Published:Updated:

வேலு பேசறேன் தாயி...!

நகைச்சுவை புயலின் நவரச தொடர் - 3வடிவேலு, ஓவியம் : கண்ணா

'எம் மாமியா நாகம்மா மேல சத்தியம்’னு 'ஆர்யா’ படத்துல மாதவன்கிட்ட சபதம் போடுவேன். நெசத்திலும் எம் மாமியா பேரு நாகம்மாதேன். அவுகளுக்கு வயசு ஒரு 83 இருக்கும். ஒம்பது மக்களப் பெத்த மகராசி. என்னோட இன்னொரு தாய்க்குச் சமமான ஆளு.

 மாமியா ஒறவு மொறையானவங்ககிட்ட மருமகனுக யாரும் பேசுற வழக்கம் இல்ல. ஆனா, நா அப்புடி இல்ல. நல்லது கெட்டது எதுவா இருந்தாலும் அவுககிட்ட கலந்து பேசுவேன். அவுக சொல்றதை அக்கறையா கேட்பேன். என்னோட சினிமா ஸீன்களக்கூட பாத்துட்டு, அவுகளுக்குத் தோணுறதச் சொல்லுவாக. பாசமும் பரிவுமா இருக்குற அவுகள நா மாமியாவா பாத்தது இல்ல; என்னப் பெத்த மாதாவாத்தேன் பாக்குறேன். அவுகளுக்குக் கடைசிப் புள்ளையாப் பொறந்தவதேன் எம்பொண்டாட்டி விசாலாட்சி.

வேலு பேசறேன் தாயி...!

அவுக குடும்பத்துல வித்தியாசமான ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு தலைமுறையிலயும் பொறக்குற பொண் கொழந்தைகளுக்கு நாகம்மாள்னு பேர் வெச்சுருவாக. என் மாமியாவோட அம்மா பேரும் நாகம்மாதேன். தாய்க்கும் புள்ளைக்கும் எப்புடி ஒரே பேரு வைக்க முடியும்..? அதுவும் நாகம்மாங்கிற பேர்ல அப்புடி என்ன அதிசயம் இருக்குனு எனக்குப் புரியல. ஆர்வம் அடங்காம ஒரு தடவைக் கேட்டப்பதேன், அவுகளோட ஹிஸ்ட்ரியே தெரிஞ்சதுப்பு.

70 வருஷத்துக்கு முன்ன, என் மாமியாவோட அம்மாச்சிக்கு நாகப்பாம்பே கொழந்தையா வந்து பொறந்ததா ஏரியா முழுக்கப் பரபரப்பு. சுத்துப்பட்டு வகையறாக்க எல்லாரும் வந்து பாத்தா, என் மாமியாவோட அம்மாச்சிப் பக்கத்துல நாகப்பாம்பு ஒண்ணு தல வெச்சுப் படுத்திருக்கு.

இந்தக் காலத்துலகூட கர்ப்பிணி வயித்தில நல்ல பாம்பு பொறந்ததா சில இடங்கள்ல பரபரப்பா சேதி அடிபடுறத கேள்விப்பட்டு இருப்பீக. உண்மையாவே வயித்தில இருந்துதான் பாம்பு பொறக்குதா... இல்ல, யதார்த்தமா வீட்டுக்குள்ள வார பாம்ப அப்படி சொல்றாகளானு எனக்குத் தெரியல. ஆனா, இப்படி சேதி பரவினாலே... லோக்கல் பேப்பர் வரைக்கும் பெரிய பரபரப்பாகிடும். அந்த மாதிரி 70 வருஷங்களுக்கு முன்ன என் மாமியாவோட அம்மாச்சி பேரு அமளிதுமளியா அடிபட்டிருக்கு.

வயித்துல பொறந்த கொழந்தையாவே அந்த நாகப்பாம்ப வளக்க ஆரம்பிச்சிட்டாக வீட்ல உள்ளவுக. அம்மாச்சி, அந்த நாகப்பாம்போட ஆசாபாசமா பழகுறதும், அதோட வெளாடுறதுமா நெருக்கமாகிட்டாக. 'நாகு’னு இழுவையா ராகம் போட்டுக் கூப்புட்டாலே எங்கெ இருந்தாலும் பாம்பு ஓடுவந்து அம்மாச்சி மடியில படுத்துக்குமாம். புள்ளைகளோட வெளாடுமாம். 'நாகு நாகு’னு புள்ளைகளும் எந்தப் பயமும் இல்லாத அளவுக்கு அந்தப் பாம்போட பழக ஆரம்பிச்சிடுச்சாம்.

ஒருநா பக்கத்து ஊருல கல்யாணம். குடும்பத்தோட கௌம்பிக்கிட்டு இருந்த அம்மாச்சி வீட்டுக்காரவுக, பாம்பக் காணோமேனுட்டு 'நாகு நாகு'னு கூப்புட்டிருக்காக. வெளியில போயிருந்த பாம்பு வீட்டுக்குள்ள வந்திடுச்சு. அவசரகெதியில கௌம்பிக்கிட்டு இருந்தவுக, அத கவனிக்கல. கல்யாணத்துக்கு போயித் திரும்ப நைட்டாகிடுமேனு, திடீர் யோசனை வந்தவுகளா, நைட்டு சாப்பாட்டுக்குச் சோறாக்கி வைக்கிற வேலைகள்ல தீவிரமாயிட்டாக.

குடும்பத்துலயும் கொறவான ஆளுக இல்ல. எல்லாம் டஜன் கணக்குதேன். அதனால, பெரிய பானையில சோறு பொங்கி இருக்காக. அந்தக் காலத்துல எல்லாம் பானைகளை வெக்க பிருமனைனு ஒண்ணு பயன்படுத்துவாக. இன்னிக்கு இருக்கிற பொண்டுபுள்ளைகளுக்கு பிருமனைன்னா... தெரியுமானு எனக்குத் தெரியல. கயித்தாலயோ வைக்கப்பிரியாலயோ அழகாத் திரிச்சு, வளையம் மாதிரி பண்ணி இருப்பாக. சோத்துப்பானை, கொழம்புச் சட்டி, தயிர் முட்டினு எதை வைக்கிறதா இருந்தாலும், அந்தப் பிருமனைய கீழ போட்டு, அதுலதேன் வெப்பாக. பதநீரு, மோருனு விற்பனைக்குப் போற பொண்டுககூட தலையில பிருமனைய வெச்சு அதுலதேன் பானைய சொமந்துகிட்டுப் போவாக.

வேலு பேசறேன் தாயி...!

சோத்துப் பானையை வடிச்சு நிமித்துன அம்மாச்சி வூட்டுக்காரக, கல்யாணத்துக்குப் போற அவசரத்துல, சமையக்கட்டுல கெடந்த பிருமனை மேல பானைய வெச்சிட்டுக் கௌம்பிட்டாக. போற வழியிலதேன் மறுபடியும் நாகு ஞாபகம் வந்திருக்கு. சரி, வீட்டுல படுத்திருக்கும்னு நெனச்சுக்கிட்டு போயிட்டாக. கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுக, நாகுவத் தேடினா, வீட்டுல காணோம். 'நாகு நாகு’ன்னு தெரு முழுக்கத் தேடித்திரிஞ்சவுக, ஒருகட்டத்துல டயர்டாகிப்போய் வீட்டுக்கு வந்துட்டாக.

'நைட்டானா நாகு வீட்டுக்கு வந்திடும்’னு அவுகளுக்கு ஒரு நம்பிக்கை. நைட் சாப்பாட்டுக்குச் சோத்துப்பானை பக்கம் போனா, ஏதோ தீய்ஞ்ச வாடை. என்னனு தெரியலையேனு பதறிப்போய் பானையத் தூக்கிப் பார்த்தா... நாகு செத்துப் பஸ்பமா சுருண்டு கெடந்திருக்கு. நாகு சுருண்டு வளையமா தூங்கிக் கெடந்தப்ப, அதை பிருமனைனு நெனச்சு அதுமேல கொதிக்கக் கொதிக்க சோத்துப் பானைய வெச்சுட்டாகங்குறது, அதுக்கு அப்புறம்தேன் அவுகளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.

'ஆயா... நாகாத்தா எங்களை மன்னிச்சுக்க’னு அலறினவுக, வம்சாவழியா பொறக்குற பொம்பளப் புள்ளைகளுக்கு நாகம்மானு பேர் வெச்சுக்கிட்டு இருக்காக இன்னிக்கு வரைக்கும்.

பாம்புக்கும் பிருமனைக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நிதானம் இல்லாம போனதாலதேன், அந்த விபரீதம். ஆம்பளைக்குப் போதை எவ்வளவு கெடுதலோ, அதே மாதிரிதேன் பொம்பளைக்கு நிதானம் இல்லாத கொணமும். 70 வருஷத்துக்கு முன்னால ஒரு பாம்பப் பறிகொடுத்த பாவத்துக்காக, இன்னிக்கு வரைக்கும் என் மாமியா குடும்பம் குற்ற உணர்ச்சிய தூக்கிப் போட முடியாமப் போராடிக்கிட்டு இருக்கு.

படத்துல என் மாமியா பேரை நான் உச்சரிக்குற விதத்தப் பார்த்து நீங்ககூட சிரிச்சிருப்பீக. ஆனா, அவுக பேரோட பின்னணிக் கதை என்னக் கலங்க வெச்சிடுச்சு தாயி. இப்பவும் ஒரு எடத்தில ஒக்காரப் போனாக்கூட, ஒரு நிமிஷம் நின்னு நிதானிச்சுதேன் ஒக்காருவேன். பொறுமையும் நிதானமும் இருந்தா நம்மள யாரும் எதுவும் பண்ணிக்க முடியாது. நல்லது, கெட்டது எதுவா இருந்தாலும், ஒரு அஞ்சு நிமிஷம் ஆற அமர ஒக்காந்து யோசிச்சு, முடிவெடுத்தா... நிச்சயமா அது சரியா இருக்கும். அவசரகெதியில அள்ளித் தெளிச்சா... அப்புறம் பாம்பு பஸ்பமான கதையாத்தேன் ஆகும்!

- நெறய்ய பேசுவோம்...

அடுத்த கட்டுரைக்கு