Published:Updated:

வேலையோ, வாழ்க்கையோ... இந்த 12 பழக்கங்களை பெண்கள் மாத்திகிட்டா சாதிப்பது சுலபமாம்!

பெண்

பெண்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், நிச்சயம் ஒரு சிறந்த ஊழியராகவோ, தலைவராகவோ, தொழிலதிபராகவோ ஆக முடியும்.

வேலையோ, வாழ்க்கையோ... இந்த 12 பழக்கங்களை பெண்கள் மாத்திகிட்டா சாதிப்பது சுலபமாம்!

பெண்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், நிச்சயம் ஒரு சிறந்த ஊழியராகவோ, தலைவராகவோ, தொழிலதிபராகவோ ஆக முடியும்.

Published:Updated:
பெண்

பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் முன்னேறிவருகிறார்கள். என்றாலும், தங்களைப் பின் இழுக்கும் சில மனத்தடைகளிலிருந்து அவர்கள் முற்றிலும் விடுபடவில்லை. எதிர்வரும் சிக்கல்கள், பிரச்னைகளை எல்லாம் அடித்து நொறுக்கி மேலே வரவேண்டும் என்றால், தங்களின் சில பழக்கங்களை அவர்கள் மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். மார்ஷல் கோல்டுஸ்மித்தும் சல்லி ஹெல்கெசனும் எழுதியுள்ள `ஹவ் விமென் ரைஸ் (How Women Rise)' புத்தகமும் அதையேதான் சொல்கிறது. பெண்களை பின்னுக்குத் தள்ளும் 12 பழக்கவழங்களை இந்தப் புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கும் ஆசிரியர்கள், `இவற்றை சரிசெய்துகொண்டால் நிச்சயம் ஒரு சிறந்த ஊழியராகவோ, தலைவராகவோ, தொழிலதிபராகவோ ஆகமுடியும்' என்கிறார்கள். அந்த 12 பழக்க வழங்கங்களும், அதற்கான தீர்வுகளும் இங்கே...

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமல்ல, பெர்சனல் வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை பெண்ணாக நீங்கள் நடைபோட... டேக் நோட்ஸ்!

WFH பெண்கள்
WFH பெண்கள்

1. கரியரைவிட வேலைக்கு முக்கியத்துவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்களைவிட பெண்கள் தாங்கள் வேலைசெய்யும் இடத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் ஒரே கம்பெனியில் நீண்ட காலம் வேலைசெய்கிறார்கள், ஒரே இடத்தில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். முன்னேறிச் செல்வதில்லை.

என்ன செய்ய வேண்டும்?

வேலைசெய்யும் நிறுவனத்துக்கு விசுவாசம் முக்கியம்தான். ஆனால், அதைவிட உங்கள் கரியர் மிகவும் முக்கியம். எப்படி அடுத்தகட்டத்துக்குச் செல்வது என்பது, எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. எல்லாமே டூமச்!

வேலைசெய்யும் இடத்தில் அதீதமாக அன்பு பாராட்டுவது, கோபப்படுவது, டெஸ்க்கில் அழுவது, பர்சனல் வாழ்க்கையை லிமிட் தாண்டி பகிர்வது, ஏன் ஒரு விடுப்பு எடுப்பதென்றால் அவசியமில்லையென்றாலும் அதற்கான காரணத்தை கூறுவது என... பெண்கள் எல்லாவற்றிலும் சற்றதிகமாகவே செயல்படுகிறார்கள். இதனால் உடன் இருப்பவர்களும் உயர் அதிகாரிகளும் எந்த ஒரு வேலையையும் உங்களிடம் நம்பிக் கொடுக்கத் தயங்குவார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

கோபம், மகிழ்ச்சி, சோகம் என எல்லாவற்றையும் மற்றவர்கள் முன்பு வெளிப்படுத்துவதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதற்குமே உடனே ரியாக்ட் செய்யாதீர்கள். பர்சனல் பிரச்னைகளை சக ஊழியர்களிடம் கூறாதீர்கள்.

பெண்கள்
பெண்கள்

3. தன்னை முன்னிறுத்திக்கொள்ளப் பிடிக்காது!

தலைப்பைப் பார்த்தால், இது நல்ல விஷயம் என்றுதானே தோன்றுகிறது? ஆனால், அது தவறு என்கிறது இந்தப் புத்தகம். ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வேலை செய்கிறார்கள். ஆனால், அதைக் கூறிக்கொள்வதில்லை. அப்படிச் செய்தால் தன்னை அடக்கம் இல்லாதவள், அதிகப்பிரசங்கி என்று கூறிவிடுவார்களோ என்ற பயம். அதேபோல பாராட்டப்படும்போதும் அதை ஏற்றுக்கொண்டு `நன்றி' என்று சொல்வதில்லை. மாறாக, `நானே சொதப்பிட்டேன் நீங்க வேற...' என்பது தன்னடக்கம் இல்லை, முட்டாள்தனம் என்கிறார்கள் சல்லியும் கோல்டுஸ்மித்தும்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்காக நீங்கள்தான் பேச வேண்டும். நம் வேலையே நம்மளைப் பற்றிப் பேசும் என்று இருக்கக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. ஆல் இன் ஆல் ஆர்வம்!

ஒரு துறையில் டாப் டு பாட்டம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து அதில் கைதேர்ந்தவர்களாக ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள் பெண்கள். ஆனால், அந்த நிபுணத்துவம் அவசியமில்லை. அதில் நேரம் செலவழித்தால் உங்களால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது என்கிறது இந்தப் புத்தகம்.

என்ன செய்ய வேண்டும்?

எல்லாவற்றையும் நீங்களே செய்து முடிக்க வேண்டும் என்றோ, அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ நேரத்தை வீணாக்காதீர்கள். இவற்றால் உங்களுக்கு வாய்ப்புத் தேடி வரப்போவதில்லை, நீங்கள்தான் அடுத்தகட்டத்துக்கு உங்களை நகர்த்த வேண்டும்.

பெண்கள்
பெண்கள்

5. மற்றவர்கள் கவனித்துப் பாராட்ட வேண்டும்!

மாடுபோல உழைத்துவிட்டு, அதை மற்றவர்கள் தாங்களாகவே கவனித்து உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், ஏமாற்றமே மிஞ்சும். அப்ரைசல் நேரத்தில் புலம்பல்கள் போனஸ்.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்யும் வேலையை எப்போதும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் தக்க நேரத்தில் அதைத் தீர்க்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் எடுத்துக்கூறுங்கள். முக்கியமாக, பேச வேண்டிய இடத்தில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.

6. சின்ன வட்டம் போதும்!

ஒரு துறையில் முன்னேற விடாமுயற்சி, திறமை இவற்றைத் தாண்டி உறவுகளை மேம்படுத்திக்கொள்ளுதலும் முக்கியம். ஆண்கள் இந்த விஷயத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்வதைப் பார்க்கலாம். பெண்கள், தங்களுடன் ஒத்துப்போகும் சின்ன வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளேயே சுருங்கிப்போகிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

பிடிக்குதோ இல்லையோ, எல்லோருடனும் பழக வேண்டும். உங்களது துறையில் நீங்கள் உதவி வேண்டும் என்று எப்போது கேட்டாலும் செய்யும் அளவுக்கு, நீங்கள் ஏற்கெனவே உதவி செய்து அவர்களுடனான உறவை வளர்த்து வைத்திருக்க வேண்டும். இது, புதிதாக நண்பர்களை உருவாக்குவது அல்ல, கூட்டாளிகளை உருவாக்குவது.

7. எப்போதும் பர்ஃபெக்ட்!

ஆண்கள் தவறு செய்துவிட்டால் அதற்கான எதிர்வினையை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதே இல்லை. ஆனால் பெண்கள், நமக்கு வேலை தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ என்ற பதற்றத்திலேயே, எல்லாவற்றையும் பர்ஃபெக்டாக முடிக்க உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அதிக ஸ்ட்ரெஸ் ஆகி அதை வீட்டில் பிரதிபலிப்பது, வேலை போய்விடுமோ என்று பயந்துகொண்டு ரிஸ்க் எடுக்காமல் இருப்பது என... பர்ஃபெக்‌ஷன் ட்ராப்பில் (trap - பொறி) மாட்டிக்கொள்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

வேலையை பர்ஃபெக்டாக செய்வதால் மட்டும் வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறு நடந்துவிட்டால் என்னவாகுமோ என்று பயப்படாமல், ரிஸ்க் எடுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

8. கூட்டணிக்கு நோ!

ஓர் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே பெண்கள் சோஷியலைஸ் ஆக மாட்டார்கள். மீட்டிங்கில்கூட சந்தேகங்களைக் கேட்க மாட்டார்கள். அனைத்து விஷயங்களையும் நன்றாகக் கற்றுக்கொண்டு அதன்பிறகு, செயலில் இறங்க வேண்டும் என்று நினைப்பார்கள். முக்கியமாக, அங்கு இருப்பவர்களிடம் பேசவே மாட்டார்கள். இவற்றுக்கெல்லாம் பெரிய `நோ' சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு புதிய இடத்தில், மற்றவர்கள் நம்முடன் வந்து பேசும்வரை காத்திராமல், நீங்களே அனைவரிடமும் உரையாடலைத் தொடங்குங்கள். யாருடன் பழகினால் உங்களால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்பதை அறிந்து அவர்களுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இவர்களுடன் நீங்கள் கூட்டணிதான் வைக்கிறீர்களே தவிர, அவர்கள் நண்பர்கள் அல்லர் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு அடுத்தவர்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்பதை மறந்து, நீங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

பெண்கள்
பெண்கள்

9. நம்மைதான் சொல்கிறார்களோ..?!

யாரோ யாரையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தால்கூட, `நம்மையும் இப்படித்தானே பேசுவார்கள்..?' என்றோ, `நம்மை இப்படிப் பேசும்படி நடந்துகொள்ளக் கூடாது' என்றோ, குறிப்பிட்ட உரையாடல் முடிந்த பிறகும் பெண்கள் அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

`யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை, நான் சரியாகத்தான் இருக்கிறேன்' என்று நம்புங்கள். மேலும், ஒருவேளை உங்களைப் பற்றித் தவறாகவே நினைத்தாலும், அது அவர்களுடைய கருத்து என்று கடந்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்துங்கள்.

women
women

10. எப்போதும் ஸ்வீட்டாக இருக்க வேண்டும்! 

பெண்கள் பொதுவாகவே, மற்றவர்கள் தங்களைப் பற்றி நல்லவிதமாக நினைக்க வேண்டுமென்று ஸ்வீட்டாக நடந்துகொள்ள நினைப்பார்கள். இதனால் கரியர் மட்டுமல்லாமல், நிம்மதியும் பாழாகும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

எப்போதும், எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கவே முடியாது என்பதை உணருங்கள். தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால், நிச்சயமாக ஏதேனும் ஒரு தருணத்தில் விமர்சனத்துக்கு ஆளாகியே தீர வேண்டும். எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை மறந்து, நீங்கள் கூறவரும் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வையுங்கள்.

11. மற்றவர்களுக்கு முன்னுரிமை!

எப்போதும் விட்டுக்கொடுத்துவிட்டு அதிலேயே மனநிம்மதி அடைவது, உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வது போன்ற விஷயங்களைச் செய்வதால் மற்றவர்கள் உங்களிடம் உரிமை எடுத்துக்கொள்வார்கள்; சக ஊழியர்கள் உங்களை உரிய தகுதி உடையவர் என்று நினைக்க மாட்டார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது உங்கள் வேலை இல்லை என்பதை உணர வேண்டும். உங்களது வார்த்தைகளிலும் பேசும் தொனியிலும் கூர்மை வேண்டும்.

women
women

12. ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆவாது!

ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால் அதை நினைத்து நினைத்துப் புழுங்குகிறார்கள், அது தன்னால்தான் நடந்தது என்று தங்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள் பெண்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

தவறு நடந்துவிட்டதா? அதைச் சரிசெய்யுங்கள். இயலவில்லை என்றால் அதிலிருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக்கொண்டு நகர வேண்டும் என்பதைத் தீர்க்கமாக நம்புங்கள். நடந்ததை நினைத்து கடந்த காலத்திலேயே சுழன்றுகொண்டு இருக்காதீர்கள்.

கோல்டுஸ்மித்தும் ஹெல்கெசனும் குறிப்பிட்டிருக்கும் பழக்கங்களில் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவற்றைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள். யாருக்கும் சளைத்தவர் அல்லர் நீங்கள்... வானம் வசப்படட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism