பிரீமியம் ஸ்டோரி

திருமண பந்தம் என்பது ஒவ் வொருவர் வாழ்விலும் உன்னதமான தருணம். அதிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செய்யும் திட்டமிடுதலைப்போல் அவர்களின் திருமணத்துக்கும் பெரிய திட்டமிடுகின்றனர். குறிப்பாக, தங்கள் பிள்ளைகளுக்கு நடத்தவிருக்கும் திருமணங்களை மிக மிக ஆடம்பரமாகவோ அல்லது வித்தியாசமாகவோ செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க நினைக்கின்றனர். இதைத் தங்களின் கௌரவச் சின்னமாகவே கருதுகின்றனர். பரபரப்பான இன்றைய இயந்திர உலகில் மணமக்கள் மட்டுமல்லாமல் விருந்தினர்களையும் உற்சாகப் படுத்துவதுதான் திருமண வீட்டாரின் நோக்கமாக இருக்கிறது.

டும் டும் டும் கொட்டட்டும்!

இதற்காகவே செலவைப் பொருட்படுத்தாமல், திருமணங் களில் மேஜிக் ஷோ, மருதாணி போட்டுவிடுதல், பஞ்சுமிட்டாய்க் கடை, வளையல் கடை, கிளி ஜோசியம், `டி.ஜெ’ மியூசிக், லைட் மியூசிக், மிமிக்ரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். விருந்தினர்களை வரவேற்பதில் ஆரம்பித்து விருந்தினர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, விருந்தினர்களை வரவேற்கும் வாத்தியக் குழுக்கள் பற்றி, சென்னை வில்லிவாக்கத்தில் இயங்கிவரும் ‘ஜான்மில்டன் விர்ட்ச்யுசோ’ நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குநர் ஜான் மில்டனிடம் கேட்டதற்கு...

“ஃபர்ஸ்ட் இம்பிரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்னு சொல்வாங்க. அந்தமாதிரி விருந் தினர்களை வரவேற்பதில் காட்டும் பிரமாண்டத்திலேயே அவர்கள் அனைவருக்கும், திருமண நிகழ்வு குறித்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும்’’ எனும் ஜான் மில்டன் அளித்த சில கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு இதோ...

டும் டும் டும் கொட்டட்டும்!

சிங்காரி மேளம்

கோயில் திருவிழாக்களில் இதை சண்ட மேளம் என்பார்கள். பாரம்பர்யமான கலை வடிவம் இது. சண்ட மேளத்துக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம், இது ஃபன் ஆக இருக்கும். இதை வாசிப்பவர்கள் தாளத்துடன் சேர்ந்து ஆடுவது பார்க்க வேடிக்கையாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். இதில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்பர். மொத்தம் 12 பேர் பங்கேற்கும் இந்த வாத்திய நிகழ்ச்சிக்கு 22 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்திருக்கிறோம். பலராலும் விரும்பி நடத்தப்படும் நிகழ்ச்சி இது.

நாசிக் டோல்

இது மஹாராஷ்ட்ராவின் பாரம்பர்ய கலைவடிவம். சென்னையில் உள்ள மார்வாடிகள் இதை விரும்பி தங்கள் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் செய்வர். இப்போது தமிழர்களின் குடும்ப விசேஷங்களிலும் தவறாமல் இடம்பெறுகிறது. குறைந்தது 5 பேர் முதல் 100 பேர் வரை இதில் பங்கேற்பர். எண்ணிக்கைக்குத் தக்கபடி கட்டணமும் உயரும். குறைந்தது 5 பேர் வரை பங்கேற்க 13 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை நிர்ணயிக்கிறோம்.

டும் டும் டும் கொட்டட்டும்!

இங்கிலீஷ் பேண்டு

திருமண விழா என்றால் ஆர்க்கெஸ்ட்ரா, தனி ஆவர்த்தனம் என்ற நிலையை இன்று புதுப்புது நிகழ்வுகள் மாற்றியமைத்துவிட்டன. அவற்றில் ஒன்று இங்கிலீஷ் பேண்டு. இதன் மியூசிக் பார்வையாளர்களை எழுந்து ஆடவைக்கும்.  இதில் கிளாரினெட் இசைக்கருவி இருப்பதால் சினிமாப் பாடல்களைப் பாட முடியும் என்பதோடு இதன் இசையால் வரவேற்பு முடிந்தபிறகும் பார்வையாளர்கள் எழுந்துபோக முடியாதபடி நிறுத்திவைக்கலாம். அத்தனை விருப்பமான நிகழ்ச்சி இது.

குறைந்தபட்சம் இதில் 10 பேர் இடம்பெறுவர். இதற்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். இன்று பல திருமணங்களில் பரவலாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சி இது.

டோலு குனிதா அல்லது டோல் டான்ஸ்

கர்நாடகாவின் ‘ஃபோல்க்’ வகை நடனம் இது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்தியாவில் நூற்றுக்கும் குறைவாகவே இதை நடத்துபவர்கள் உள்ளனர். பொதுவாக 2 பிள்ளைகள் உள்ள வீடுகளில், ஒருவரின் திருமணத்துக்கு சிங்காரி மேளம் வைத்தால், மாற்றாக அடுத்த பிள்ளையின் திருமணத்துக்கு இதை புக் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் நடனமுறையும் உடை அலங்காரமும் ஆப்பிரிக்க பாணியை ஒத்திருக்கும். 12 பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகம். ஆம், ஆண்கள் குழுவுக்கு 55 ஆயிரம் ரூபாய். பெண்கள் குழுவுக்கு 80 ஆயிரம் கட்டணம்.

டும் டும் டும் கொட்டட்டும்!
டும் டும் டும் கொட்டட்டும்!

கதக்

வட இந்தியாவில் பிரபலமான பாரம்பர்யமிக்க நிகழ்ச்சி இது.  இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்பர். வட இந்திய திருமண நிகழ்வுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சியான இது நம்மூர் பரதத்துக்கு இணையாக அங்கு போற்றப்படுகிறது. இதை நம்மூரிலும் விரும்பி ஏற்பாடு செய்கிறார்கள்.

பஞ்சவாத்தியம்

இது கிளாஸிக்கான நிகழ்ச்சி. இதில் எடைக்கா, திமிலா, மத்தளம், இலந்தாளம், கொம்பு என்ற 5 இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகள் அரிதாகக் கிடைக்கக்கூடியவை.

திருமணம் எனும் நிகழ்வு, சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நிகழ்வினைத் தங்கள் அன்பால் சிறப்பிக்க வரும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நினைவுகளில்கூட நீங்கா இடம்பெற இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வுகள் அவசியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு