Published:Updated:

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன் படங்கள்: கே.ராஜசேகரன்

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன் படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:

உள்ளத்தை வருடும் நெகிழ்ச்சித் தொடர்

##~##

''அக்கா, நம்ம விருதுநகர் அதிரசம் எடுத்து வரட்டா?'' என்று தொலைபேசியில் ஜெயராணி கேட்டபோது, தித்திப்பில் நாவூறத் தலையாட்டினேன். விருதுநகர் எனும் ஊரின் பெயரே அதிரசமாய் இனித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் பால்யத்தின் பல் முளைத்தது மல்லாங்கிணற்றில் என்றால், அது... வளர் பதின் பருவமெனக் கிளைத்துப் படர்ந்தது... விருதுநகர் மண்ணில்தான். எனது கிராமத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் இருக்கின்ற விருதுநகர்தான், என் வளர்பருவக் கனவுகளின் பிறப்பிடம்!

பட்டணம் என்றால், எனக்கு அப்போது விருதுநகர் மட்டுமே. பிடித்த கனவுப் பண்டம் என்றால், விருதுநகர் அண்டன் பேக்கரிப் பதார்த்தம்தான். விடுமுறையில் சுற்ற விரும்பும் சாலை என்றால், அது விருதுநகர் தெப்பக்குளம் சாலைதான். ஏங்கி எதிர்பார்க்கும் கனவுத் திருவிழா என்றால், அது பங்குனி மாதம் வருகின்ற விருதுநகர் மாரியம்மன் கோயில் தீச்சட்டித் திருவிழாதான். நினைவுக் கிடங்கில் இன்று வரை மணத்துக் கிடக்கும் சந்தனம் என்னவென்றால் - அது விருதுநகர் சத்திரிய நாடார் மகளிர் பள்ளியும், எனது பள்ளித் தோழிகளுடன் பட்டாம் பூச்சியாய்த் திரிந்த அந்த நாட்களும்தான்.

மயிலிறகு மனசு !

எண்ணச் சங்கிலியை இழுத்து நிறுத்தி, என் பக்கத்தில் ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள், 'ஜெயா' என்று நான் அழைக்கின்ற டாக்டர் கே.எஸ்.ஜெயராணி. விருதுநகர் பள்ளிப்பருவ நாட்களில் எனக்கு ஓராண்டு  ஜூனியராக விடுதி வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவள்.

''பார்த்து நாளாகிவிட்டதே ஜெயா'' என்றவுடன்... தன் பரபர மருத்துவத் தொழிலின் ஒரு மதியத்தை எனக்காக ஒதுக்கி, என் நீலாங்கரை வீட்டுக்கு வந்திருந்தாள். சிரித்தபடியே, ''அக்கா அதிரசத்தைப் பெரிய சம்புடத்துல போட்டு அம்மா தரச் சொன்னாங்கக்கா. எடுத்தும் வெச்சாங்க. எப்படி மறந்தேன்னு தெரியலக்கா'' என்றவளைக் கட்டிக்கொண்டேன்.

சமூகத்தில் பிரபலமான மகப்பேறு மருத்துவராக உயர்ந்திருக்கும் அவளைப் பார்க்கையில் எல்லாம்... துறுதுறுவெனச் சுட்டித்தனமாகத் திரிந்த ஒன்பதாவது வகுப்புப் பெண்தான் என் மனக்கண்ணில் தெரிவாள். இன்றும் குறையாத அதே சுறுசுறுப்புடன், எத்தனையோ பெண்களின் குழந்தையில்லாத குறையைத் தீர்த்து வைத்திருக்கின்ற திறமையான மருத்துவரான அவளை, ஒரு அக்காவுக்குரிய பெருமிதத்துடன் பார்த்தேன்.

மயிலிறகு மனசு !

என் அருகில் மிக உரிமையுடன் நெருங்கி உட்கார்ந்திருந்த அவளுடைய முகத்தில் எனக்குப் பிடித்த அந்தச் சிரிப்பு... முழுதாக விகசித்திருந்தது. நேர்த்தியாக உடையணிவதில் ஜெயாவுக்குக் கவனம் உண்டு. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்காகச் சென்றுவிட்டு, அழகாக வேலைப்பாடு செய்திருந்த பச்சை நிறப் புடவையில் அப்படியே வந்திருந்தாள். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும், அவளது சில முக்கியமான நிகழ்வுகளில் என்னை மறக்காமல் அழைத்து அவள் சிறப்பிக்கத் தவறியதேயில்லை.

சென்ற வருடம் 'காதலர் தின’த்தையட்டி சென்னை கடற்கரையில், தனது ஆகாஷ் மருத்துவமனை சார்பாக நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியைத் துவக்கி வைக்க அழைத்திருந்தாள். அவளோடு ஊர்க்கதை பேசியபடியே கடற்கரையில் நாங்கள் நடந்த அன்று, எங்களுக்கு விருதுநகர் தெப்பக்குளத்தைச் சுற்றி வந்த அனுபவம்தான். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் மறக்காமல் மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்திவிடுவாள். அத்தனை வேலைகளின் நடுவிலும் வருகின்ற அந்த வாழ்த்தின் அடியில், வற்றாத எங்கள் பால்யத்தின் சுனை சூல் கொண்டிருக்கும்.

மருத்துவராக வேண்டுமென்பதைத் தன் பள்ளிப் பருவக் கனவாகவே வைத்து கடுமையாக அதற்காகப் படித்தவள். முழுவதுமாக மதிப்பெண்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வான ஜெயா, எம்.பி.பி.எஸ். (MBBS) படிப்பின்போது மூன்று தங்கப் பதக்கங்களும், டி.ஜி.ஓ. (DGO) படிப்பின்போது மூன்று தங்கப்பதக்கங்களும் பெற்று, பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டராகத் தேர்ச்சி பெற்றவள். ஆசியாவிலேயே முதன்முறையாக ஐ.வி.எஃப். (IVF) மருத்துவத்தில் சாட்டர்ன் ஆக்டிவ் லேசர்' (Saturn Active Laser) எனும் தொழில்நுட்பத்தைத் தனது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியவள். குழந்தையின்மை ஒரு குறையல்ல... நிவர்த்திக்கக்கூடிய ஒன்றுதான் என்று விழிப்பு உணர்வை ஊட்ட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலிப் பேச்சுக்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் என நடத்தியிருந்தாலும், ஜெயாவின் கொண்டாட்டத்துக்குரிய இரண்டு முக்கிய சாதனைகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக, 55 வயதுப் பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் இரட்டைக் குழந்தைகளை பிறக்க வைத்திருக்கிறாள். பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாமல் இருந்த, ஓமன் நாட்டு பெண்ணுக்கு, வெறும் திசுக்கோளமாக இருந்த ஒன்றைக் கர்ப்பப்பையாக மறு உருவாக்கம் செய்து, அப்பெண்ணுக்கு மாதாந்திர சுழற்சி வரச்செய்திருக்கிறாள்.

தொலைபேசி வாயிலாக, அவளுக்கு அச்சமயம் என் வாழ்த்தைச் சொன்னபோது, விருதுநகர் அருகே ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் பிறந்து, தனது கல்வித்திறனால் மருத்துவராகின்ற கனவை நிறைவேற்றக் கண்விழித்து இரவெல்லாம் படித்த, அந்தக் 'குட்டி ஜெயா’ கண்முன் வந்தாள். தான் கண்ட அந்தச் சிறு கனவினை, பெண்களின் தாய்மைக் கனவுகளைப் பூர்த்தி செய்கின்ற தொடர்கனவுகளாக விரித்துக்கொண்ட ஜெயாவுக்கான அன்றைய என் முத்தத்தினை, ஊஞ்சலில் என்னைப் பற்றியிருந்த அவளது புறங்கையில் இன்று பதித்தேன்.

மதிய நேரத்துக்கான தகிக்கின்ற வெப்பமின்றி, மிதமாக நுழைந்த மந்தார வெயில் எனக்கு விருதுநகரின் 'வெயிலுகந்த அம்மன்’ கோயில் நினைவூட்டியது. ''என்ன அழகான பெயர்... வெயிலுக்கு உகந்தவள்'' என்று கொஞ்சம் சத்தமாக நான் சொன்னவுடன், ''நாம் சந்திக்கும்போதெல்லாம் விருதுபட்டியும் கூடவே ஓடி வந்துடுதுல்ல அக்கா..?!'' என்றாள். தலையசைத்த என் தோள்மீது கொஞ்சம் சாய்ந்துகொண்டாள்.

வாதாங்கொட்டைகள் பொறுக்க அதிகாலையில் சேர்ந்து சென்றதையும், ஒரு விடுமுறையில் 15 நாட்கள் நான் மட்டும் ஊர்சென்றுவிட, திரும்பும் வரை தனிமையில் இருந்த ஜெயா, நான் விடுதி வந்தவுடன் என்னைக் கட்டிப்பிடித்து அழுத அழுகையும், எங்களின் இன்னொரு தோழி துர்கா, அப்போது வியப்பாக எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தையும் அசைபோட்ட அந்த மதியத்தில்... அவளது ஸ்டெத்தஸ்கோப்பும் எனது பேனாவும் இல்லாத உலகத்தில் இருந்தோம்.

பழங்கதைகள், குடும்பம், வேலை, உடைத்தேர்வு என பலவற்றைப் பகிர்ந்தபின், ''மறக்காமல் அதிரசத்தைக் கொடுத்தனுப்புறேன் அக்கா'' என்று விடைபெற்றாள். அவள் குரல் என்னைத் தொடர, வழியனுப்பிவிட்டு ஊஞ்சலைப் பார்த்தேன். தன்மேல் சற்று முன்வரை இரண்டு பள்ளிச் சிறுமிகளைச் சுமந்திருந்த உல்லாசத்தில் இருந்தது அது. அதன் ஓரத்தின் மேல் ஒட்டியிருந்த ஜெயாவின் அரக்கு நிற வட்டப் பொட்டு. எங்கள் பால்யத்தின் நிலவாய் இன்றிரவு வீட்டுக்குள்ளும் சுடர்விடும்!

- இறகு வருடும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism