Published:Updated:

''புள்ளைங்களை தொட்டில்ல போட்டுட்டு புலியை வளர்த்தேன்'' - வண்டலூர் பராமரிப்பாளர் நாகம்மாள்

ஆ.சாந்தி கணேஷ்
''புள்ளைங்களை தொட்டில்ல போட்டுட்டு புலியை வளர்த்தேன்'' - வண்டலூர் பராமரிப்பாளர் நாகம்மாள்
''புள்ளைங்களை தொட்டில்ல போட்டுட்டு புலியை வளர்த்தேன்'' - வண்டலூர் பராமரிப்பாளர் நாகம்மாள்

பல வீடுகளில் செல்லங்களாக நாய், பூனை என வளர்ப்பார்கள் இல்லையா? அப்படித்தான் எங்கள் வீட்டில் சொந்தப் பிள்ளைகளை வளர்ப்பதுபோல இங்கே இந்தப் பிள்ளைகளை வளர்க்கிறோம்'' என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள் நாகம்மாள் மற்றும் தேவகி. இந்தப் பெண்கள் சொல்லும் 'அந்தப் பிள்ளைகள்', சிங்கம் மற்றும் புலி.

வண்டலூர் மிருகக்காட்சி சாலையில், நாம் பார்க்கும் புலிகளையும் சிங்கங்களையும் பராமரிக்கும் பணியில் இருப்பது இவர்கள்தான். காலை 8 மணிக்கு வேலைக்கு வந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை கவனித்துவிட்டு, 11 மணிவாக்கில் டீ குடிக்க ஓய்வாக மரத்தடியில் உட்காருகிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். இங்கே வேலைக்குச் சேர்ந்த கதை, மிருகக்காட்சி சாலைக்கு வந்த சிங்கக்குட்டி, புலிக்குட்டிகளை வளர்த்த கதை என அவர்கள் சொன்ன ஒவ்வொரு தகவலும் படு சுவாரஸ்யம்... முதலில் நாகம்மாள்.

''குடும்ப கஷ்டம் தாங்கமுடியாமல்தான் வேலைக்கு வந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே வண்டலூர் ஜூ இருந்ததால், இங்கே வேலைக்குச் சேர்ந்துட்டேன். வேலைக்குச் சேர்ந்து 30 வருஷத்துக்கும் மேலே ஆயிடுச்சு. காலையில் எட்டு மணிக்கே வேலைக்கு வந்துடணும். இங்கே வந்துட்டா, வீட்டில் புள்ளங்களைப் பார்த்துக்க ஆள் இருக்காது. அதனால், பையனை இடுப்பிலும், பொண்ணை கையிலும் புடிச்சுக்கிட்டு வந்திருவேன். இங்கே மரத்துல தொட்டில் கட்டி ரெண்டுப் புள்ளைங்களையும் அதுல போட்டுட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன்'' என்கிற நாகம்மாளுக்கு ஆரம்பத்தில் தோட்ட வேலைதான் கொடுக்கப்பட்டது. பிறகு, மான்களைப் பராமரித்தவர், உறுமும் புலிகளுக்கு புரமோஷன் பெற்றிருக்கிறார்.

வெயில் மெல்ல மெல்ல அதிகமாக ஆரம்பித்தது. பார்வையாளர்கள் கூட்டமும் அதிகமாக ஆரம்பித்தது. வெட்டவெளியில் சுற்றிக்கொண்டிருந்த புலிகள், ஒவ்வொன்றாகக் கூண்டுக்குள் நுழைந்தபடி, 'உர் உர்' என்று உறும ஆரம்பிக்க, ''இங்கேதான் இருக்கேன். எதுக்கு இவ்ளோ சத்தம்?'' என அதட்டியபடி கூண்டுகளின் அருகே செல்கிறார் நாகம்மாள். நாமும் பின்தொடர்ந்தோம். 

பத்மா, தேவி, ஆதித்யா, கர்ணா, ஆர்த்தி, நேத்ரா, வித்யா என்று வரிசையாகப் புலிகளின் பெயரைச் சொல்லி அழைக்கிறார். எல்லாமே இவர் ஊட்டி வளர்த்த உறவுகள். 'கூப்பிட்டாயா' என்பதுபோல ஒன்று திரும்பிப் பார்க்கிறது. இன்னொன்று ஓடிவந்து கம்பிகள் வழியாக நாக்கைவிட்டு கையை நக்கிக் கொடுக்கிறது. தூரத்திலேயே நின்றிருந்த ஒரு புலியை ''டேய் ஆதித்யா குளிக்கலாம் வாடா'' என்கிறார். உடனே, மண் தரையில் நன்றாக உருண்டு புரண்டு எழுந்து வந்து, 'குளிக்க ரெடிம்மா' என்கிறது. 

''தேவி வாடி'' என்றதும், உர் எனப் பெரிதாக உறுமிவிட்டு முகத்தைத் திருப்பிச் செல்கிறது ஒரு பெண் புலி. இப்படி முகத்தைக் காட்டாமல் உறுமினால், அது சின்னக் கோபத்தில் இருக்கிறது என்று அர்த்தமாம். பெற்ற பிள்ளைகளின் பாடிலாங்வேஜை வைத்தே மனநிலையைக் கண்டுபிடிக்கும் அம்மாபோலத்தான் நம் கண்களுக்கு தோன்றினார் நாகம்மாள்.

அடுத்து, சிங்கங்களைப் பராமரிக்கும் தேவகி.

என்றபடி கூண்டுக்கு அருகே அழைத்துச் சென்றார். ''டேய் வீரா, இங்கே வாடா'' என்று குரலெடுத்து அழைத்த அடுத்த நிமிடம், வெட்டவெளியில் காய்ந்துகொண்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று, திமுதிமு என ஓடிவந்து கூண்டின் கம்பிகளின் வழியே தேவகியின் கைகளில் கன்னத்தை உரசி, விரல்களை நாவால் தடவி தடவிக் கொஞ்சுகிறது.

30 வருடங்களுக்கு முன்பு வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வேலை பார்த்துவந்த தேவகியின் கணவர், மான் ஒன்று குத்தியதில் அகால மரணம் அடைந்துவிட்டார். கருணை அடிப்படையில் தேவகிக்கு வேலைக் கிடைத்தது. இவரும் செடிகளைப் பராமரிக்கும் வேலையில்தான் சேர்ந்தார். பறவைகள், கரடி, லாமா எனப் படிப்படியாக பராமரித்து, சிங்கங்களின் தாயாகி இருக்கிறார். தற்போது, வீராவுடன் சேர்ந்து ஜான்சி, விஷ்ணு, சிவா என்று வளர்ந்த சிங்கங்களையும், பால் மணம் மாறாத ஒரு பிஞ்சு சிங்கத்தையும் பராமரித்து வருகிறார்.

இவ்வளவு பெரிய கம்பீரமான சிங்கத்தை அருகில் பார்ப்பவர்களுக்கு இதயம் ஒரு நொடி நின்றுதான் துடிக்கும். ஆனால் தேவகியோ, ''டேய் நாக்கு சொரசொரங்குதுடா'' என்று சிரித்தவாறு நம் பக்கம் திரும்பினார். ''இவனுக்கு அம்மா, அப்பா யாரும் கிடையாதுங்க. பொறந்த குட்டியா என்கிட்ட கொண்டுவந்து கொடுத்தாங்க. புட்டிப்பால் குடிச்சு வளர்ந்தான். ரொம்ப சுட்டி. நான் பெருக்கிக் கூட்டி வேலைப் பார்த்துக்கிட்டிருந்தா, காலுக்கு நடுவுல நடுவுல ஓடி விளையாடுவான். சரியான சேட்டைக்காரன். வந்த ஒரு மாசத்துக்கு அப்புறம், கோழிக் கறியில் மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து, சின்னச் சின்னதா பிச்சு, தட்டுல போட்டுட்டு கூப்பிடுவேன். வந்து நிற்பான். அவனே சாப்பிடட்டும்னு இன்னொரு வேலைப் பார்க்கப் போனால் அவ்வளவுதான். தட்டைத் தட்டி விட்டுட்டு ஓடிருவான். அதனால், சாப்பிட்டு முடியற வரைக்கும் அங்கேயே இருப்பேன். ஆறு மாசம் குழந்தையா இருந்தப்போ, ஒருதடவை என்னைக் கடிச்சுட்டான்'' என்கிறவரின் புன்னகை குரலில், பெற்ற பிள்ளையின் சேட்டைகளைச் சொல்லும் பெருமித தொனி மிளிர்கிறது.