Published:Updated:

பூஞ்சோலையில் கூவிய பூங்குயில்

சென்னையில் தேனாறு !

ரேவதி படங்கள் : பொன்.காசிராஜன்

பூஞ்சோலையில் கூவிய பூங்குயில்

எட்டு நாட்கள் திருவிழாவான 'லஷ்மண் ஸ்ருதி’யின் 'சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, வழக்கம்போல இந்த ஆண்டு டிசம்பர் சீஸனில் சென்னை, காமராஜர் அரங்கில் நடந்தேறியது. அதில் களமிறங்கி கலக்கிய குயில்கள் மற்றும் மயில்களின் சந்தோஷப் பகிர்வு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...’ என்று தேவகான குரலில் குறையில்லாமல் பாடி, பிரமிக்க வைத்துக் கொண்டிருந்த வாராகி, கனடா நாட்டில் கல்லூரி மாணவி. ''எட்டு வயசுல இருந்து நான் பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். என் குரு ராஜி கோபாலகிருஷ்ணன். அவங்க மே மாசத்துல இருந்து செப்டம்பர் வரைக்கும் கனடால இருப்பாங்க. அப்புறம் ஆன்லைன்லதான் பாட்டு கத்துக்கறேன். பாட்டைத் தவிர, பரதம், வயலின், மிருதங்கம்னு எல்லா இன்ஸ்ட்ரூமென்டையும் கத்துட்டு வர்றேன். நம்ம பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி போட்டுக்கிட்டு இத்தனை பெரிய மேடையில பாடறப்போ, சந்தோஷத்துல பறக்கணும் போல இருக்கு!'' என்கிறார் இந்த ஃபாரின் சிட்டு!

##~##

விழி அசைவில் வர்ண ஜாலம் நிகழ்த்தும் பரதநாட்டியக் கலைஞர் மஹாலட்சுமி, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.டெக். மாணவி. ''பன்னிரண்டு வயசுல இளையராஜா சாரோட 'திருவாசகம்’ ஆல்பத்துல 'பூ எரு கோணும்...’ பாட்டுக்கு ஆடியிருக்கேன். சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவுல ஆடினதை மறக்கவே முடியாது. பரதத்தை எல்லாரும் புரிஞ்சு ரசிக்கணும்ங்கறதுக்காக, எல்லாமே தமிழ்ப் பாட்டா தேர்ந்தெடுத்து ஆடினேன். நல்ல வரவேற்பு!'' என்கிறார் உற்சாகமாக!

'தாம் தீம் தரன தாம்’ காளிங்க நர்த்தன தில்லானாவுக்கு துள்ளிக் குதித்து நர்த்தனமாடிய சுபத்ரா மாரிமுத்து, சட்டக்கல்லூரி மாணவி. ''பிரபல நடனக் கலைஞர்களோட நாட்டிய நுணுக்கத்தைப் பார்த்து, நானே வீட்டுல பிராக்டீஸ் பண்ணுவேன். 12-வது படிக்கிறப்பவே, தி.நகர்ல 'அமிர்தவர்ஷிணி’ ஒரு நாட்டியப் பள்ளியை ஆரம்பிச்சுட்டேன். சபாக்கள்ல ஆடறதைவிட, கோயில்கள்ல ஆடறப்ப ஒரு தெய்விக உணர்வு ஏற்படும். அதனால, நிறைய கோயில்ல கச்சேரிகள் பண்ணியிருக்கேன். இந்த வருஷம் தபேலா, கடம், கஞ்சிரா, மோர்சிங்னு நான்கு விதமான இன்ஸ்ட்ரூமென்டை வெச்சு, புதுமையா ஒரு ஃப்யூஷன் ஆடினேன். நிறைய பாராட்டுகள்!'' கண்கள் மின்ன சொல்கிறார்!

பூஞ்சோலையில் கூவிய பூங்குயில்

நாதஸ்வரம், தவில், வயலின், டிரம்ஸ், கீபோர்டு, மிருதங்கம் என பல்வேறு இசைக் கருவிகளை வைத்து, 'போ சம்போ...’ பாடலுக்கு அற்புதமாக நடனமாடி அசத்திய மீனாட்சி ராகவன், செங்கல்பட்டில் 'வினாயகா நாட்டியலயா’ என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார். ''என் பெற்றோரோட ஊக்கமும், என் கணவரோட ஒத்துழைப்பும்தான் இன்னிக்கு எனக்கான ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. பரதம், மேல்தட்டு மக்கள் மட்டுமே ஆடற நடனம் இல்லைங்கறதை மாத்தற விதமா, நானூறுக்கும் மேற்பட்ட விவசாய, மீனவ குழந்தைகளுக்கு பரதம் கத்துக் கொடுக்கிறேன்'' என்கிறார் இந்த குரு!

குரலில் வெண்ணெயைக் குழைத்து தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி, அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்து சென்ற கிருத்திகா, பத்மா சேஷாத்ரி பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி! ''ஸ்கூல்ல பாட்டுப் போட்டியில கலந்துட்டு பிரைஸ் வாங்கினப் போதான், 'நம்மால நல்லா பாடமுடியும்’ங்கிற நம்பிக்கையும் ஆர்வமும் வந்தது எனக்கு. முதல்ல மஞ்சுளா ஸ்ரீனிவாசன் கிட்ட பாட்டு கத்துக்கிட்டேன். இப்ப லால்குடி ஜெயராமன் சார்கிட்ட பாட்டும், வயலினும் கத்துக்கிறேன். இந்த வருஷம் போர்டு எக்ஸாம்ங்கிறதால நிறைய கச்சேரிக்கு வாய்ப்புகள் வந்தும், பத்து கச்சேரி மட்டும்தான் ஒப்புக்கிட்டேன்!'' என்கிறார் பரீட்சை நெருங்கும் தவிப்புடன்!

தமிழ் விருத்தங்களுடன், அருணகிரி நாதரின் திருப்புகழ், ஹிந்துஸ்தானி இசையில் அபங்கம் என அஞ்சரை கட்டை ஸ்ருதியில் அசத்தும் ஜெயஸ்ரீ சேலத்துப் பெண்; சிவில் இன்ஜினீயர்!

''ஏழு வயசுல இருந்து பாட்டு கத்துக்கறேன். என் முதல் குரு, சேலம் துரைசாமி அய்யங்காரோட மகள் வேதவல்லி. அப்புறம், லலிதா ராமசாமி, கல்கத்தா கிருஷ்ணமூர்த்தினு பட்டியல் நீண்டுட்டே இருக்கு. நிறைய இசை சி.டி-க்கள், ஆல்பங்கள்னு பண்ணியிருக்கேன். படிப்பு, வேலைனு சக்கரமா சுழல்ற வழக்கமான வாழ்க்கையைத் தாண்டி, மனசுக்கு ஆத்ம திருப்தியை தர்ற இசையில இன்னும் நிறைய சாதிக்கணும்!'' என்கிறார் ஜெயஸ்ரீ ஆர்வம் பொங்க!  

பூஞ்சோலையில் கூவிய பூங்குயில்

'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்று மிஷ்ரகாபி ராகத்தில், தேவகான குரலில் பாடி அசத்திய லாவண்யா, இசை மேதை டி.கே. பட்டம்மாளின் கொள்ளுப் பேத்தி. பாட்டி, சித்தி, அம்மா, நான் இணைஞ்சு.. 'டி.கே.பி. பரம்பரா’னு 2000-மாவது வருஷத்துல நான்கு தலைமுறை கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினோம். அப்ப எனக்கு ஏழு வயசு. அதுதான் என்னோட முதல் கச்சேரி. அதுலயிருந்து என்னோட முழு மூச்சு சங்கீதம்தான். குயின் மேரீஸ்ல பி.ஏ. மியூஸிக் படிக்கறேன். கச்சேரிக்குனு தனியா 30 தாவணி செட் வெச்சிருக்கேன். இந்த சீஸன்ல ஏழு கச்சேரி புக் ஆச்சு. நான் தலையாட்டி பாடற ஸ்டைல் நித்யஸ்ரீ சித்தியை நினைவு படுத்தறதா எல்லாரும் சொல்றாங்க. பாட்டும் அவங்கள மாதிரி பாடினா... அது என் பாக்கியம்!'' என்கிறார் பணிவாக!

பூஞ்சோலையில் கூவிய பூங்குயில்

நாட்டை ராகத்தில் 'ஜெய ஜெயா ஜெய ஜானகி காந்த...’ பாடலை வெங்கல குரலில் பாடி பரவசப்படுத்திய கே.பி. நந்தினி... சென்னை, எஸ்.ஐ.டி. காலேஜில் சைகாலஜி மூன்றாம் ஆண்டு மாணவி. ''நான் ஒரு வயலினிஸ்ட்டும்கூட. அபஸ்வரம் ராம்ஜி சாரோட வயலின் ட்ரூப்ல இருந்தேன். இந்த அளவுக்கு நான் உயர்றதுக்கு அவரும் முக்கிய காரணம். நிறைய வெளிநாடுகளுக்குப் போய் கச்சேரி பண்ணியிருக்கேன். இத்தாலியில இருக்குற ஃப்ளாரன்ஸ் நகரத்துல, மியூஸிக் லெஜண்ட் 'ஜுபின் மேத்தா’வுக்கு முன்னயும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முன்னயும் வயலின் வாசிச்சிருக்கேன். இதெல்லாம் என் வாழ்நாள்ல மறக்க முடியாத கச்சேரிகள்! இந்த டிசம்பர்ல பாட்டு, வயலின்னு 35 மேடை கச்சேரிகள் ஏறியிருக்கேன். ஒரே நாள்ல மூணு கச்சேரிகள்... நான் கொஞ்சம், ரொம்ப பிஸி!'' என குறும்பாகச் சிரிக்கிறார் நந்தினி!

இனிய இசை வரவுகள்!