Published:Updated:

விளையாட்டு முயற்சி... விஸ்வரூப வெற்றி !

'டிரைவிங் ஸ்கூல்' துர்காவின் நம்பிக்கை ஓட்டம் !

விளையாட்டு முயற்சி... விஸ்வரூப வெற்றி !
##~##

''கல்யாணம் முடிஞ்சு 12 வருஷம் வரைக்கும் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. திடீர்னு டி.வி.எஸ். சேம்ப் கத்துக்கிட்டப்போ, 'சென்னையில நாமதான் முதல் முதலா பெண்களுக்கான டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறோம்’னு நெனச்சுக்கூடப் பார்த்ததில்ல. இப்போ 15 டூ வீலர்கள், 6 கார்கள்னு பரபரப்பா ஓடிட்டிருக்கு என் டிரைவிங் ஸ்கூல். நானும்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- வார்த்தைக்கு வார்த்தை உற்சாகம் கோத்துப் பேசுகிறார் துர்கா... சென்னையின் பெண்களுக்கான முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியான, அடையாறில் உள்ள 'துர்கா டிரைவிங் ஸ்கூல்’ உரிமையாளர். 15 வருட டிரைவிங் அனுபவங்களை ரிவர்ஸ் கியரில் பகிர்ந்து கொண்டார் துர்கா!

''பிறந்தது கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமம். முப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன கல்யாணமாச்சு. சென்னையில கெமிக்கல் ஃபேக்டரியில இன்ஜினீயரா வேலை பார்த்த சந்திரசேகரோட மனைவியானேன். பட்டணத்தைப் பார்த்து மிரள்ற பட்டிக்காட்டுப் பொண்ணாதான் சென்னைக்கு வந்தேன். ரெண்டு பசங்க பிறந்தாங்க. கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட, அடையாறுல இருந்து கே.கே நகர்ல இருக்கற ஸ்கூலுக்கு பசங்கள கூட்டிட்டுப் போக, வர ரொம்ப கஷ்டப்பட்டேன். லீவுல வந்த கணவர்... 'நீ டூ வீலர் ஓட்டக் கத்துக்கிட்டா வசதியா இருக்கும்’னு புதுசா டி.வி.எஸ். சேம்ப் வாங்கி, ஓட்டவும் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சார். அதுவரைக்கும் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாத நான் 'ஐயோ... அம்மா’னு மிரண்டு போனேன். அலுத்துப் போனவர், வெளிநாட்டுக்கு கிளம்பிட்டார்...'' என்பவர், அதற்குப் பின்தான் தானாகவே கையூன்றி கரணம் பாய்ந்திருக்கிறார்.

விளையாட்டு முயற்சி... விஸ்வரூப வெற்றி !

''அவரோட பேன்ட்டை போட்டுக்கிட்டு, அதுமேல சேலை கட்டிட்டுக்கிட்டு, வண்டிய எடுத்துட்டு பக்கத்துல இருக்கற கிரவுண்டுக்கு உருட்டிட்டுப் போய், ஓட்டப் பழகினேன். விழுந்து, எழுந்து, சைலன்ஸர் சுட்டுனு வீரத் தழும்புகளோட ஒருவழியா இருபது நாள்ல யாரோட துணையும் இல்லாம வண்டி ஓட்டக் கத்துக்கிட்டப்போ, வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு!'' எனும்போது விரிகின்றன துர்காவின் விழிகள்.

''பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னைப் பாராட்டினதோட, 'ஏய்... எங்களுக்கும் கத்துக் கொடுப்பா’னு கேட்க, பெருமை பிடிபடல. 'பெட்ரோல் மட்டும் நீங்க போடுங்க’னு சொல்லி மீரா, ராதா, மாலானு என் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் கத்துக் கொடுத்தேன். தெரிஞ்ச ஆட்டோக்காரர் ஒருத்தர், 'நல்லா வண்டி ஓட்டறீங்க... சரி! அப்படியே லைசென்ஸும் எடுத்துட வேண்டியதுதானே..?!’னு கேட்க, அப்போதான் லைசென்ஸ் எடுக்கணும்கற விஷயமே தெரியும்'' என்றவருக்கு அதன் பிறகு சூப்பர் பிரேக்!  

விளையாட்டு முயற்சி... விஸ்வரூப வெற்றி !

''மாமனாரும், மாமியாரும் உடம்பு சரியில்லாம ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் இறந்து போயிட்டாங்க. அவர் வெளிநாட்டுல இருக்க, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிட, 'யாருக்காச்சும் டிரைவிங் கத்துக் கொடுத்தாலாவாது பொழுது போகுமே’னு தோணுச்சு. 'பெண்களுக்குனு தனியா டிரைவிங் சொல்லிக் கொடுக்க யாரும் இல்ல’னு என் தோழிகளுக்கு டூ வீலர் பழகிக் கொடுத்த நாட்கள்ல நாங்க பெருமூச்சோட பகிர்ந்துகிட்டது ஞாபகம் வந்துச்சு. 'நிச்சயம் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்’ங்கற நம்பிக்கையோட 'டூ வீலர் கற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் அணுகவும்’னு சின்னதா பேப்பர்ல விளம்பர கொடுத்தேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க... அடுத்த நாளே வீடு தேடி அறுபது பெண்கள் வந்துட்டாங்க! எங்ககிட்ட இருந்ததோ ஒரே டி.வி.எஸ். சேம்ப். ஆடிப்போயிட்டேன்! வந்திருந்த பெண்கள்ல ஒருத்தர் கணவரை இழந்தவங்க. 'வீட்டு வேலைகள நானே பார்க்க வேண்டியது இருக்குங்கறதால, வண்டி ஓட்டக் கத்துக்கிட்டா உபயோகமா இருக்குமேனு சொன்ன அவங்களைத்தான், முதல் ஸ்டூடன்ட்டா முடிவு செஞ்சு, டிரைவிங் கத்துக் கொடுத்தேன்!'' என்றவருக்கு, அதன்பின் தொழிலில் எல்லாமே சுபம்தான்!

''முதல்ல... ஒரு டிரைவிங் டீச்சரா என்னை மெருகேத்திக்கிட்டேன். வண்டியோட மெக்கானிஸம், டிராஃபிக் ரூல்ஸ், லைசென்ஸ் வாங்கறதுக்கான வரைமுறைகள்னு எல்லாத்தையும் தேடித் தெரிஞ்சுக்கிட்டேன். நகைகள வித்து டிரைவிங் கிளாஸுக்காக ஒரு 'சன்னி’ வண்டி வாங்கினேன். ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு ஆள்னு பக்கத்து கிரவுண்டுக்கு கூட்டிட்டுப் போய் நிக்க வெச்சு, முதல்ல வண்டி ஓட்டறதைப் பத்தின பயத்தைப் போக்க கவுன்சிலிங் கொடுத்தேன். கிளட்ச், பிரேக், டிராஃபிக் ரூல்ஸ்னு எல்லாத்தையும் பதற்றம் இல்லாம சொல்லிக் கொடுத்தேன். 'அடையார்ல பொண்ணுங்களுக்கு, ஒரு லேடியே டிரைவிங் சொல்லிக் கொடுக்கறாங்களாம்’னு பரவலா பேசிக்க ஆரம்பிக்க, வாய்வழி விளம்பரத்தாலேயே கூட்டமும் வருமானமும் கூடிக்கிட்டே இருந்துச்சு!'' என்பவர், தொழிலுக்கான நெளிவு சுளிவுகளைத் தொடர்ந்து பழகியிருக்கிறார்.

'பொழுது போகலயேனு ஆரம்பிச்ச பிஸினஸ், ஒரு கட்டத்துல 'பொழுது பத்தலையே...’னு நான் வருத்தப்படற அளவுக்கு வளர்ந்துடுச்சு. வெற்றி தந்த உற்சாகம் தொடர்ந்து இயங்க வெச்சுட்டே இருந்தது. 'எங்க மம்மி எப்பவும் பிஸி!’னு பிள்ளைங்க பெருமைப்பட்டுக்கிட்டாங்க. வெளிநாட்டுல இருந்து லீவுக்கு வர்ற என் கணவர் என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதோட, 'ஹலோ... துர்கா டிரைவிங் ஸ்கூலா’னு தினமும் வீட்டுக்கு வர்ற போன் கால்ஸை அட்டெண்ட் பண்ணி அசந்தே போயிட்டார்!'' என்றவர், தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

''ஒரு கட்டத்துல என்னை மாதிரியே நிறைய பேர் களத்துல இறங்க ஆரம்பிச்சாங்க. 'போட்டி உருவாகுது’னு புரிஞ்ச நிமிஷத்துலிருந்தே கார் கத்துக்கிட்டு, ஃபோர் வீலரும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அதுக்கும் நல்ல வரவேற்பு. தொடர்ந்த என் உழைப்பால என் டிரைவிங் ஸ்கூலுக்கு கிடைச்ச நல்ல பேரை இன்னிக்கு வரைக்கும் நிலைக்க வெச்சுட்டிருக்கேன்!'' எனும் துர்காவின் வார்த்தைகளில் பெருமை!

''கணவர் சென்னையிலயே செட்டில் ஆகி, டிரைவிங் ஸ்கூலோட நிர்வாகத்தை கவனிச்சுக்கறார். முதல் பையன் ஒரு கம்பெனியில ஜி.எம். ரெண்டாவது மகன் டிரைவிங் கிளாஸுக்கு வந்த ஒரு பொண்ணையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்...'' என்று குடும்பம் பற்றிப் பகிர்ந்தவர்,

''கையில பத்து பைசா மூலதனம் இல்லாத கிராமத்து பெண்ணான நான், இன்னிக்கு சிட்டியில பிரபலமான டிரைவிங் ஸ்கூலுக்கு ஓனரா இருக்க முடியுது. 'நம்மால முடியும்...’ங்கற நம்பிக்கை மட்டும்தான் என்னோட ஒரே முதலீடு. அது இருந்தா போதும்... எல்லாராலயும் எதுவும் முடியும்!''

- கம்பீரப் புன்னகை பூத்தார் துர்கா!

ம.பிரியதர்ஷினி
படங்கள்: வி.செந்தில்குமார்