Published:Updated:

வினை தீர்க்கும் விரதங்கள் !

சாரதா நம்பி ஆரூரன் ஓவியங்கள்: மணியம் செல்வன் படம்: வி.செந்தில்குமார்

வினை தீர்க்கும் விரதங்கள் !

சாரதா நம்பி ஆரூரன் ஓவியங்கள்: மணியம் செல்வன் படம்: வி.செந்தில்குமார்

Published:Updated:

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் சந்திரனும் இணைகின்ற பௌர்ணமி நாளில், கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருவிளக்கு பல தத்துவங்களை உடையது. மேல் நோக்கி எழுவது சுடரின் தன்மை. அந்தச் சுடர் நமக்குள்ளும் ஞான தீபமாகக் கொழுந்துவிட்டு எரிந்து, நமது அறிவையும் உணர்வுகளையும் உயர்த்த வல்லது. புறத்தே சுடரொளி இருளை விரட்டுகிறது. இறைவனது அருளளி, நமது அகத்தை தூய்மையாக்குகிறது.

வினை தீர்க்கும் விரதங்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

உலக மக்கள் நல்லறிவு பெற்று, துன்ப இருளில் இருந்து விடுபட்டு, அஞ்ஞான மயக்கம் அகன்று, வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது விளக்கு வழிபாட்டின் தத்துவம். ஒளி வழிபாடு மிகவும் பழமையானது. சங்க இலக்கியங்களில் இதைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

காட்டில் சிவந்த நிறமுடைய இலவம் பூக்கள் வரிசை வரிசையாக மலர்ந்துள்ளன. அவற்றைப் பார்க்கின்றார் ஒளவையார். 'கார்த்திகை நாளில் பெண்கள் நிரல்பட ஏற்றிவைத்த விளக்கு வரிசைபோல உள்ளது' என்று அகநானூற்றில் சுட்டுகின்றார்.

தென் மாவட்டங்களில் விளக்கை பெண்ணாகவே பாவித்து, சிறு பாவாடை உடுத்தி, மாலைகள் அணிவித்து, மலர்சூடி, பொட்டிட்டு வழிபாடு செய்வதும், கோயில் களில் 108, 1,008 விளக்குகளை ஏற்றி விழாக்கள் கொண்டாடுவதும் நம் பண்பாட்டின் சிறப்பம்சம்!

திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் திருமணவிழாவும், திருச்செந்தூரில் சூரசம்ஹாரமும் காண்பது சிறப்புடையது. அதேபோல, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சோதி காண்பது மிகவும் சிறப்புடையது!

திருக்கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. பனைமரத்தை வெட்டி வந்து கோயில் முன் ஊன்றி, அதோடு பனைமட்டை ஓலைகளை இணைத்து, சுவாமி உலா வரும்போது சொக்கப்பனை கொளுத்தப்படும். சிவன் சோதிப் பிழம்பாக நின்றதைக் குறிப்பதுதான் இந்த சொக்கப்பனை!

வினை தீர்க்கும் விரதங்கள் !

திரிபுராந்தகர்கள் எனும் மூன்று அரக்கர்கள், தேவர்களுக்குத் துன்பம் இழைத்தபோது, முப்புரம் எரித்தான் முக்கண்ணன். பூமியே... தேர்; சூரிய, சந்திரர்கள்... தேரின் சக்கரங்கள்; வேதங்களே... குதிரைகள்; பிரம்மனே... தேரோட்டி; கைலாயம்... வில்; திருமால்... அம்பு; தேவர்கள்... தேரின் பொம்மைகள் எனத் திரண்டு வந்தனர். ஆனால், இவற்றையெல்லாம் பயன்படுத்தாமல்... ஆகாயக் கோட்டைகளாக உலவிக்கொண்டு, எண்ணற்ற இன்னல்களை இழைத்த மூன்று அரக்கர்களையும் தன் புன்னகையைக் கொண்டே எரித்தார் திரிபுர சம்ஹார மூர்த்தி. அந்த நன்னாளே திருக்கார்த்திகைத் திருநாள் என்றும் கூறப்படுகிறது.

கோயிலில் விளக்கேற்றுவதால் நற்கதி அடையலாம் என்பதற்குச் சான்றாக, சுவையான கதை ஒன்று கூறப்படுகிறது. வேதாரண்யம் என்ற நான்மறைக்காட்டில் உள்ள சிவன் கோயிலில் ஏற்றியிருந்த நெய்தீபங்களில் ஒரு தீபம் அணையும் தருணத்தில்,    ஓர் எலி அத்தீபத்திலிருந்த நெய்யை உண்ணச் சென்றபோது, அந்த எலியால் தூண்டப்பட்டதால் தீபத்தின் ஒளி அதிகரித்தது. அதனால் ஏற்பட்ட புண்ணியத்தாலும், இறையருளாலும் அடுத்த பிறவியில் மாபலிச் சக்கரவர்த்தியாக பிறந்தது அந்த எலி!

'நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே’

என்ற நாவுக்கரசர் தேவாரம், இந்நிகழ்வுக்குச் சான்றாகின்றது.

மாபலி சக்கரவர்த்தி... தன் உடலில் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிப்பதற்காக, கார்த்திகை விரதம் இருந்து சிவபெருமானுக்குப் பொரி படைத்தான். நோய் நீங்கிற்று. அது முதல் நெல் பொரி, அவல் பொரி வெல்லம் கலந்து படைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் சிவ பெருமானுக்கு முப்பத்திரண்டு உபசாரங்களுடன் வழி பாடு செய்வது சிறப்புடையது. இயலாதவர்கள் பதினோரு உபசாரங்களுடன் வழிபாடு செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் சந்தனம், பூ, நைவேத்யம், தூபம், தீபம் என்ற ஐந்து உபசாரங்களுடன் வழிபடலாம். ஒன்றுமே முடியவில்லையெனில்... அன்போடு விளக்கேற்றி வழிபட் டாலே போதுமானது என்று ஆகமங்கள் கூறுவதே... விளக்கு வழிபாட்டின் பெருமைக்குச் சான்று!

- கொண்டாடுவோம்...

விரதம் அனுஷ்டிக்கும் முறை

கார்த்திகை விரதம் அனுஷ்டிப்பவர்கள்... மாலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு வரை பழரசம், பழங்கள் உண்ணலாம். அதிக மனபலமும் உடல்பலமும் உடையவர்கள் 'நிர்ஜலம்’ எனும் வெறும் நீரை மட்டுமே ஆகாரமாக உட்கொள்ளலாம். இயலாதவர்கள், ஒருவேளை மட்டும் இட்லி போன்ற பலகாரத்தை சாப்பிடலாம்.  பூஜை முடித்து விளக்கேற்றிய பின் விரதத்தை முடிக்கலாம். அந்த நாள் முழுக்க முருகப் பெருமான், சிவபெருமான் பாடல்களைச் சொல்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

 கார்த்திகை பிரசாதம்  பொரி உருண்டை

தேவையானவை: அவல் பொரி அல்லது நெல் பொரி - ஒரு கிலோ, வெல்லம் - 400 கிராம், நறுக்கிய தேங்காய் துண்டுகள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

வினை தீர்க்கும் விரதங்கள் !

செய்முறை: பொரியை சுத்தம் செய்து கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டவும். அதனை அடுப்பில் வைத்து இரண்டு கம்பிப் பதம் வரும் வரை பாகாகக் காய்ச்சவும். பிறகு, பொரியில் பாகை விட்டுக் கலந்து கொள்ளவும். கையில் சிறிதளவு நெய்யைத் தடவி, பொரி கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக்க... பொரி உருண்டை தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism