Published:Updated:

நட்புத் தோல் போர்த்திய நயவஞ்சக நரி!

நட்புத் தோல் போர்த்திய நயவஞ்சக நரி!

என் டைரி - 242

நம்பிக்கைக்கு சற்றும் அருகதையற்ற ஒருவரை தீவிரமாக நம்புகிறார் என் கணவர். உண்மையை எடுத்துச் சொன்னாலும், உணர மறுக்கிறார். இதனால் எங்கள் இல்லறம் அல்லாடுவதுதான் என் பிரச்னை தோழிகளே!

நட்புத் தோல் போர்த்திய  நயவஞ்சக நரி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிகிரி முடித்த கையோடு, திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் 25 வயது பெண் நான். நெருங்கிய நண்பருடன் சேர்ந்து மேனேஜ்மென்ட் கன்சல்டன்ஸி நிறுவனத்தை கணவர் தொடங்கியபோது, வீட்டிலிருந்தபடியே கணக்கு வழக்குகளைப் பார்த்து உதவியாக இருந்தேன். ''என் பிஸினஸ்ல நான் மூளைனா, நீதான் இதயம்'' என்றெல்லாம் புகழ்ந்தார்.

சமீபத்தில் புதிதாக ஒரு பார்ட்னர் வந்து சேர்ந்தார். 'முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டவர்... யாரையும் தன் வசப்படுத்தி எதையும் சாதித்துக் கொள்பவர்’ என்றெல்லாம் அவரைப் பற்றி மோசமான தகவல்கள் கசியவே, கணவரிடம் எடுத்துச் சொன்னேன். ''அதெல்லாம் இல்ல...'' என்று என்னை அடக்கிவிட்டார்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக பாதிப்புகளுக்கு உள்ளானேன். ''இனி நீ ஆபீஸ் வேலைகளைப் பார்க்க வேண்டாம்...'' என்று சடாரென்று கணவர் கூற, உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும், 'ஏதோ மாற்று ஏற்பாடு செய்திருப்பார்...’ என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஆபீஸ் விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்திவிட்டார். இன்னொருபுறம், என்னிடம் இருந்த அன்பும் தேய்வதாகப்பட்டது. முன்பெல்லாம் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சும் அவர், எதற்கெடுத்தாலும் அவர்களிடம் எரிந்து விழுந்தபோதுதான், குடும்பத்தில் ஈடுபாடு குறைவதை உணர்ந்தேன். விடுமுறை தினங்களில் பொழுதைக் கழிப்பது, அந்த புதிய பார்ட்னருடன் தான். குடிப் பழக்கத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். கேட்கும்போதெல்லாம் பணத்தை அள்ளி அவருக்கு இறைக்கிறார். கேட்டால், ''அவன் என் நண்பன்'' என்கிறார்.

இதற்கிடையில், ஆரம்பகால பார்ட்னரும், தொழிலில்இருந்து விலகி விட்டார். அவர், 'உங்களை ஆபீஸ் வேலைகள்ல இருந்து நிறுத்தினது, அந்தப் புது ஆளோட நரித்தனம்தான். இப்போ நானும் விலக வேண்டிய சூழலை உருவாக்கிட்டான். உன் கணவரை குடி, கும்மாளம்னு மழுங்கடிச்சு, கம்பெனியையே முழுங்கப் போறான்'' என்று என்னிடம் எச்சரித்துவிட்டே சென்றார்.

இந்த வில்லங்க நட்பை விரட்டியடிக்க என்ன வழி தோழிகளே?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 241ன் சுருக்கம்...

'கால்கட்டு போடு... கவலைகள் ஓடும் !'

'' 'ஆசைப்பட்டால் மேற்கொண்டு படி’ என்று தாங்கும் கணவர், முகம் வாடினாலும் மனம் வருந்தி கேட்கும் மாமனார், மாமியார் என்று புகுந்த வீடு, தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. ஆனால், கணவரின் தம்பியே வில்லனாக வாய்த்திருப்பதுதான் கொடுமை. 'வாலி’ பட அஜீத் போல... உள் ஊடுருவும் பார்வை, இரட்டை அர்த்த பேச்சு, வேண்டுமென்றே கைகளை அழுந்தப் பிடிக்கும் ஈனச் செயல், அருவருப்புக் கொள்ளச் செய்கிறது. இதிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள் தோழிகளே...''

'நம் பெயரைச் சொல்லி அழைக்காமல், 'நீங்க... வாங்க’ என்று மரியாதையாகத்தானே அழைக்கிறார்; 'சுடிதார் ஸ்டிச்சிங் நச்சுனு இருக்கு’ என்று கலை ரசனையுடன் வெளிப்படையாக சொல்லியிருப்பாரோ; நம் மௌனத்தைக் கலைக்க விரும்பாமல், அறையில் வந்து நின்று, நாம் திரும்பிப் பார்த்ததும், 'டீ போட்டுக் கொடுங்க’ என்று கேட்டிருப்பாரோ; 'வெளியே போ’ என்று முரட்டுத்தனமாக கத்தியும், பெரிதுபடுத்தாமல், பெருந்தன்மையுடன் இருக்கிறாரோ..! உரிமையுடன் பழகுவதை தவறாக எண்ணுகிறோமோ?’ - இப்படியும் யோசித்துப் பார். ஒருவேளை இப்படியும் இருக்கலாம். சந்தேகம், புற்றுநோயைவிட கொடியது. சந்தேகத்தை களைந்து, வீட்டில் சந்தோஷத்தை விதை!

- பி.வைஷ்ணவி, சென்னை-68

இளமைத் துள்ளலோடு வளைய வரும் மைத்துனருக்கு 'திருமணம்’ என்ற 'கால்கட்டை’ போடும் முயற்சியில் இறங்கு. 'தம்பிக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமா?’ என்று அக்கறையோடு, பெண் தேடும் படலத்தைத் தொடங்கு. குடும்பத்தில் மதிப்பும் இன்னும் கூடும். 'அண்ணி என்பவள் அன்னைக்குச் சமம்’ என்பதை உணர்ந்து, உன்னையே பூஜிக்க தொடங்குவான்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

கணவர் உட்பட யாரிடமும் இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல், சிக்கலிலிருந்து விடுபட ஒரு வழி இருக்கிறது. ராமாயணத்தில் லட்சுமணன் பாத்திரத்தையும், அண்ணி சீதையிடம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதை பற்றியும் சுட்டிக் காட்டி ராமாயண புத்தகத்தை அவனிடம் கொடுத்து படிக்கச் சொல். எப்படிப்பட்ட மனதையும் மாற்றி விடும் சக்தி ராமாயணத்துக்கும், அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் உண்டு.

- எஸ்.ராஜகுமாரி, சென்னை-125

கட்டிய கணவரிடம் எதையும் மறைக்காமல், நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள். எந்த விஷச் செடியையும் வளர விடாமல் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். அவன் முந்திக் கொண்டு, உன் பெயரைக் கெடுப்பதற்கு முன், நீ கணவரிடம் கூறிவிடுவதுதான் நல்லது. அவரே ஒரு முடிவெடுக்கட்டும்!

- மோ.புனிதா சுந்தர், பெருந்துறை