பிரீமியம் ஸ்டோரி
மகிழ்ச்சி..!

டெல்லியில் வசிக்கும் என் நீண்ட நாள் தோழி, தன் மகளின் திருமணத்துக்கு என்னை வாஞ்சையாக அழைத்திருந்தார். அது வேறு ஒரு கலாசாரப்படி நடக்கும் திருமணமும்கூட. அதனால், ஆற அமர டெல்லியில் தங்கி மூன்று நாட்களும் திருமண வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தேன்.

ஆனால், கடைசி நேரத்தில் வந்த ஒரு அவசர வேலையால் அந்தத் திருமணத்துக்குப் போக இயலவில்லை.

நான் திருமணத்துக்கு நேரில் போகவில்லையே தவிர, அந்தக் குறையே தெரியாத அளவுக்கு மெஹந்தி வைபவம் துவங்கி திருமணம், அதைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு என்று எல்லா நிகழ்ச்சிகளையும், அழகாகப் புகைப்படம் எடுத்து தன் முகநூலில் அவ்வப்போது பதிவேற்றிக்கொண்டே இருந்தார் தோழி. இது போதாது என்று  ‘லைவ்’வாகவும் அவ்வப்போது திருமணக் காட்சிகளை அவர் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்களையும், ஒளிபரப்புகளையும் பார்த்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம், மணப்பெண்ணின் தாய் என்கிற வகையில் அவர்தான் ஒட்டுமொத்தத் திருமணத்தையும் நடத்துகிறார். இருந்தபோதும் கொஞ்சம்கூட டென்ஷனே இல்லாமல், வந்திருந்த விருந்தினர்கள் அனைவரோடும் ரிலாக்ஸ்டாக அவர் காட்சியளித்தார். சில புகைப்படங்களில் மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு கொஞ்சினார். வேறு சில போட்டோக்களில், மருமகனைக் கிண்டல் செய்தார். இப்படி திருமண வைபவம் நடந்த மூன்று நாட்களும் மணமக்களையே விஞ்சும் வகையில் என் தோழிதான் புன்னகையும் பூரிப்புமாக எல்லா புகைப்படங்களிலும் காட்சியளித்தார்.

இப்போது, சமீபத்தில் கலந்துகொண்ட உள்ளூர் தோழி ஒருவரின் வீட்டுத் திருமண வைபவம் நினைவுக்கு வந்தது. இந்தத் தோழியின் முகத்தில்... ‘சரியான நேரத்தில் பந்தி போட்டுவிட முடியுமா... அதுக்குள்ளே சமையல் ரெடியாகிவிடுமா?’, ‘சாயங்கால ரிசப்ஷனுக்காக ஆர்டர் கொடுத்திருந்த மணப்பெண்ணின் டிரெஸ் தைத்து வந்துவிடுமா’ என்று ஏகப்பட்ட கேள்விகளும் கவலைகளும் தெரிந்தன.

‘டெல்லி தோழியால் மட்டும் எப்படி தன் மகளின் திருமணத்தை ரிலாக்ஸ்டாக ரசித்துக் கொண்டாட முடிகிறது. அதுவே நம்மூரில் இருக்கும் தோழியால் அப்படி ஏன் இருக்க முடியவில்லை?’ என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விடை டெலிகேஷன். திருவள்ளுவரின் வார்த்தைகளில் சொல்வது என்றால்,

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’

அடுத்தது ‘திட்டமிடல்’. திருமண வீட்டுக்காரர்களுக்கு இந்த இரண்டிலும் உதவ இப்போது தொழில்முறையாகச் செயல்படும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் (Event Management) நிறுவனங்கள் நம்மூரிலேயே நிறைய இருக்கின்றன.

ஆக, நாம் தொழில்முறை நிறுவனங்களை நாடினாலும் சரி அல்லது நாமே திட்டமிட்டு திருமணத்தை நடத்தினாலும் சரி... டென்ஷன் இல்லாமல் நம் வீட்டுக் கல்யாணத்தை நம்மால் ரசித்து அனுபவிக்க முடியும். கல்யாண வீட்டுக்காரர்கள் ரிலாக்ஸ்டாக இருந்தால்... கல்யாண வீட்டில் மகிழ்ச்சி நிச்சயம் இரட்டிப்பாகும்தானே!

அந்த வகையில் உங்கள் வீட்டுத் திருமணத்தை எப்படி திட்டமிட்டு நடத்தலாம் என்பதற்கு யோசனை சொல்லும்விதமாக ஆபரணங்கள் துவங்கி, மேக்கப் வரை, வெட்டிங் போட்டோகிராஃப் முதல் டிசைனர் ஆடைகள் வரை பல விஷயங்களை விரிவாகப் பேசியிருக்கிறோம்... காட்சிப்படுத்தியுமிருக்கிறோம்.

உங்கள் வீட்டுத் திருமணம் இனிதே நடந்தேற வாழ்த்துகள்!

- ஆசிரியர்

மகிழ்ச்சி..!

மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு