Published:Updated:

அவர் நல்லவராவதும்... தீயவராவதும்...

அவர் நல்லவராவதும்... தீயவராவதும்...

 உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

அவர் நல்லவராவதும்... தீயவராவதும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


வெண்மதி பாப்பா 'ங்ஙாஆஆஆ...’ என்று அழுதுகொண்டே பிறந்தபோது, பூ அழுவது போல இருந்தது அவள் அம்மாவுக்கு. தொடர்ந்த நாட்களில் இரவு, பகல் என இடைவிடாது அழுகுரல் ஒலிக்க, ''பச்சப்புள்ள அப்படித்தான் அழும். போகப் போக சரியாகிடும்...'' என்றார்கள் பெரியவர்கள். ஆனால்... மூன்று, நான்கு மாதங்கள் ஆன பின்பும் பால் குடிக்க ஒரு அழுகை; குடித்த பின் ஒரு அழுகை, தூக்கத்துக்கு ஒரு அழுகை, தூங்கி எழுந்தபின் ஒரு அழுகை என... திரும்பத் திரும்ப பல்வேறு அலைவரிசைகளில் அழுதாள் குழந்தை!

காரணமே இல்லாமல் சிணுங்குவாள் வெண்மதி. அவளை வெளியே தூக்கிப் போய் வேடிக்கை காட்டினாலும், கையில் டிசைன் டிசைனாக கிலுகிலுப்பை வைத்து ஒரு நாட்டிய நாடகக் கச்சேரியே நடத்தினாலும்... தனக்குப் பிடித்த ஒரு இசைக் கோவையான அலைவரிசையில் சிணுங்கி, முணங்கி, கத்தி, ரொம்பக் கத்தி என அழுது கொண்டேயிருப்பாள். 'வளர வளர எல்லாம் சரியாகிடும்...’ என்ற நம்பிக்கையில் காத்திருந்த வெண்மதியின் அம்மா, தன் குழந்தையுடன் அவளின் அழுகையும் கூடவே வளர்வதை உணர்ந்தாள். சின்ன விஷயங்களுக்கும் கோபம், ஆத்திரம், பிடிவாதம், நினைத்தது கிடைக்கவில்லைஎனில் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் என்று அவளுடைய இயல்புகள் மனதை பயமுறுத்து

வனவாகவே இருந்தன.

##~##

''இதுதான்... இப்படியேதான் இருக்குது என் புள்ளையும்...'' என்று அலறும் அம்மாக்களே.. வெண்மதிக்கு இருக்கும் இயல்புகள் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும். இந்தக் குணங்கள் இயல்பானவைதான். ஆனால், எப்போதும் இதே குணங்களுடன் இருந்தால்தான் அந்தக் குழந்தைகளை 'கடினமான குழந்தைகள்' (Difficult children) என்கிறது குழந்தை மனநல அறிவியல்.

அப்படியானால், 'எளிதான குழந்தைகள்' (Easy children)? உங்களைப் பார்த்தவுடன் முன்பின் அதிக பழக்கமில்லை என்றாலும் சிரிக்கிறதா..? நீங்கள் தூக்கியவுடன் ஆசையாக வந்து ஒட்டிக் கொள்கிறதா? அது 'எளிதான குழந்தை’. கையாள்வது மிக எளிது. ''நன்மதி செல்லம்... அத்தைகிட்ட சமர்த்தா இருங்க. அம்மா மெடிக்கல் ஷாப் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்'' என்று நீங்கள் சொன்னால்... பொக்கை வாய்ச் சிரிப்புடன் 'டாட்டா’ காட்டும். இந்த வகையைச் சமாளிப்பதும், வளர்ப்பதும் மிக எளிதான விஷயம்தான்.

அந்தக் குழந்தை இரண்டு முறை உங்களைப் பார்த்திருக்கிறது. நீங்கள் ஆசையாகக் கையை நீட்டினால் வரவில்லை. கொஞ்ச நேரம் அவள் அருகில் உட்கார்ந்து, 'அம்முக்குட்டி... பொம்முக்குட்டி’ என்று விளையாட்டுக் காட்டினால், தயக்கத்துடன் வந்து மடியில் உட்கார்ந்து, மெள்ள முகம் பார்த்து சிரிக்கிறது. இது 'சராசரியான குழந்தை' (Average child). நம் சமுதாயத்தில் இந்த வகைக் குழந்தைகள்தான் 80 சதவிகிதம். எளிதான, கடினமான குழந்தைகள் தலா 10 சதவிகிதம்தான்! இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா உங்கள் குழந்தை எந்த வகை என்று?

'எதற்கு என் குழந்தையின் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும்..?’

நேர்மையானவனாக, நல்லவனாக, நல்ல உணர்வு நிறைந்தவனாக குழந்தையை மாற்றுவது... அது எந்த வகை என்பதை உணர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. உங்கள் குழந்தையின் இயல்பும், குணமும்... வீடு, பள்ளி, அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகளைப் பாதிக்காமல் இருந்தால்தான்... அதன் வளர்ச்சி பிரச்னையில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழந்தையைப் பாசத்துடனும் நேசத்துடனும் அருகில் இருந்து அதன் இயல்புகளைக் கவனித்து... நேர்படுத்த வேண்டும். இதில்தான் இருக்கிறது அது 'மாகாத்மா’ ஆவதும் 'பாவ ஆத்மா’ ஆவதும்!

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு. அதில்தான் குழந்தையின் 'உணர்வு சார்ந்த வளர்ச்சி'யும் (Emotional Development) அடங்கியிருக்கிறது. 'எதற்கு கோபப்பட வேண்டும், அழ வேண்டும், சிரிக்க வேண்டும்’ என்று புரிந்து கொள்ளும் குணம், 'தம்பிக்கும் சாக்லேட் கொடுத்துட்டுதான் சாப்பிடணும்’ என்கிற அட்ஜெஸ்ட்மென்ட் குணம், 'அம்மா ஊருக்குப் போயிருந்தா, அப்பா பக்கத்துல படுத்தும் தூங்கலாம்’ என சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் குணம் போன்ற பல குணங்களும் உணர்வு சார்ந்த வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கின்றன.

'ஒழுக்கநெறி சார்ந்த வளர்ச்சி'யும் (Moral Develop- ment) ஒரு குழந்தைக்குள் விதைக்கப்படுவதும், வளர்க்கப்படுவதும் 'உணர்வு சார்ந்த வளர்ச்சி’ எனப்படும் காலகட்டத்தில்தான். 'பொய் சொல்றது தப்பு’, 'அடுத்தவங்கள அடிக்கிறது மகா தப்பு’, 'மத்தவங்க பொருளை எடுக்கக்கூடாது’ என்பது போன்ற அறநெறியான விஷயங்கள் பிஞ்சுகளின் மனதில் பதியமிடப்படுவதும் இந்த காலகட்டத்தில்தான். ஆக, குழந்தையின் வளர்ச்சி... அதன் நல் உணர்வு, ஒழுக்கம் சார்ந்த வளர்ச்சி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புடையவை.

குழந்தையுடன் நெருங்கி இருந்து நெறிப்படுத்துவோம்!

- வளர்ப்போம்...

மாடல்: வி.சச்சின்,
படம்: என்.விவேக்