகிறது.

இதையெல்லாம் தவிர்க்கும் வகையில், சத்தான பாரம்பரிய உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். கேழ்வரகு, கம்பு, உளுந்து, பயறு வகைகள் என்று பாரம்பரிய மிக்க தானியங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, கெடுதல் செய்யாத சத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் அதேசமயத்தில்... குழந்தைகளின் மன விஷயத்திலும் பெரியவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும். இந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள், அவர்கள் மனதிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தக் காலகட்டத்தில், பெண் பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் இடையில் ஒரு தோழமையை அம்மாக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை இயல்பாக அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். கர்ப்பப்பை என்றால் என்ன, பருவம் அடைவது என்றால் என்ன என்பது பற்றி எல்லாம் படங்கள் வைத்து ஒரு பாடம் போலவேகூட அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

16 வயதினில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்..?

- இளமை வளரும்...

அடுத்த கட்டுரைக்கு