Election bannerElection banner
Published:Updated:

கல்யாணி டீச்சருக்காக காத்திருக்கும் க்யூ !

வாழ்க்கையை வளப்படுத்திய டியூஷன் சென்டர் இரா.வினோத் படங்கள்: சு.குமரேசன்

##~##

''வீட்டுலயே டியூஷன் எடுக்குறேன்...''

- பக்கத்து வீட்டுப் பட்டதாரி அக்காக்கள் சிலர் இப்படிச் சொல்லக் கேட்டிருப்போம். அப்படி 20 குழந்தைகளுக்கு வீட்டில் டியூஷன் எடுக்க ஆரம்பித்தவர்தான் கல்யாணி. இன்று இவரின் 'கெய்சர் இன்ஸ்டிடியூட் டியூஷன் சென்டர்', பெங்களூரு மாநகரின் கிரேடு ஒன் டியூஷன் சென்டர்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. வறுமையின் பிடியில் இருந்து மீள்வதற்காக டியூஷன் எடுக்க ஆரம்பித்த கல்யாணிக்கு, அவர் மற்றவர்களுக்குக் கற்றுவித்து வரும் கல்வி, இன்று நிறைவாக செல்வம் சேர்த்துக் கொண்டிருப்பது... சென்டம் வெற்றி!

பள்ளிக்கூடங்களுக்கே சவால் விடும் வகையில் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தேர்ச்சி சதவிகிதம், குடும்பச் சூழ்நிலை என டியூஷன் வகுப்பில் சேர வரும் மாணவன் பற்றிய பல காரணிகளை ஆராய்ந்தே... இங்கே சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால், பெங்களூரு, மாகடி சாலையிலுள்ள இந்த டியூஷன் டென்டரில் அட்மிஷனுக்காக சாலை மறித்து நிற்கிறது க்யூ!

''வணக்கம்! வாங்க!'' என்று பச்சைத் தமிழில் நம்மை வரவேற்ற கல்யாணி,

கல்யாணி டீச்சருக்காக காத்திருக்கும் க்யூ !

''நான் தமிழ்ப் பெண்தான். சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி. கணவரோட ஊர், திருவண்ணா மலை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூருதான். நிறையப் படிக்கணும்னு ஆசை. குடும்ப வறுமை காரணமா பி.எஸ்சி. வரைதான் முடிஞ்சுது. ஸ்கூல் படிக்கறப்ப, 'என்னாவாகப் போறே?’னு கேட்டா, 'டீச்சர்!’னு சொல்லுவேன். டிகிரி முடிச்சதும் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல, 2,500 ரூபாய் சம்பளத்தில் டீச்சர் வேலையில சேர்ந்தேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்த பிறகு... அக்கா பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித் தருவேன். சுமாரா படிச்சுட்டு இருந்தவங்க, திடீர்னு பிரைட் ஸ்டூடன்ட்டா மாறினதைப் பார்த்துட்டு, தெருப் பிள்ளைங்கள்லாம் டியூஷனுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க'' என்பவருக்கு, கொஞ்ச நாட்களிலேயே திருமணமும் முடிந்திருக்கிறது.

''என் கணவர், 'நீ மைக்ரோ பயாலஜி படிச்சிருக்கே. என்ன ஐடியால இருக்கே?’னு கேட்டார். ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு சொன்னேன். நான் ஏதாவது பிரைவேட் கம்பெனியில் பல ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்குப் போயிருக்கலாம். ஆனா, என்னோட விருப்பத்தையும், முடிவையும் மதிச்சு, பணம் புரட்டி, திருவண்ணாமலையில் பிரைமரி ஸ்கூல் ஆரம்பிச்சார். ஆனா, அதுல பயங்கர லாஸ். நிறைய கஷ்டப்பட்டோம்...''

- அந்த நேரத்து வேதனை இப்போதும் கசிகிறது அவர் கண்களில்.

கல்யாணி டீச்சருக்காக காத்திருக்கும் க்யூ !

''மீண்டும் பெங்களூருவுக்கு வந்து, ஏற்கெனவே வேலை பார்த்த ஸ்கூல்லயே சேர்ந்துட்டேன். கூடவே பி.எட். படிப்புலயும் சேர்ந்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு இன்னொரு இடி... தனியார் நிறுவன வேலையில இருந்த கணவர், 'ட்ரை-ஐ’ (ஞிக்ஷீஹ்மீஹ்மீ) பிரச்னை வந்து கஷ்டப்பட்டார். ஏறக்குறைய பார்வை பறிபோன மாதிரிதான். ஏற்கெனவே ஸ்கூல் நடத்தின நஷ்டத்தோட... மருத்துவ சிகிச்சைக்காக வேற லட்சக்கணக்குல செலவு. அப்படியும் அவரால் வேலைக்  குப் போக முடியாத சூழல். இந்தச் சமயத்துல நான் கர்ப்பிணி வேற...''

- தழுதழுக்கிறது குரல்.

''ஸ்கூல்ல தர்ற 2,500 ரூபாய் சம்பளம், டியூஷன் மாணவர்கள் 20 பேர் தந்த ஃபீஸ் இதுதான் எங்க கஷ்டத்துக்கு உதவிச்சு. அதனால, டியூஷன் சென்டரா விரிவுபடுத்த முடிவெடுத்தோம். கணவரோட படிப் புக்கு பண உதவி செய்தவர், 'பீட்டர் கெய்சர்'ங்கிற தென்னாப்பிரிக்கக்காரர். அதனால டியூஷன் சென்டருக்கு அவர் பேரையே வெச்சோம். 2006-ல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 30 பேரை வெச்சு சென்டரை ஆரம்பிச்சோம். அவங்க எல்லாரும் முதல் வகுப்புல தேர்ச்சி அடைஞ்சாங்க. மாவட்ட அளவுல முதல் மதிப்பெண் வாங்கின ஒரு மாணவி, 'என் வெற்றிக்குக் காரணம் கெய்சர் டியூஷன் சென்டர்’னு பேட்டி கொடுக்க, அடுத்த வருஷமே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தாங்க.

பிலோ ஆவரேஜ் மாணவர்களை திருப்தியா மார்க் எடுக்க வெச்சோம். ஆவரேஜ் மாணவர்களை 80% எடுக்க வெச்சோம். டாப் ஸ்கோர் மாணவர்களை டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட்னு ரேங்க் எடுக்க தயார்படுத்தினோம். இன்னிக்கு 350 மாணவர்கள், 4 ஆசிரியர்கள்னு வளர்ந்திருக்கோம்!'' எனும் இவரின் சென்டரில்... எட்டாம் வகுப்பில் இருந்து பி.யூ.சி. செகண்ட் இயர் வரை (நம்மூர் ப்ளஸ் டூ) டியூஷன் எடுக்கப்படுகிறது.

கல்யாணி டீச்சருக்காக காத்திருக்கும் க்யூ !

''டியூஷன் சென்டரோட லோகோ, 'இது இரண்டாவது பள்ளிக்கூடம், இரண்டாவது வீடு’! வருடத்தில் 365 நாட்களிலும் காலை, மாலைனு இருவேளையும் டியூஷன் நடக்கும். தீபாவளிக்குக்கூட லீவு கிடையாது. மாலையில் அரை மணி நேரம் மட்டுமே பர்மிஷன். ஸ்கூல் மாதிரியே இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், கல்ச்சுரல்ஸ், ஆண்டு விழா, கல்வி சுற்றுலா, விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கலந்தாய்வுனு எல்லாம் நடத்துவோம்.

600 மாணவர்கள் விண்ணப்பிச்சா, 300 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து டியூஷன்ல சேர்த்துக்கிறோம். அந்த அளவுக்குதான் எங்களால இங்க நடத்த முடியுது. அடுத்த வருஷத்தில் இருந்து கொஞ்சமும் குவாலிட்டி குறையாமல், இரண்டு கிளைகளைத் தொடங்க இருக்கோம். கூடவே, டிகிரி, போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் டியூஷன் எடுக்கற ஐடியாவும் இருக்கு!''

- உறுதியான வார்த்தைகளில் சொல்லும் கல்யாணி,  தற்போது பி.ஹெச்டி. படித்துக் கொண்டிருக்கிறார்.

''கணவருக்கு கண் பிரச்னை, ரெண்டு வயசு மகனுக்கு நிமோனியா, ஆஸ்துமா பிரச்னை. என்னுடைய படிப்பு... இப்படி பலபல பிரச்னைகள் கழுத்தை நெரிச்சுது. என் ஒரே மகனோட முதல் பிறந்த நாளுக்கு, ஒரே ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுக்க, ஒரு ரூபாய்கூட இல்லாத கஷ்ட சூழல். அதிலிருந்து இன்னிக்கு இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன்னா, 'டியூஷன் சென்டர்’தான் ஒரே காரணம். ஏழ்மையின் வலி எனக்கு நல்லாவே தெரியும்ங்கிறதால, வறுமைச் சூழல்ல இருந்து வர்ற மாணவர்களுக்கு இலவசமாதான் டியூஷன் எடுக்குறேன்!

என் சித்தப்பா இறந்தப்போ, தேர்வு சமயம்ங்கிறதால சாவுக்குக்கூட போக முடியல. அதனால் இன்னிக்குவரைக்கும் அந்தக் குடும்பம் எங்ககூட பேசலை. இப்படி இந்தப் பொறுப்பால நான் போகாமல் விட்ட விசேஷங்கள் பல. ஆனா, இந்த வெற்றிக்கான விலைதான் அதுங்கிறதால, வருத்தத்தோட அதையெல்லாம் நான் ஏத்துக்கப் பழகிட்டேன்.

'மிஸ்... நான் 95% எடுத்துட்டேன்!’னு தேர்வுமுடிவுகள் வெளியாகிற தினங்கள்ல சாக்லேட்ஸ் எடுத்துட்டு வர்ற மாணவர்களோட கண்கள்ல வழியற சந்தோஷம்... இந்த ஜென்மத்துக்கான ஆத்ம திருப்தியை எனக்குக் கொடுக்குது!''

- நிறைவாகப் புன்னகைக்கிறார் கல்யாணி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு