Published:Updated:

Money Money Money

மெடிக்ளைம் எனும் 'சிறுசேமிப்பு'!நிதி ஆலோசகர் அனிதா பட் படம்: ச.இரா.ஸ்ரீதர்

Money Money Money

மெடிக்ளைம் எனும் 'சிறுசேமிப்பு'!நிதி ஆலோசகர் அனிதா பட் படம்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

நிதி சம்பந்தமான அடிப்படை விஷயங்கள் சில, குடும்பத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். அடுத்து ஒரு குடும்பத்துக்குத் தேவையான சேமிப்பு விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

குடும்பத்தில் ஏற்படும் முதல் முக்கிய செலவு, மெடிக்கல் செலவுதான். ஆண்டுக்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனைக்கு செல்வது என் வழக்கம். அப்படி ஒன்பது மாதங்களுக்கு முன் பரிசோதனைக்குச் சென்றபோது, 'நுரையீரலில் கட்டி இருக்கிறது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்றார் டாக்டர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு முன் எந்தவித வலியோ... அறிகுறிகளோ தெரியாத நிலையில், செக்கப் மூலம்தான் இந்தப் பிரச்னையே தெரியவர, கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். ஆனால், அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ஆகும் என்று அவர்கள் சொன்ன தைக் கேட்டு நான் அதிரவில்லை. காரணம்... நான் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்ததுதான்! அப்படியரு பாலிசியை எடுக்காமல் இருந்திருந்தால், அந்த மூன்று லட்சம் ரூபாய் மிகப் பெரிய தொகையாக இருந்திருக்கும். அறுவை சிகிச்சையால் வரும் வலியை விட, அந்தச் செலவு தரும் வலி அதிகமாக இருந்திருக்கும். 1993-ம் வருடத்தில் இருந்து மெடிக்ளைம் எடுக்கிறேன். இதுவரை கட்டியது ஒரு லட்சம் ரூபாய்தான். ஆனால் 2011-ல் இந்த அறுவை சிகிச்சைக்கு செலவானது மூன்று லட்சம் ரூபாய்.

Money Money Money

மெடிக்ளைம் பாலிசி பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதே கிடையாது. தினம் டீ குடிக்க சுமார் பத்து ரூபாய் செலவு செய்கிறோம். அதுவே பாலிசி எடுக்க நாள் ஒன்றுக்கு எட்டு ரூபாய் மட்டுமே செலவாகும். அதாவது 35-45 வயதுள்ள ஆணோ, பெண்ணோ இரண்டு லட்சம் ரூபாய்க்கான கவரேஜ் கொண்ட பாலிசியை எடுக்க வருடத்துக்கு 2,868 ரூபாய் செலவு செய்தால் போதும். அதாவது நாள் ஒன்றுக்கு எட்டு ரூபாய். இந்தப் பணத்தை செலவு செய்ய யோசிப்பது எத்தனை முட்டாள்தனம்?!

மெடிக்ளைம் என்பது எதிர்பாராமல் ஏற்படும் பெரிய மருத்துவச் செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளும் பாலிசி. விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான மருத்துவச் செலவுகளை க்ளைம் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவச் செலவுகள் ஏற்படவில்லை எனில், 'எண்டோமென்ட் பாலிசி' போல் முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காது. அதனால்தான் இதுபோன்ற பாலிசிகளை எடுக்கத் தயங்குகின்றனர் பலர். செல்லத்துரையின் கதையைக் கேட்டால்... அத்தகையோர் தங்களின் தயக்கத்தை உடைத்து, மெடிக்ளைம் பாலிசி மீது கவனத்தைத் திருப்புவார்கள் என நினைக்கிறேன்.

எங்கள் அலுவலகத்துக்கு ஏ.சி. ரிப்பேர் பார்க்க வருபவர்தான் செல்லத்துரை. ''ஏம்ப்பா இப்படி மேலேயெல்லாம் ஏறி, அதுவும் கரன்ட் சம்பந்தப்பட்ட வேலை பார்க்கிறே... ஏதாவது அசம்பாவிதம் ஆகிட்டா என்ன பண்ணுவே? மெடிக்ளைம் பாலிசி ஏதாவது வாங்கியிருக்கியா..?'' என்று நானும் என் கணவரும் ஒரு முறை அவரிடம் கேட்டோம்.

Money Money Money

''அதெல்லாம் எனக்கு எதுக்குங்க? அந்த பாலிசி கட்டுறதுக்கெல்லாம் பணத்துக்கு நான் எங்க போவேன்..?'' என்றார் செல்லத்துரை.

''இல்லீங்க... உங்களைப் போல மின்சார சம்பந்தமான வேலை பார்க்கறவங்க கண்டிப்பா மெடிக்ளைம் பாலிசி எடுத்துக்கணும்'' என்று அழுத்திச் சொன்னாலும், அவர் கேட்பதாக இல்லை. அதன் பிறகு பல மாதங்களுக்கு அவரைக் காணமுடியவில்லை.

பின் ஒரு நாள் வந்தவர், ''ஒரு வீட்ல ஆறு அடி உயரத்தில் இருந்த ஏ.சி-யை ரிப்பேர் செய்யுறப்ப, அங்க இருந்த கம்பி மேல விழுந்துட்டேன். இடுப்பு, கால் எலும்பு முறிஞ்சு ஒண்ணரை லட்ச ரூபாய் வரை செலவாகிடுச்சு. நீங்க அப்பவே சொன்னீங்க மெடிக்ளைம் பாலிசி எடுனு. நான் கேட்கல. இப்ப என் சக்திக்கு மீறி செலவு செய்ய வேண்டியதா போச்சு. அந்த நேரத்துல வேலைக்கும் போகாததால வருமானமும் இல்லாம நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்ல'' என்று வருந்தியவர், மெடிக்ளைம் பாலிசி எடுப்பது தொடர்பான விவரங்களையும் கேட்டுக் கொண்டே நகர்ந்தார்.

பொதுவாக, பெண்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படும். திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, நாற்பது வயதை தாண்டிவிட்டாலே கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் என பல சிக்கல்கள் வரும். இதற்காக ஆகும் செலவுகளும் அதிகமாகவே இருக்கும். அதனால் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பெண்களின் மகப்பேறு செலவுகளை ஈடுகட்டும் மெடிக்ளைம் பாலிசியும் கொடுக்கிறார்கள். கர்ப்பம் உண்டானதும் போய் பாலிசி எடுத்து, உடனே க்ளைம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பாலிசி எடுத்த நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் க்ளைம் செய்யமுடியும். அதனால், உங்கள் பெண்ணுக்கு 22 வயதில் திருமணம் செய்யவிருந்தால், 18 வயதிலேயே மெடிக்ளைம் பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

சிலர் மெடிக்ளைம் பாலிசியை தவறாகப் புரிந்துகொண்டு, தனக்கு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்த பிறகு, அதனை மறைத்து பாலிசி எடுக்கிறார்கள். அதனால் கிளைம் கேட்டுப் போகும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரித்து விடுகின்றன. மாறாக, உங்களுக்கு ஏற்கெனவே ஏதாவது நோய்கள் இருந்தால் அதை மறைக்காமல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால்... அவர்கள் அதற்குத் தகுந்த பிரீமியத் தொகையைச் சொல்வார்கள். அப்படி எடுக்கும்பட்சத்தில் உங்களுக்கான க்ளைம் எந்தவித சிக்கலும் இல்லாமல் கிடைக்கும்.

இன்ஷூரன்ஸ் நிறுவனம் அனுமதி கொடுத்துள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தால்கூட, அந்த மருத்துவரிடம் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்தாலும் க்ளைம் கிடைக்கும்.

இவ்வளவு வசதிகள் இருக்கும் இந்த மெடிக்ளைம் பாலிசியை இனியும் எடுக்காமல் இருக்கப் போகிறீர்களா என்ன?!

- பணம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism