Published:Updated:

பெற்றோர்களே...தற்கொலைக்கு தூண்டாதீர்கள் !

நாச்சியாள்

பெற்றோர்களே...தற்கொலைக்கு தூண்டாதீர்கள் !

நாச்சியாள்

Published:Updated:
பெற்றோர்களே...தற்கொலைக்கு தூண்டாதீர்கள் !

அம்மாவும், அப்பாவும் உறவினர் வீட்டுத் திருமணத் துக்குச் செல்கிறார்கள். அங்கிருந்தபடியே, ''டி.வி. பார்த்துட்டு இருக்கியா? ஒழுங்கா புக்கை எடுத்துப் படி. ப்ளஸ் டூ பப்ளிக் எக்ஸாமுக்கு மூணு மாசம்தான் இருக்கு. நல்ல மார்க் வாங்கலேனா... அடி பின்னிடுவேன்'’ என போனிலேயே மகனை மிரட்டுகிறார் அம்மா. வீடு திரும்பினால்... ஆசை மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். கேட்டதெல்லாம் தங்கள் சக்திக்கும் மீறி வாங்கிக் கொடுத்து மகளை வளர்க்கிறார்கள். சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்புப் பள்ளித் தேர்வில் எதிர்பார்த்த மார்க் வாங்கவில்லை. 'அம்மா, அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது?' என்கிற கவலையில், விஷம் சாப்பிட்டு உயிரை மாய்க்கிறாள் மகள்.

இவை கதையல்ல. கடலூரிலும் சென்னையிலும் நடந்த சமீபத்திய நிஜம்!

'இம்மாதிரியான தற்கொலைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் 26 சதவிகிதம் அதிகரித்து உள்ளது’ என்கிற அதிர்ச்சித் தகவல் தருகிறது, நேஷனல் க்ரைம் ரெக்கார்ட் பீரோ!

அதிர்ச்சி கலந்த இந்த அவலத்துக்கு காரணமும், தீர்வும் என்ன? அதைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் சமூக அக்கறையாளர்கள் சிலர்!

தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை சிஸ்டர் லூர்து, ''தற்கொலைக்கு முதல் காரணம்... பெற்றோர் தர்ற அழுத்தம்தான். தங்களின் மகன்/மகள் 'டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும், வெளிநாட்டு வேலைக்குப் போகணும், கைநிறைய சம்பாதிக்கணும்' என்று ஆசைப்படுவது தப்பில்லை. அதற்காக எப்போது பார்த்தாலும் 'படி... படி’ என்று விரட்டிக் கொண்டே இருப்பதுதான் தவறு.

'அநாவசியமா பேசாதே. அந்த நேரத்துல ரெண்டு கணக்கு போட்டுப் பாத்து இருக்கலாம்' என்று பெரும்பாலான அம்மா - அப்பாக்கள் மிரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 'இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே' என்கிற 'டூஸ் அண்ட் டோன்ட்ஸ்’ கட்டளைகளாக மட்டுமே பெரும்பாலும் பேசுகிறார்கள். அன்பான, அரவணைப்பான பேச்சு... பல குடும்பங்களில் இல்லை. படிப்பு மட்டும்தான் பிரதானம் என் கிற எண்ணத்தில், மற்ற குழந்தைகளுடன் 'கம்  பேர்’ செய்து பேசி, தாழ்வு மனப்பான்மையையும் போட்டியையும் உருவாக்குகிறார்கள். இந்த அழுத்தத்துடன் ஸ்கூலுக்கு வரும் குழந்தைகளுக்கு, மார்க், ஹோம் வொர்க் என்று பள்ளியிலும் அழுத்தம் அதிகரிக்க, தப்பிக்கும் வழி தெரியாமல் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்'' என்று விஷயத்தை புரிய வைத்தார் லூர்து.

இந்த வருடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக் காத்திருக்கும் இரு பெண் பிள்ளைகளின் தாயான சாந்தி நாகராஜன், ''முழுக்க பெற்றோர்கள் மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது. இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் அவங்க பசங்களோட பழக்க வழக்கம், ஆரோக்கியத்தைவிட, மார்க்கை பத்தி மட்டுமே அதிகம் கவலைப்படறவங்களாவும், அந்தக் கவலையை குழந்தைமேல கோபத்தோடயும், கடும் வார்த்தைகளோடயும் தெளிக்கறவங்களாவும்தான் இருக்காங்க'' என்று வருத்தத்துடன் ஆமோதித்தார்... சிஸ்டர் லூர்துவின் கருத்துக்களை.

பெற்றோர்களே...தற்கொலைக்கு தூண்டாதீர்கள் !

கல்வியாளர் இரா.நடராசன், ''குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுவதில்லை என்பது, இந்த தற்கொலைகளுக்கு முக்கியக் காரணம். விளையாட்டு என்பதே நேரத்தை தின்று கொல்லும் அநாவசிய விஷயம் என்றுதான் நகர்ப்புற பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போதுதான், தோல்வியைத் தாங்கும் மனப்பான்மையையும், குழுவாக சேர்ந்து இயங்கும் குணத்தையும் கற்றுக் கொள்கிறது ஒரு குழந்தை. இத்தகைய குணங்கள் இருக்கும் குழந்தை, எந்தப் பிரச்னை வந்தாலும் தாங்கிக் கொள்ளும்.

இரண்டாவது காரணம், குழந்தை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவதுதான். இது நகர்ப்புறங்களில் அதிகம். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் விளையாட, எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள அண்ணன், தங்கை என உடன்பிறப்புகள் இல்லாமல் தனிமைப் பட்டு இருக்கும் குழந்தை, தன் பள்ளியில் நடந்த விஷயத்தையோ, தன் பயம், கோபம், சந்தோஷம், பிரச்னையையோ யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்?

இன்றைய நகர்ப்புற பெற்றோர், தங்கள் குழந்தையை உறவினர் வீட்டுக் கல்யாணம், திருவிழா, இறப்பு என்று எந்த நிகழ்வுக்கும் அழைத்துச் செல்வது இல்லை... படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று. சமூக நிகழ்வுகளிலும், உறவு களிலும் இருந்து தள்ளிவைப்பதால், வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமல் இம்மாதிரி யான மனநெருக்கடிக்கு ஆளாகி, கடைசியில் தன்னையே அழித்து எல்லோரையும் துன்பத்தில் தள்ளிவிட்டுப் போகிறார்கள்'' என நிதர்சனத்தை உடைத்தார்.

இந்தத் தற்கொலைகள் பற்றி பேசும் மனநல மருத்துவ நிபுணர், டாக்டர் ராஜ்மோகன், ''சின்னச் சின்ன கிராமங்கள்கூட வேகமாக நகர்மயமாகி வருவது முதல் காரணி. இதன் காரணமாக குடும்பத்துக்குள் இருக்கும் பிணைப்பும், அரவணைப்பும் குறைவது அடுத்த காரணி. ஒரு குழந்தைக்குப் பள்ளியிலும் வீட்டிலும் போட்டியை உருவாக்கும் அளவுக்கு, நம்பிக்கை ஊட்டும் ஊக்கிகளும் ('ஹோப்பிங் அப் மெக்கானிசம்’), நபர்களும் இல்லாதது மிக முக்கியமான காரணி'' என்று இரண்டே வரிகளில் புரிய வைத்தார் விஷயத்தின் சீரியஸ்னெஸ்ஸை!

பாஸிட்டிவ் வழிகாட்டல் அவசியம் !

இங்கே கருத்து சொல்லியிருக்கும் அனைவரும்... இந்த அவலத்துக்கு தீர்வுகளாக ஒருமித்த குரலில் சொல்வது இதைத்தான்...

குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் சிறு சிறு தோல்வி, ஏமாற்றங்களைத் தாங்கி வளரும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

 கோபம், ஏமாற்றம், சந்தோஷம், வலி என எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை நட்சத்திரங்களாக அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் இருப்பது, குழந்தையின் மனவலிமை அதிகரிக்கும்.

 'மார்க் எடுத்தால்தான் திறமையானவன்’ என்கிற எண்ணத்தை விதைக்காமல், 'அதிகபட்சமாக என்ன சாதிக்க முடியுமோ, திறமையைக் காட்ட முடியுமோ... அந்த அளவுக்கு முயற்சி செய்’ என்று பாஸிட்டிவ்வாக வழிகாட்டுவது அவசியம்.

 குழந்தை என்ன செய்கிறான் என்று போலீஸ் மாதிரி கண்காணிக்காமல், 'நீ இதை செய்டா... நாங்க உனக்கு ஹெல்ப், சப்போர்ட் பண்றோம்’ என்ற 'பக்கத்துணை’ உணர்வை வழங்குவது அதிமுக்கியம்.

 வீட்டின் பொருளாதார நிலைமை, கஷ்ட நஷ்டங்களை, குறிப்பிட்ட அளவுக்கு குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்வது, அவர்களை பொறுப்புள்ளவர்களாக்கும்.  

 மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடல் வேண்டவே வேண்டாம். இதுதான் தாழ்வு மனப்பான்மை, போட்டி வெறி போன்ற பிரச்னைகளுக்கு வேர்.

 ஆசிரியர்கள் குழந்தையின் குடும்பப் பின்னணியையும் தெரிந்துகொண்டால், மாணவர் - ஆசிரியர் உறவு கடினமானதாக இல்லாமல் இருக்கும். அது பல பிரச்னைகளையும் தீர்க்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism