பிரீமியம் ஸ்டோரி

செட்டிநாட்டு சமையலுக்கென ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் இருப்பதுபோல செட்டிநாட்டு திருமணங்களும் ஸ்பெஷலானதுதான். சொந்தபந்தம் கூடி, சிரித்து, கதைபேசி என ஆரவாரமாக நடக்கக்கூடிய `கலகல’ திருமணம் தான் செட்டிநாட்டு திருமணங்கள். பாரம்பர்யம், பகட்டு என எதற்கும் குறைவில்லாமல் ஊர் திருவிழா போல உற்றார் உறவினர் கூடி உற்சாகமாக நடக்கும் இத்திருமணங்கள் சம்பிர தாயங்களுக்கும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வெளிநாட்டினரும் செட்டிநாட்டு திருமணங்களைப் பார்த்து வியந்துதான் போகின்றனர். இதற்குக் காரணம், திருமண விழாக்கள் பிரமாண்டமாக நடப்பது மட்டுமல்லா மல், இவர்கள் வீட்டு திருமணங்கள் பெரும்பாலும் இவர்களது வீட்டிலேயே நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு.

நகரத்தார்கள் என்றும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் செட்டியார்களின் பிரமாண்ட திருமணம் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார், சமீபத்தில் தன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்த ராமசாமி.

பிரமாண்ட திருமணம்

முகூர்த்த கால் நடுதல்

எல்லா தமிழ் திருமணங்களைப் போலவே, திருமண நாளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு முகூர்த்தக் கால் (பந்தக் கால்) நடுவார்கள். நெருங்கிய சொந்தகளுடன் விளக்கு ஏற்றி, சாமி வீட்டில் (பூஜை அறை) தேங்காய் உடைத்து சங்கு சத்தத்துடன் பூஜை செய்வார்கள்.

கல்யாணம் சொல்லுதல்

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டினர், அவரவர் நெருங்கிய சொந்தங்களான தாய் மாமன்கள், அத்தைகள் போன்ற வீட்டின் மூத்தவர் களுக்குத்தான் முதலில் திருமணச் செய்தியை சொல்ல வேண்டும். அதுவும் கட்டாயம் நேரில் சென்றுதான் அழைக்க வேண்டும். அப்படி அழைப்பு விடுக்கத் தவறினால், மரியாதைக் குறைவாக கருதுவார்கள்.

கூடி ஆக்கி உண்ணுதல்

திருமணத்துக்கு முந்தைய நாள் காலை, வீட்டுப் பெரியவர்கள் தங்கள் ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று மணமக்களின் பெயர் மற்றும் திருமணத் தேதியை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பாக்கு வைப்பது என்று பெயர். பதிவு செய்த கோயிலில் இருந்து திருமணநாள் அன்று மண மாலைகள் வர வேண்டும். கோயிலில் பதிவு முடிந்ததும் திருமணத்துக்கு வர இருக்கும் அனைத்து நெருங்கிய சொந்தகளும் அன்று மதியம் ஒன்றாக உணவு அருந்த வேண்டும். ஆக, திருமணக் கொண்டாட்டங்கள் இங்கிருந்து தொடங்குகிறது.

பிரமாண்ட திருமணம்

‘கழுத்துரு’ கோர்த்தல், மனை போடுதல்

வீட்டின் மத்தியப் பகுதிக்கு வாசல் என்று பெயர். பெண் வீட்டில் உள்ள மூத்த பெண்கள், இந்த வாசலில் திருமண மனை போட்டு, பிறகு அரசாணிக்கால் நட வேண்டும். மனை போடும் இடத்தில் கோலம் போட்டு, தும்ப பொடி தூவி அலங்கரிக்க வேண்டும்.

செட்டிநாட்டு திருமணத் தாலியை, `கழுத்துரு’ என்பார்கள். கழுத்துருவில் போடவேண்டிய தங்கம் மற்றும் வைர நகைகள் பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுத்து அனுப்பப்படும். பெண்வீட்டாரின் வசதிக்கு ஏற்ப தங்கத்தின் அளவும், வைரத்தின் அளவும் இருக்கும். பெண் வீட்டில் மனை போடும் அதேநேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழுத்துருவுக்காக கொடுக்கப்பட்ட நகைகளை மஞ்சள்கயிற்றில் கோப்பார் கள். மாப்பிள்ளையின் தாய்மாமன், மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போட்டுவிடுவார். மிஞ்சி போட்டதும் மாப்பிள்ளை வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

பூரம் கழித்தல்

மணப்பெண் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்ததும். பெண்ணின் முறைமாமன் மனைவி மற்றும் வீட்டின் மூத்த பெண்கள் அனைவரையும் அழைத்து, மணமகளை இல்லறத்துக்கு உரியவளாக்குவதற்காக புரோகிதரை வர வைத்து, மந்திரம் ஓதி நடக்கும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களுக்கு பெயரே `பூரம் கழித்தல்’. சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண் மறுபடியும் குளிக்க வேண்டும். பின்னர் பெண்ணை திருமணத்துக்கென அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அலங்காரம் முடிந்ததும் மணப்பெண்ணை, அவரின் தாய்மாமன் வாசலுக்கு அழைத்து வருவார். அதைத் தொடர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்லி மணமகளின் கையில் காப்பு கட்டுவார். இந்தச் சடங்குக்குப் பெயர் பகவானம்.

மாப்பிள்ளை அழைப்பு


திருமணநாள் காலையில் மாப்பிள்ளை மற்றும் அவரின் உறவினர்கள், பெண்ணின் ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று காத்திருப்பர். நல்ல நேரம் பார்த்து பெண்ணின் நெருங்கிய உறவினர்கள், கோயிலுக்குச் சென்று மாப்பிள்ளைக்காகக் கொண்டு சென்ற கோயில் மாலை, அலங்கார மாலை, வாட்ச் போன்றவற்றை மாப்பிள்ளைக்கு அணிவித்து... அவரை குதிரைமேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருவார்கள். 

பிரமாண்ட திருமணம்

பூ எறிதல்

கோயிலில் இருந்து மாப்பிள்ளை யுடன் வருபவர்கள் விளக்கு ஏற்றி கொண்டு வருவார்கள். அந்த விளக்கை சிலேட் விளக்கு என்றும் சொல்வார்கள். மாப்பிள்ளை வீட்டு வாசலுக்கு வந்த வுடன், திருமணக் கோலத்தில் இருக்கும் பெண்ணை, அத்தை அழைத்து வந்து மாப்பிள்ளைக்கு முன் நிற்க வைத்து காண்பிப்பார்கள். பெண்ணின் தம்பி மாப்பிள்ளைமீது பூ தூவி அவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள். உள்ளே சென்ற பின்னர் கொண்டு வந்த சிலேட் விளக்கில் பெண்ணின் அத்தை ஆரத்தி எடுப்பார்கள்.

மாப்பிள்ளைக்கு பகவானம்

மணப்பெண்ணுக்கு செய்தது போன்று மாப்பிள்ளைக்கும் வீட்டு வாசலில் வைத்து பகவானம் செய்வார்கள்.

திருப்பூட்டுதல்


உள்ளே இருக்கும் மணப்பெண்ணை தாய்மாமன் கைபிடித்து வாசலுக்கு அழைத்து வந்து மனையின்மேல் நிற்க வைப்பர்கள். மாப்பிள்ளை கீழே நிற்பார். கூடி இருக்கும் அனைவருக்கும் கையெடுத்து கும்பிடுவார். தாலி அணிவிக்கும் சடங்கை திருப்பூட்டுதல் என்று சொல்வார்கள். திருப்பூட்டு தட்டில், கழுத்துரு, வசதிக்கு ஏற்றாற்போல தாலி வகைகள் வைத்து வந்திருப்பவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

பெண் கையில் தேங்காய், அரிசி, பாக்கு வெற்றிலை கொடுப்பார்கள். திருமணம் முடியும் வரை அவர் கையில் வைத்திருக்க வேண்டும். தாலி கட்டுவதற்கு முன் மாப்பிள்ளையின் தாய் மற்றும் தங்கை பெண்ணின் பின்னால் நின்றுகொள்வார்கள். மாப்பிள்ளை வீட்டுப் பெரியவர்களில் ஒருவர் கழுத்துரு, மற்றும் தாலியை ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் முழங்க மாப்பிள்ளை தாலி கட்டுவார். விசேஷங்களுக்கு ஏற்றாற்போல் தாலி வகைகள் பிரித்துக்கொள்வார்கள். திருமணம் முடிந்த பின்னர் மாலைகளை மூன்று முறை மாற்றிக்கொள்வார்கள். மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் இனிப்பை பகிர்ந்துகொள்வார்கள்.

இருவரின் தாய்மாமன்களும் பெண் மாப்பிள்ளையை அழைத்துச்சென்று வீட்டுப் பெரியவர்களிடம் திரு மணம் முடிந்ததற்கு சொல்லிக் கொள்ளும்விதமாக அனைவரையும் வணங்குவார்கள்.

பிரமாண்ட திருமணம்

கும்பிட்டு கட்டுதல்

பெண்ணை மனை மேல் நிற்க வைத்து, மாப்பிள்ளையின் தாயார் ஆசீர்வாதம் செய்வார்கள். காலையில் கட்டிய காப்பை கழட்டிவிடுவார்கள். பிறகு, மாப்பிள்ளையின் அக்கா பெண்ணை சாமி வீட்டுக்கு அழைத்துச் சென்று மெட்டிபோட்டு விடுவார். மாப்பிள்ளை பெண்ணை மனை மேல் உட்கார வைத்து, புரோகிதர் சில மந்திரங்கள் சொல்லி வாழ்த்துவார்.

திருமண தம்பதியை வாசலுக்கு அழைத்து வந்து, வீட்டுப் பெரியவர் களிடம் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

சீர் வரிசைகள்

வழக்கமாக பெண் வீட்டில் இருந்து கொடுக்கப்படும் சீர் வரிசைகள் இங்கும் கொடுக்கப்படும். வெள்ளி முதல் பித்தளைப் பாத்திரங்கள் வரை கொடுப்பார்கள். வசதிக்கு ஏற்றாற்போல வீட்டு உபயோகப்பொருட்களும் சீர்வரிசையில் அடங்கும். பெண்ணுக்கும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து, சேலை கள், நகைகள் பரிசாகக் கொடுப்பார்கள். அவை அனைத்தையும் திருமணத்துக்கு வந்தவர்கள் பார்க்க ஒரு அறையில் வைப்பது வழக்கம்.

பணம் எழுதுதல்

திருமணத்துக்கு வந்தவர்கள், அவர்களின் பங்களிப்பை தெரிவிக்கும் விதமாக, அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பணம் (மொய்) எழுதுவார்கள். பெண் வீட்டு சொந்தங்கள் ஒரு பக்கமும், மாப்பிள்ளை வீட்டு சொந்தங் கள் ஒரு பக்கமும் பணம் எழுதுவார்கள்.

இசை குடி மானம்

மணப்பெண்ணின் தந்தையும், மாப்பிள்ளையின் தந்தையும் திருமணம் முடிந்தது என பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு சடங்கை நிறைவு செய்வார்கள். இன்னார் வீட்டு மகள், இன்னார் வீட்டு மகனுக்கு மணம் முடிக்கப்பட்டார் என்பதே இதன் பொருள். இரு வீட்டாரும் ஒவ்வொரு பத்திரத்தை பிரித்துக்கொள்வார்கள்.

வேவு எடுத்தல்

நகரத்தார் திருமணங்களில் வேவு எடுத்தல் ஒரு முக்கியமான சடங்கு. வீட்டு பெரியவர்கள் வெள்ளி கடகாமில் (பெரிய அளவிலான ஓலைப் பெட்டி) அரிசி, கத்திரிக்காய், தேங்காய் எடுத்துக் கொண்டு போய் சாமி அறையில் வைத்துக் கும்பிடுவார்கள்.

மஞ்சள் நீராடுதல்

பெண்ணின் தம்பி திருமண தம்பதி கால் மேல் மஞ்சள் நீருற்றுவார். இந்த சடங்கு வீட்டு வாசலில் நடக்கும். நீராடி முடித்ததும் மணப்பெண் தனது திருமண உடைகளை மாற்றிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லத் தயார் ஆகலாம்.

பிரமாண்ட திருமணம்

பிள்ளை எடுக்கி கொடுத்தல்

வெள்ளி குழவி போல் இருக்கும் ஒரு பொருளை, பட்டு துணியில் வைத்து, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து, கீழே விழுந்து மண பெண் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். திருமணம் முடிந்தது, இனி நல்லபடியாக பிள்ளை பிறக்க ஆசி வாங்குவதாக இதன் பொருள்.

சொல்லிக்கொள்ளுதல்

வெள்ளித்தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து, பெண் வீட்டுச் சொந்தங் களுக்கு மட்டும் `சென்று வருகிறேன்’ என்று மணப்பெண் சொல்லிக் கொள்வார். பின்பு பெண் மற்றும் மாப்பிள்ளை, அவரின் சொந்தங்கள் மாப்பிள்ளையின் ஊருக்கு கிளம்பி விடுவார்கள். போகும்போது வழியில் சாப்பிட ‘கட்டுச்சோறு’ கொடுத்து அனுப்புவார்கள். அதை வழியில் கோயில் குளத்தில் எங்காவது சாப்பிட்டு செல்ல வேண்டும்.

பெண் அழைப்பு

திருமணத் தம்பதிகள் மாப்பிள்ளை ஊரில் உள்ள ஒரு வீட்டில் சென்று காத்திருப்பார்கள். குறித்து வைத்த நல்ல நேரத்தில்தான் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதற்கிடையே மாலை வரவேற்புக்கு தேவையான அலங்காரங்கள் எல்லாம் அந்த வீட்டில் நடக்கும். பெண் மற்றும் மாப்பிள்ளை தயாராகி இருப்பார்கள். அதேநேரத்தில் பெண் வீட்டாரும் அங்கு சென்று விடுவார்கள். பெண்ணின் தாயார் கையில் பால் பானை, சொம்பு வைத்திருப்பார்.

குறித்து வைத்த நேரத்தில் இருவரையும் மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்ற பின்னர் தம்பதியை அழைத்து, சாமி அறையில் கும்பிடுவார் கள். சாமி அறை வாசலில் மூன்று இலை போட்டு படைத்திருப்பார்கள். தண்ணீர் நிரம்பிய மூன்று குடங்கள் வைத்திருப்பார்கள். அந்த மூன்று குடத்தில் ஒன்றில் குளம் வாழும் பிள்ளை என ஒரு குழந்தை பொம்மை இருக்கும். மாப்பிள்ளை பெண் இருவரும் தாய்மாமன் கையைப் பிடித்து மூன்று முறை சுற்றி வர வேண்டும். பின்பு, ஒவ்வொரு குடமாக கை விட்டு அந்த பொம்மையைத் தேடி எடுக்க வேண்டும். பொம்மையை மாப்பிள்ளை எடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும், பெண் எடுத்தால் பெண் குழந்தை பிறக்கும் என்பது வழக்கம்.

பிரமாண்ட திருமணம்

திருமண வரவேற்பு

மணமக்கள் இருவரையும் வர வேற்பு நடக்கும் இடத்துக்கு அழைத்து வருவார்கள். எல்லா திருமணங்களைப்போல வரவேற்பு நடந்து முடியும். இதில் பெரிய மாற்றங்கள் இல்லை. வரவேற்பு நடந்த பின்னர் பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை தருவார்கள். பணமாக இருந்தால் பணம் கொடுப்பார்கள், தொகை பெரிதாக இருந்தால் காசோலையாகவும் கொடுக்கப்படும். நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் இந்த சடங்கு நடக்கும். சாமி வீட்டில் வைத்து கும்பிடுவார்கள்.

முறை கொடுத்து, சொல்லிக்கொள்ளுதல்

பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லிக் கொண்டு கிளம்புவார்கள். பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து பரிசு கொடுத்து அனுப்புவார்கள். அது வசதிக்கு ஏற்ப மாறுபடலாம்.

மறு வீடு / காய்ச்சி ஊத்துதல்

திருமணத்துக்கு அடுத்தநாள் பெண் வீட்டுக்கு மறுவீடு போக வேண்டும். பிறகு, இருவரின் சொந்தக்காரர்களின் வீட்டுக்குச் சென்று, திருமணம் நல்லபடியாக முடிந்தது என தெரிவிக்கும்விதமாக விருந்து சாப்பிட்டு வருவார்கள்.

 - நந்தினி சுப்பிரமணி
படங்கள்: கார்த்திக் யாதவ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு