Published:Updated:

அன்னைக்காக ஓர் ஆலயம் !

ஆர்.லோகநாதன் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

அன்னைக்காக ஓர் ஆலயம் !

ஆர்.லோகநாதன் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

Published:Updated:
##~##

பெற்றோரை சுமையாகக் கருதி, முதியோர் இல்லத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக் கும் இக்காலத்தில், 'தன் தாய்க்கு பிரமாண்ட கோயில் கட்டி வருகிறார் ஒரு மகன்' என்கிற செய்தி... உச்சகட்ட ஆச்சர்யமான விஷயமாகத்தானே இருக்கும்!

திருச்சி மாவட்டம், துறையூரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தன் தாய் தனபாக்கியம் அம்மாளுக்காக, சுரேஷ்குமார் கட்டி வரும் கோயில், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கல் வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபத்தில், புன்னகையுடன் ஆளுயர வெண்கலச் சிலையாக காட்சி தரும் தனபாக்கியம் அம்மாள் அருகில், பாசம் படர்ந்த நெஞ்சத்துடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் சுரேஷ்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லாரும், 'விநோதமா இருக்கே... அம்மாவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு அவர் மீது அப்படி என்ன பாசம்?’னு கேட்கறாங்க. இந்தக் கேள்விதான் எனக்கு விநோதமா இருக்கு. நமக்கு உயிர் கொடுத்த அம்மாவோட தாய்மைக்கு ஈடா, எந்த மகனாலும் எதுவும் திருப்பிக் கொடுத்துட முடியாது. அப்படியிருக்க, 'அப்படி என்ன பாசம்?'னு ஒரு கேள்வி எங்கே இருந்து வருதுனே தெரியல?'' என்று 'நச்’சென்று கேட்டவர், தொடர்ந்தார்...

அன்னைக்காக ஓர் ஆலயம் !

''என் பாசத்தை, மகிழ்ச்சியை, நன்றியை வெளிப்படுத்த, ஒரு சிறு சந்தர்ப்பமா, எங்க அம்மாவுக்காக இந்தக் கோயிலைக் கட்டுறேன். நமக்கு எல்லாம் ஒரு சாவிக் கொத்தை சில மணி நேரம் கையில் வெச்சுருந்தாலே அது பெரும் சுமையா இருக்கு. ஆனா, பத்து மாசம் வயித்துல சுமந்ததோட, 'என் பையன் நல்லா படிக்கணும்’, 'என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்’, 'என் பையனுக்கு நல்ல குழந்தைங்க பிறக்கணும்’னு தான் வாழுற வரைக்கும் பாசமா, பிரார்த்தனைகளா, சந்தோஷமா, கண்ணீரா தானே... நாம ஒவ்வொருத்தரையும் அம்மாக்கள் சுமக்கறாங்க... வளர்க்கறாங்க... அத்தனை அம்மாக்களுக்கும் என்னோட பாதகாணிக்கைதான் இந்தக் கோயில்!''

- கண்கள் கலங்கித் தெளிகின்றன சுரேஷ்குமாருக்கு.

''என் அம்மா... எந்தச் சந்தர்ப்பத்திலும் மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்கக் கூடாதுனு வாழ்ந்த வைராக்கியக்காரி. 2007-ம் வருஷம் ஹார்ட் பிரச்னையால இறந்தாங்க. அதுக்கு முதல் நாள் வரை தன் வேலைகளைத் தானே செஞ்சுட்டுதான் இருந்தாங்க. அவங்க நினைவுகள்தான் எப்பவும் என்னைத் தாலாட்டிட்டே இருக்குது. இன்னிக்கு நிறைவா சம்பாதிக்கற நான்... சொகுசா ஏ.சி. கார்ல போகும்போதும், குஷன் சோபாவுல சரியும்போதும், 'நீ என்னைப் பத்திரமா சுமந்து பிரசவிக்கலைனா, மழைக்கும், வெயிலுக்கும் என்னைக் காப்பாத்தி வளர்க்கலைனா... இன்னிக்கு இதெல்லாம் எனக்கு கிடைச்சிருக்குமா அம்மா..?’னு தன்னால கண்ணீர் கசியும்.

அன்னைக்காக ஓர் ஆலயம் !

அப்படிப்பட்ட அம்மாவுக்காக ஏதாச்சும் செய்யணும்னு மனசு தவிச்ச தவிப்புதான், மூணாவது வருஷ நினைவு தினத்துல கோயிலுக்கு அடிக்கல் நாட்ட வெச்சது. அடுத்த வருஷம் பிப்ரவரி ஒண்ணாம் தேதி, ஐந்தாம் வருஷ நினைவு நாள். அன்னிக்கு கோயிலைத் திறக்க திட்டமிட்டு இருக்கேன்!'' என்று உணர்வும், நெகிழ்வுமாகப் பேசினார் சுரேஷ்குமார். தனபாக்கியம் - சிதம்பரம் தம்பதிக்கு நான்கு ஆண்கள், ஒரு பெண் என ஐந்து பிள்ளைகள். நான்காவது பிள்ளைதான் இந்த சுரேஷ்குமார்.

வெண்கலச் சிலை இருக்கும் மண்டபத்துக்கு கீழே, பாதாள அறையில் தண்ணீர் நிரப்பி, மீன்கள் விடப்படவிருக்கின்றன. உயிரோட்டமான ஓர் இடத்தில் சிலை இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு! தனபாக்கியம் இறந்தபோது 64 வயது என்பதை நினைவூட்டும் வகையில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண். அதன் உச்சியில், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற சிலை. இடது

அன்னைக்காக ஓர் ஆலயம் !

பக்கத்தில் தியான மண்டபம். நவதானியம், கூழாங்கல், முக்கடல் சங்கமிக்கும் இடத்து மண்... இப்படி 64 விதங்களில் வரையப்பட்ட தனபாக்கியம் அம்மாளின் ஓவியங்கள் என அசத்தலாக இருக்கிறது கோயில். தோசைக்கல்லில் கூட ஓர் ஓவியம். ''இது அம்மா பயன்படுத்தின தோசைக்கல்'' என்று அதற்கும் சென்டிமென்ட் டச் தரும் சுரேஷ்குமார்,

''தனபாக்கியம் அம்மாள் நினைவு துறையூர் நந்த வனம்னு பெயர் சூட்டி இருக்கேன். இந்தக் கோயில் என் ஊர் மக்களுக்கும் பயன்படணுங்கறதுல அக்கறையா இருக்கேன். ஆயிரத்துக்கும் மேலானவங்க கலந்துக்கற நிகழ்ச்சிகள் நடத்துற அளவுக்கு அரங்கத்தையும் அமைச்சிருக்கேன். இந்த இடத்தை இலவசமா கொடுக்கற யோசனை இருக்கு. குறிப்பா, அந்திமக் காலத்தில் இருக்கறவங்க கொண்டாடுற அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக.''

- முதியவர்களின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படுகிறது.

''என் மாமியாருக்கு தனி ஈர்ப்பு சக்தி உண்டு. ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்தாலே, அப்புறம் இந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அத்தையைப் பார்க்காமப் போக மாட்டீங்க!'' என்று மாமியாரை மெச்சும் மருமகளாக சொல்கிறார் சுரேஷ்குமாரின் மனைவி சாவித்திரி. இந்தத் தம்பதிக்கு... கிஷோர் சஞ்சய், ஸ்ரீயா என்று இரண்டு குழந்தைகள்.

''இந்தக் கோயிலைப் பார்த்துட்டு, அண்ணன், தம்பிங்க எல்லாரும் அடிச்சுக்கணும்... 'அம்மாவை நான்தான் பார்த்துப்பேன்'னு உரிமை கொண்டாடி! முதியோர் இல்லங்களை எல்லாம் இழுத்து மூடணும். தாயைவிட சிறந்த கோயில் இல்லைங்கிறத எல்லாரும் உணரணும்!''

அன்னைக்காக ஓர் ஆலயம் !

- அன்பும், ஆக்ரோஷமுமாக சொல்கிறார் ரியல் எஸ்டேட் அதிபரான சுரேஷ்குமார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism