Published:Updated:

மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!
மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

திருமணத் தலம்

பிரீமியம் ஸ்டோரி
மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

ரு மனம் ஒன்றிணையும் வைபவமே திருமணம்! திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்வில் கிடைக்கும் ஒரு பொக்கிஷமான தருணம். அத்தகைய பொக்கிஷத் தருணத்தைப் பெற, தனக்கு ஏற்ற துணையைக் கரம்பிடிக்க அருள்புரியும் சிறப்புமிக்க கோயில்கள் பல உண்டு. அப்படியொரு திருமண வரம் தரும் தலம்தான், தேனி மாவட்டம், பெரியகுளம் என்னும் ஊரில், வராஹ நதிக்கரையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியஸ்வாமி திருக்கோயில்.

இந்த திருச்க்ஷேத்திரத்தில் ராஜேந்திர சோழீஸ்வரர் மூலவராக வீற்றிருந்தாலும், அவரின் மைந்தர் சேவற்கொடியோனே மிகச் சிறப்பாக வணங்கப்படுகிறார் .

இங்குள்ள வராஹ நதிக்கரையில், ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் எதிரெதிர் கரைகளில் இருப்பது, காசிக்கு அடுத்தபடியாக இத்தலத்தில்தான் என்பது கூடுதல் சிறப்பு. இதனால், இத்திருத்தலத்தை காசிக்கு நிகரான தலமாகக் கருதுகின்றனர். இங்கு அருள்புரியும் பாலசுப்பிரமணியர்மீது, அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

இந்தக் கோயிலின் சிறப்பை, இதன் குருக்கள் கார்த்திக் சிவாச்சார்யார் பகிர்ந்துகொண்டார். “சோழ தேசத்தை முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிபுரிந்தபோது, ஓய்வுக் காலத்தில் இப்பகுதிக்கு அருகிலுள்ள அகமலைக்குச் சென்றாராம். அங்கு, ஒரு தாய்ப் பன்றி தன் குட்டிகளுக்குப் பால் புகட்டிக்கொண்டு இருந்தது. அப்போது குட்டி ஒன்று தனியாகச் செல்ல முயன்றபோது, அதைத் தடுக்கச் சென்ற தாய்ப் பன்றி, தடுமாறி மலை உச்சியில் இருந்து தவறிக் கீழே விழுந்து இறந்துவிட்டது. பசிக்காக ஏங்கிக் கத்திக்கொண்டிருந்த பன்றிக் குட்டிகளின் பசியைப் போக்க, முருகப்பெருமானே தாய்ப் பன்றியாக உருவெடுத்து வந்து, குட்டிகளுக்குப் பால் புகட்டினாராம். இச்சம்பவத்தை நேரில் கண்டு சிலிர்த்த முதலாம் ராஜேந்திர சோழன், எம்பெருமான் முருகனுக்கும் அவர்தம் தந்தை ஈஸ்வரனுக்கும் இவ்வூரில் கோயில் எழுப்பி வழிபட்டுள்ளார்.

முதலாம் ராஜேந்திர சோழன் நிர்மாணித்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இங்குள்ள மூலவருக்கு `ராஜேந்திர சோழீஸ்வரர்’ எனவும், அம்பாளுக்கு `அறம் வளர்த்த நாயகி’ எனவும் திருநாமம் அமைந்தன.

தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலேயே பழமை மாறாத, பெரிய கோயிலாக இது திகழ்வதால், ‘பெரிய கோயில்’ என மக்களால் பரவலாக அழைக்கப்படுகிறது .

இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் திருமணங்கள், சுபமுகூர்த்த தினங்களில் இப்பெரியகோயிலிலேயே நிகழ்கின்றன.

மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

மேலும், திருமணம் ஆகாதவர்கள் இரண்டு மாலைகள் வாங்கி வந்து, ஒன்றை இங்குள்ள பாலசுப்பிரமணி யருக்குச் சார்த்தியும், மற்றொன்றை இறைவனின் பாதத்தில் வைத்தும் பூஜித்து, பாலசுப்பிரமணிய ஸ்வாமி பெயரில் அர்ச்சனை செய்து, ஒரு மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக் கொள்ள, விரைவிலேயே திருமண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை.

அவ்வாறு திருமணம் முடிந்தவர்கள், பின்பு இங்கு தம்பதி சமேதராக வந்து முருகனைத் தரிசித்துவிட்டு, தான் பெற்றுச் சென்ற பழைய மாலையை ஆற்றில் விட்டுச்செல்வர்.

இங்குள்ள ஆண் மருத மரத்தில் ராஜேந்திர சோழீஸ்வரரும், பெண் மருத மரத்தில் அம்பாள் அறம் வளர்த்த நாயகியும் அருள்புரிவதாக ஐதீகம். இதனால், இங்கு திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் ஆற்றில் நீராடிவிட்டு, வராஹ நதிக்கரையில் எதிரெதிரே இருக்கும் இம்மரங்களை தரிசித்துச் செல்வதால் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்” என நம்பிக்கை மிளிரும் குரலில் சொல்லி முடித்தார் குருக்கள்.

 ‘பிரசாத மாலை பெற்றால், மண மாலை சூடப் பெறலாம்’ என்னும் சிறப்புமிக்க இத்திருத்தலத்துக்கு, மண மாகாதவர்கள் கட்டாயம் ஒருமுறை சென்று, மாலை பெற்று வாருங்களேன். மாங்கல்ய பாக்கியம் கிட்டி, மன மகிழ்வோடு வாழ்வீர்கள்!

- ம.மாரிமுத்து
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தலம்

பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், அவ்வூருக்கு வந்த வழிப்போக்குச் சித்தர் ஒருவரிடம், தன் தோஷம் குறித்துச் சொல்லி, அதற்குத் தீர்வு கேட்டிருக்கிறார். உடனே அந்தச் சித்தர், “நதிக்கரையின் மேல் மூன்று கொடிமரங்கள் கொண்ட கோயில் எங்கே உள்ளதோ, அங்கே சென்று மூன்று முறை, அங்குள்ள நதியில் மூழ்கி எழுந்து, அக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய். உன் தோஷம் நீங்கப்பெறுவாய்!”என அருளிச் சென்றார்.

 பாதிக்கப்பட்டவரும் அப்படியொரு கோயில் எங்கே உள்ளதென்று பல காலம் தேடியபோது, மூன்று கொடிமரங்களுடன் கூடிய இந்தக் கோயிலும், நதிக்கரையும் தென்பட்டிருக்கிறது. உடனே, அங்கு சென்று மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்து, கோயிலுக்குச் சென்று வேண்ட, தோஷம் நீங்கப்பெற்றார்.

மாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு!

விசேஷ தினங்கள்

ஆண்டுதோறும் இங்கு சித்திரை முதல் நாள், வைகாசி விசாகப் பெருவிழா, ஆடிப் பூரம், பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதக் கார்த்திகையின்போதும் விளக்குப் பூஜை நடைபெறுகிறது. அனைத்து வார செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மூலவர் மற்றும் முருகன் விசேஷ அலங்காரத்தில் அருள்புரிவார்.

தனிச்சிறப்பு

இத்திருத்தலத்தில் மூலவருக்கும் அம்பாளுக் கும், அவர்களின் மைந்தரான சுப்பிரமணியருக்கும் மூன்று தனிச் சந்நிதிகளும், மூன்று தனிக் கொடிமரங்களும் இருப்பது  தனிச்சிறப்பு.

கோயிலில் இருக்கும் பிற பரிவார மூர்த்தங்கள்

இங்கு, வீரபாகு நவவீரர்களுடன் காட்சியளிக்கிறார். அகோர வீரபத்திரர், மன்மதன், ருத்ரதாண்டவர், துர்கை, சிவகாமியம்மை, நடராஜர், பிரம்மா, லிங்கோத்பவர், மிருத்யுஞ்சர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, 63 நாயன்மார்கள் என அனைவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.

கோபுர முகப்பு: கிழக்கு திசை

தல விருட்சம்: நெய்கொட்டுலாமரம்

வழித்தடம்: தேனியிலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பெரியகுளம். அங்கிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள கோயிலுக்குச் செல்ல மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ வசதி உண்டு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு