Published:Updated:

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி
தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

பாரம்பர்யம்

பிரீமியம் ஸ்டோரி
தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

போஸ்டர்கள், பிளெக்ஸ் பேனர்கள் கட்டி பிரமாண்டமான மண்டபங்களிலும், ஸ்டார் ஹோட்டல்களிலும் திருமணங்கள் நடக்கும் இன்றைய காலத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஜினீயர் தனது சொந்த ஊரான விருதுநகரில், அதுவும் தங்களது தோட்டத்தில்... கலாசாரம் மாறாமல் பாரம்பர்யமாகவும், வித்தியாசமாகவும் தனது திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

விருதுநகர் அழகாபுரி ரோட்டில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்தில் இருக்கும் ‘தாத்தா தோட்டத்தில்’தான் இந்த திருமணம் நடந்தது. சந்திரகிரிபுரத்தில் இருந்து தாத்தா தோட்டத்துக்கு செல்லும் வழியில் சணல் துணிகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருந்த வரிகள் வழிகாட்டியாக இருந்ததோடு கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தன. தோட்டத்துக்குள் நுழைந்தவர்களை, நவதானிய விதைகளால் வரவேற்பு கோலமும், அதைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணாலான அகல் விளக்கு ஒளியும் பிரகாசமாக வரவேற்றன.

திருமணத்துக்கு வந்திருந்த சிறுவர்கள் பம்பரமும், கோலிக்குண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுமிகள் சொப்பு சாமான்கள் வைத்து விளையாட, பெண்கள் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தனர். `கல்யாண வீடா... விளையாட்டு மைதானமா?’ என்று வியக்குமளவு, இன்றைய தலைமுறையினர் மறந்துபோன சிலம்பம் உள்ளிட்ட பல விளையாட்டுகளை உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

இதுதவிர தோட்டத்தில் ஆங்காங்கே மண்பானைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இயற்கையாகவே ஊற்றுகளில் ஊறிய ஊற்றுநீரை எடுத்து வந்து வெட்டிவேர், சீரகம், துளசி கலந்து வைத்திருந்தது மிகவும் சிறப்பு. மேலும் மண்பானைகளில் கரும்புச்சாறு, மூலிகைத் தண்ணீர், பானகம் போன்றவற்றையும் வைத்து அனைவரையும் குளிரக் குளிர உபசரித்தனர்.

திருமணத்தன்று நாதஸ்வரம் - தவில் இசை ஒலிக்க மணமகனை அவருடைய நண்பர்களும், மணமகளை அவருடைய தோழிகளும் அழைத்துவர, வேப்பமரத்தடியில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, மரத்தாலான மோதிரத்தை (Wood Ring) மாற்றி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தோட்டத்தில் மணமக்கள் ஆளுக்கொரு பாரிஜாத பூங்கன்றை நட்டார்கள். அதைத் தொடர்ந்து இருவரும் கையைப் பிடித்தபடி மரக்கன்றுகளை மூன்றுமுறை சுற்றி வர... கைதட்டல் எழுந்தது. நாதஸ்வரம் இசைக்க விசில்கள் பறந்தன.

பிறகு, மணமக்கள் இருவரையும் வேப்பமரத்தின்கீழ் அமைக்கப்பட்ட மரத்தினாலான சிறிய மேடையில் ஏற்றி மர சோபாவில் உட்கார வைத்தனர். பின்னர் உறவினர்களும், நண்பர்களும் தெம்மாங்கு பாடலைப் பாடி மணமக்களை வாழ்த்தினர்.

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

இப்படி ஒரு பாரம்பர்ய சூழலில், விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த முருகேச பாண்டி - மங்கையர்க்கரசியின் மகன் ஸ்டாலின், பெங்களூரைச் சேர்ந்த திலீபன் - கவிதா தம்பதியரின் மகள் தீபிதாவும்தான் இந்த பாரம்பர்ய திருமணத்தின் நாயகன் - நாயகி.

மணமக்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு இருவரிடமும் பேசினோம்... முதலில் பேசிய ஸ்டாலின், ‘‘இன்ஜினீயரிங் படித்துவிட்டு அமெரிக்காவில் வேலைபார்க்கிறேன். பள்ளிக்கூடம் படிக்கும்போதே மரம் வளர்ப்பு, விவசாயம், பொன்வண்டு வளர்க்குறதுல தொடங்கி ஆடு, மாடு வளர்க்குறதுன்னு இயற்கையை சார்ந்த விஷயங்கள்னா ரொம்ப பிடிக்கும். என் பார்வை, சிந்தனை, ஈடுபாடு எல்லாமே பாரம்பர்யம், பழமை சார்ந்துதான் இருக்கும். அதனால்தான் என்னோட கல்யாணத்தையும் பாரம்பர்ய முறைப்படி நடத்த ஆசைப்பட்டேன். அது வெறும் கல்யாண நிகழ்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது. மகிழ்ச்சி, உற்சாகம் கலந்த நிகழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். சிறுவர் - சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் என எல்லோருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல்லாங்குழி, கயிறு மேல் நடத்தல், ஊஞ்சல், சறுக்குமரம், பானை செய்தல், களி மண்ணில் உருவம் செய்தல் என்று பல பழங்கால விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்தோம்.

எங்கள் தோட்டத்தில் வேப்பமரம், மூலிகைகள், தென்னை மரம், மா, வாழை, நெல்லின்னு கிட்டத்தட்ட 300 மரங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தோட்டத்தில் வேலை செய்த சீனிவாசன் தாத்தாதான் நட்டு வளர்த்தார். அதனால்தான் இந்த தோட்டத்துக்கு இந்த ஏரியாவுல `தாத்தா தோட்டம்’ என்ற பெயரே வந்தது.

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

பொதுவா பொண்ணு பார்க்குறப்போ, `இந்தப் பொண்ணு நல்ல பொண்ணு, நல்ல வேலையில இருக்குறா, உனக்கு மேட்ச்சா இருப்பா’னு சொல்லித்தான் பொண்ணோட போட்டோ, புரொ ஃபைலை பையன்கிட்ட காட்டுவாங்க. அதேமாதிரி என்னோட அம்மாவும், `பதிமூணு புரொஃபைல் மேட்சா இருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் வேணாம்னு தனியா எடுத்து வெச்சுட்டேன்’னு சொன்னாங்க. மனசுல அது கொஞ்சம் வித்தியாசமா பட்டது. அந்த புரொஃபைலையும், போட்டோவையும் பார்த்தேன் அதுதான் தீபிதா. அவங்களோட ஃபேஸ்புக் புரொஃபைலை பார்த்தப்போ, எனக்கு பிடிச்ச இயற்கை, விவசாயம், மரம் வளர்ப்பு, ஆர்ட்டுன்னு பல விஷயங்களும் அவங்களுக்கும் பிடிச்சதா இருந்தது. அப்பவே ‘ஆஹா... எனக்கு மேட்ச்சான ஜோடி இவங்கதான்’னு முடிவு செஞ்சுட்டேன். இரு வீட்டினரும் பேசி கல்யாணமும் பண்ணி வெச்சுட்டாங்க” என்பவரை தொடர்ந்த தீபிதா...

“எனக்கு சொந்த ஊர் மதுரை என்றாலும் குடும்பமே பெங்களூர்ல செட்டில் ஆகிட்டோம். வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருந்தாங்க. ஆனா, `யாரோட புரோஃபைலா இருந் தாலும் அவர்கிட்ட பேசிட்டு எனக்கு திருப்தியாக இருந்தால்தான் கல்யாணம்’ என்று கண்டிப்பானமுறையில் சொல்லிட்டேன். எங்க வீட்டில் முதலில் ரெண்டு புரொஃபைல் கொடுத்தாங்க. அவங்கக்கிட்ட பேசினதுல திருப்தி இல்லை. அவங்க ரசனையும் என்னோட ரசனையும் ஒத்துப்போகல. மூன்றாவதாக ஸ்டாலின் புரொஃபைல் கொடுத்தாங்க. முதலில் சாதாரணமாகத்தான் பேசினோம். பிறகு பேசப்பேச இரண்டு பேரோட ரசனையும் ஒரேமாதிரி இருக்கவே கல்யாணத்துக்கு `ஓ.கே’ சொல்லிட்டேன்.

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

ஒரு தடவை பேசும்போது நம்மோட கல்யாணம் எப்படி இருக்கணும்னு பேசினோம். அப்பத்தான் ‘பாரம்பர்ய முறையில் திருமணம் செய்ய ஆசையாக இருக்குது’ன்னு ஸ்டாலின் சொன்னார். எனக்கும் அதுபற்றி சொல்லி புரிய வெச்சார். பிறகு, எனக்கும் ஆர்வம் அதிகமாயிருச்சு. ஆனால்,  பாரம்பர்ய முறையில் கல்யாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்றதைவிட ஒவ் வொரு விஷயத்துக்கும் வீட்டில் பெரியவர்களை சம்மதிக்க வைக்குறது தான் ரொம்ப பெரிய சவாலா இருந்துச்சு.

அந்தக் காலத்துல எப்படி கல்யாணம் செஞ்சிருப்பாங்கன்னு உறவுக்காரர்கள், நண்பர்கள்னு பலபேர்கிட்ட இருந்து தகவல்களைத் திரட்டினோம். நிறையபேர் ஐடியா தந்தாங்க. முதலில் கல்யாணப் பத்திரிகை. அந்தக் காலத்தில் பத்திரிகை அச்சடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லை. ஒரு தட்டுல பாக்கு - வெத்தலை, வாழைப் பழம் வெச்சு சொந்தக்காரங்களை கல்யாணத்துக்கு கூப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டோம். ஆனா, நாங்க  திருமணப் பத்திரிகை அடிச்சு அதோட சிறுதானிய விதைகளை கொடுத்தோம். இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு அந்தக் காலத்துல பாட்டிகள் பயன்படுத்துன சுருக்குப்பை மாதிரி துணிப்பை தயாரித்து அதில் சிறுதானிய விதைகளைப் போட்டு பெரிய பனை ஓலைக்கூடையில் வெச்சு சொந்தக்காரங்க, நண்பர்களுககு திருமணப் பத்திரிகைகள் கொடுத்தோம்.

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

எங்க சமுதாயத்தில் ஒரு பெண்ணை பார்த்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு பிடிச்சுப்போச்சுன்னா, இதுதான் எங்க பையனுக்கு பாத்திருக்கும்  பொண்ணுன்னு எல்லோருக்கும் சொல்றதுக்காக ‘பூ வைக்கிறது’னு ஒரு சடங்கு செய்வாங்க. கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் மாதிரி. ஒரு நல்ல நாளில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும், பொண்ணு வீட்டுக்காரர்களும் ஒன்றாகக்கூடி அந்த பொண்ணை உறுதி செய்யறதுக்கு அடையாளமா பொண்ணு தலையில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பூ வைப்பாங்க.

ஆனா, நாங்க பூ வைக்கிற சடங்கு வேண்டாம் என்று சொன்னோம். பெரியவங்க கட்டாயப்படுத்துனாங்க. அதனால் பூவுக்குப் பதில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மரக்கன்றுகளை கொடுத்து கல்யாணத்தை உறுதி செய்றதுமாதிரி ஏற்பாடு செஞ்சோம். அதேமாதிரி வெற்றிலை வைத்து தாம்பூலம் மாத்தும் சடங்கை வாகை, செர்ரி, நெல்லி, மா என மரக்கன்றுகளை மாற்றி முடித்தோம்.

திருமணத்தின் முக்கிய நிகழ்வான தாலி கட்டுறது என்பது பெண்ணை அடக்கி ஆளுகிற விஷயமா தோணின தால், இதில் எனக்கு விருப்பம் இல்லை என்று ஸ்டாலின் கிட்ட சொன்னேன். இருவரும் கலந்து பேசினோம். வீட்டில் பெரியவர்கள் கிட்ட சொன்னோம். ஆனா, அவர்கள் அதைக் கேட்கவில்லை. தாலிக்குப் பதிலாக மோதிரம் மாற்றி கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னோம். எங்கள் பிடிவாதத்தைப் பார்த்து இரண்டு வீட்டிலேயும் ஏத்துக்கிட்டாங்க. அமெரிக்காவில் உள்ள ‘கோகோ போலா’ என்ற வாட்டர் புரூஃப் மரத்திலுள்ள மரப்பட்டையை எடுத்து கைவினைஞர்களால் அதை மோதிரமாக செஞ்சு தாலிக்குப் பதில் அதை மாட்டி கல்யாணம் செய்து கொண்டோம். 

தாத்தா தோட்டத்து திருமணம்! - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி

பிறகு, எங்களுக்கு பெரிய பிரச்னையா இருந்தது திருமணச் சாப்பாடுதான். இப்போது இருப்பது போல் காலை டிபனுக்கு, இட்லி, கேசரி, பொங்கல், பூரி, மதிய சாப்பாட்டுக்கு வெஜிடபிள் பிரியாணி, குலோப்ஜாமூன் எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது. அதனால் காலை சாப்பாடாக,  இட்லி, ராகிப்புட்டு, அடை தோசை, கருப்பட்டி பணியாரம், குதிரைவாலி பொங்கலும், மதிய சாப்பாடுக்கு வரகு அரிசி சாதம், நன்றாக வேக வைத்த சிறுதானியங்கள், சாம்பார், ரசம் மற்றும் காய்கறி பொரியல்கள் என முடிவு செய்தோம். பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பொருட்களைக் கவனமாக தவிர்த்து எல்லாத்தையும் வாழை இலையில் பரிமாறினோம்.

புரோகிதர் வேதம் ஓத அக்னி சாட்சியாக மட்டும் என இல்லாமல் ‘வாழ்க்கை முழுவதும் இன்பம், துன்பம் என்று இரண்டிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கிட்டோம். காற்று, நீர், நிலம், நெருப்பு, வானம் என்று பஞ்ச பூதங்கள் சாட்சியாக கல்யாணம் செய்து கொண்டோம்.

குறிப்பாக, இந்தக் காலத்தில்தான் வரதட்சணைப் பழக்கம் இருக்கிறது. அந்தக் காலத்தில் அந்தப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, பாரம்பர்ய முறையில் நடந்த எங்கள் கல்யாணத்தில் வரதட்ணை இல்லை. ஒரு முக்கியமான விசேஷம்... கல்யாணப் பெண் - மாப்பிள்ளையில் ஆரம்பித்து சமையல்காரர்கள்வரை எல்லோருமே வேஷ்டி, சேலைதான். எங்கள் வேண்டுகோளை ஏற்று கல்யாணத்துக்கு வந்த இளம்பெண்கள் கூட சேலை மற்றும் பாவாடை தாவணி யில் வந்து எங்களை அசத்திட்டாங்க’’ என திருமணப் பூரிப்புடன் பேசி முடித்தார் தீபிதா.

மணமக்கள் வாழ்க பல்லாண்டு !

எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு