Published:Updated:

செய்வினை... தகடு... குறளி...

எதுவும் மந்திரமில்லை...எல்லாமே தந்திரம்தான் !

செய்வினை... தகடு... குறளி...

''என்னமோ தெரியல... எப்ப பார்த்தாலும் எம்பொண்ணு, பேய் பிடிச்ச மாதிரியே திரியறா. யாரோ மருந்து வெச்சுட்டாங்க போல...''

 ''எம்பையன், அந்த வீடே கதினு கிடக்கான். ஏதோ மந்திரம் பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இப்படிப்பட்ட டயலாக்குகளை அடிக்கடி கேட்டுஇருப்பீர்கள்.

'ஐயையோ! இந்த அநியாயம் அடுக்குமா..?' என்று பரிதாபப்பட்டோ... 'அட, இந்த நவீன  காலத்துலயும் இதையெல்லாம் நம்பலாமா... சுத்த உடான்ஸ்!' என்று ஒதுக்கித் தள்ளிவிட்டோ நடந்திருப்பீர்கள்.

ஆனால்... ''மந்திரத்தால மாங்காய் விழாதுங்கிறது உண்மைதான். அதேசமயம் சில மருந்துகளச் செலுத்தினா... மாங்காய் மரத்தையே சாய்ச்சு விழ வெச்சுடலாம்ங்கிறது பொய் இல்லையே?! என்ன கொஞ்சம் குழப்பமா இருக்குதா?! வாங்க, விளக்கறேன்!'' என்று அதிர வைக்கிறார்... டாக்டர் முகுந்தன்.

##~##

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் 'ஹெர்பல் கிளினிக்’ நடத்தி வருகிறார் முகுந்தன். பூலோகத்தில் உள்ள எண்ணில் அடங்காத மூலிகைகளின் நற்பயன் எல்லாம் ஏற்கெனவே உலகறிந்த சேதிதான். ஆனால், முகுந்தனோ, தீய வழிகளுக்கு மூலிகைகள் பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து வருகிறார்... அதைப்பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்த... தன் ஆய்வில் அவர் அறிந்த விஷயங்களை எல்லாம் விளக்கியபோது, விழிகள் விரிந்தன நமக்கு!

''சொந்த ஊரு நீலகிரி. எங்க அப்பாவுக்கு மூலிகைகள் மேல பெரிய பிடிப்பு. அதேமாதிரி எனக்கும் ஏற்பட, சித்த மருத்துவர் ஒருத்தர்கிட்ட அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். கொல்கத்தாவுல உள்ள 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்’ல சேர்ந்து, பி.எம்.ஹெச்.எஸ். முடிச்சுட்டு, மூலிகை மருத்துவம் பண்றதுக்கான அங்கீகாரத்தை வாங்கினேன்'' என்று தன்னைப் பற்றி அறிமுகம் தந்த டாக்டர்...

செய்வினை... தகடு... குறளி...

''மூலிகைகள் தீய விளைவுகளுக்காக பயன்படுத்தப்படுற விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டேன். 'மந்திரம், மாந்திரீகம் பண்றேன்’னு சிலர் உட்கார்ந்துக்கிட்டு, தவறான மூலிகைகளை (நெகட்டிவ் ஹெர்பல்) பயன்படுத்தி உடல் நோய், வசியம், சரும நோய்னு பல பிரச்னைகளை உண்டு பண்ணிடுவாங்க. பாதிக்கப்பட்டவங்க, குறிப்பா பெண்கள், 'செய்வினை வெச்சுட்டாங்க’, 'தகடு வெச்சிட்டாங்க’, 'குறளி ஏவிட்டாங்க’னு அலங்கோலமா அழறதைப் பார்த்து அதிர்ந்திருக்கேன். அதனாலயே நெகட்டிவ் ஹெர்பல் விளைவுகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணி, மக்கள்கிட்ட விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைச்சேன்'' என்று பகீர் முன்னுரை கொடுத்து நிறுத்தியவர், சில நொடிகள் மௌனித்த பின் தொடர்ந்தார்.

''செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி மாந்திரீகம் பண்ணக் கூடியவன் பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா, ஒரு பொட்டலத்துல ஏதோ பொடியையோ, தீர்த்தத்தையோ நிச்சயம் தருவான். அது வேறொண்ணுமில்ல... சாட்சாத் மூலிகை தயாரிப்புதான்! அதாவது, தாவரங்கள்ல மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருக்கற மாதிரி, விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் நிறைய இருக்கு. வசிய மருந்து வைக்கிறவங்க பெரும்பாலும் அந்த மாதிரி தாவரங்களைத் தேடிப் பிடிச்சு, அதை பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணுவாங்க. யாரை முடக்கணுமோ... அந்த நபருக்கு அவரோட நெருங்கிய இல்லைனா, தெரிஞ்ச மனுஷங்க மூலமா இதையெல்லாம் உணவுல கலந்து கொடுக்க வெச்சுடுவாங்க. மூலிகையோட நச்சுத் தன்மை ரத்தத்தில் கலந்து, தன்னோட ஆட்டத்தை துவக்கும்...'' என்றவரை நாம் அதிர்ச்சி விலகாமல் பார்த்தபடி இருக்க,

'' 'இது சாத்தியமா?’னு கேட்டீங்கனா, நூறு சதவிகிதம் சாத்தியம்! மருந்து வைக்கற சூத்திரதாரிகள், எதிர்மறை தாவரங்களோட காம்பினேஷனை தெரிஞ்சு வெச்சிருக்கறாங்க. அதுதான் அவங்களோட பலமே. குறிப்பிட்ட இலை, வேர், முள்ளுனு தேடிப்பிடிச்சி பொடி பண்ணி வெச்சுக்கிட்டு, அதைப் பயன்படுத்தி புகையை ஏற்படுத்தி, நினைச்சத சாதிக்கறாங்க. பெரும்பாலும் 'பிளேபாய்’ சாமியார்கள் பெண்களை நினைவிழக்க வைத்து நாசம் செய்றது இந்த மாதிரி புகையாலதான். இதேபோல ஆயிரக்கணக்கான காம்பினேஷன்கள் இருக்குது'' என்று பூகம்ப அதிர்ச்சி கொடுத்தவர்,

செய்வினை... தகடு... குறளி...

''இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க, இயல்புக்கு விநோதமா நடந்துக்கறதைதான், 'வசியம் வெச்சுட்டாங்க’னு சொல்றாங்க. இதெல்லாமே முழுக்க முழுக்க உடல் சார்ந்த பாதிப்புகளே தவிர... இதுல அமானுஷ்யமோ, தெய்வத் தன்மையோ துளியும் கிடையாது. கிட்டத்தட்ட 'ஃபுட் பாய்ஸன்’ போலத்தான்!'' என்றவர்,

''இதையெல்லாம் 'அவள் விகடன்’ சகோதரிகளுக்கு ஏன் சொல்றேன்னா, பொதுவா பெண்கள்தான் இப்படி மந்திரம், மாந்திரீகம்னு நம்பறதும், அதுல போய் மாட்டிக்கறதும். வீட்டுல யாருக்காச்சும் இப்படி விநோத பிரச்னைகள் வந்தா, 'செய்வினை வெச்சுட்டாங்க...’னு புலம்பறது தவறு. 'அதைத் திருப்பி எடுக்கப் போறேன்...’னு கிளம்பறது அதைவிட பெரிய தவறு. காரணம், பெரும்பாலான மருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னாலதான் அதோட வேலையைக் காட்டும். அதனால, இதை சரிசெய்ய, இந்தச் சக்திக்கு இணையான மருந்துகளை நீங்க தேடிப்போற 'மாந்திரீக’ போர்வையில இருக்கற மூலிகை வில்லன்கள் கொடுக்கும்போது, அதோட பாதிப்புகள் அதிகமாகறதோட அதிக நாட்களும் நீடிக்கும். பிரச்னையில இருந்து விடுபட ஒரு தரமான, அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரை நாடலாம். முறையான மருத்துவம், உணவுக் கட்டுப்பாடு மூலமா குணம் பெறலாம்!'' என்ற முகுந்தன், தன் ஆய்வுகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட இருக்கிறார்!

''எல்லாம் சாத்தியமே!''

 

''மூலிகைகளை வைத்து இது போன்ற விஷம விளையாட்டுகள் சாத்தியமா?'' என்று கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவரான மாரியப்பனிடம் விளக்கம் கேட்டோம்.

''இது சாத்தியம்தான். மயக்கமூட்ட, சில வகையான உடல் நலக் கோளாறுகளை உண்டாக்க மூலிகைகளால் முடியும். இப்படியான தொல்லைக்கு ஆளாகி உடல் நலமோ அல்லது மன நலமோ பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த சிகிச்சை முக்கியம். அதைவிட முக்கியம் தொடர் கவுன்சலிங்!'' என்றார் டாக்டர்.

 எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய்