Published:Updated:

லஷ்மி !

ஓர் உயிர் போராட்டக் கதை! படங்கள்: ச.வெங்கடேசன் கே.ஏ.சசிகுமார்

லஷ்மி !

ஓர் உயிர் போராட்டக் கதை! படங்கள்: ச.வெங்கடேசன் கே.ஏ.சசிகுமார்

Published:Updated:
##~##

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட எத்தனையோ மனுக்கள், சத்தமில்லாமல் போவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட 'என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...’ என்று அல்காதிரிவாரி லஷ்மி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு... பலரையும் கண்ணீர் கசிய வைத்துவிட்டது!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பவர்தான் இந்த லஷ்மி. நாடெங்கிலும் இதுவரை இவர் ஏறி, இறங்கிய மருத்துவமனைகளின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும். சொந்த கிராமமான பத்தேபூரில் தொடங்கிய அவருடைய உயிர் போராட்ட பயணம்... தற்போது, தமிழ்நாட்டின் வேலூரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் தனியார் விடுதியன்றில் தங்கியபடி சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடுதி அறையில் உடலின் மீது போர்வை அடுக்குகள், நாசியில் மாஸ்க், அசைவற்ற கண்கள்... என்று உருக்குலைந்து போய் கிடக்கிறார் 21 வயது இளம்பெண்ணான லஷ்மி. அருகில் நின்று கண்ணீர் கசிய நம்மிடம் பேசினார் அவருடைய அம்மா சூரஜ் முக்தி...

லஷ்மி !

''எனக்கு நாலு பெண்கள். ஒரு பையன். விவசாயக் குடும்பம். இவ நாலாவது பெண். 98-ம் வருஷம் ஒரு நாள் திடீர்னு மயங்கி விழுந்தா. ஆஸ்பிட்டல்ல சேர்த்தப்போ... ரத்தம் குறைவா இருக்குனு சொல்லி ஒரு யூனிட் ரத்தம் ஏத்தி, மாத்திரையெல்லாம் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகும் அடிக்கடி மயங்கி விழவே... கான்பூர், தனியார் மருத்துவமனையில சேர்த்தோம். 'உங்க பொண்ணுக்கு ரத்தம் ஊறும் சுரப்பி நின்னுடுச்சு. கூடவே ரத்தப் புற்றுநோயும் இருக்கு’னு இடியை இறக்கிட்டாங்க.

நிலத்தையெல்லாம் வித்து, கடனையும் வாங்கி மும்பை மருத்துவமனையில சேர்த்தோம். 'ரத்தப் புற்றுநோய்க்கு மட்டுமில்ல, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையும் சேர்த்துச் செய்யணும்’னு சொன்னாங்க. அதுவரைக்கும் மொத்தம் 12 லட்சத்துக்கு மேல செலவாயிடுச்சு. அப்படியும் நிலைமை சீராகாததால, சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்த்து 6 லட்சத்துக்கு மேல செலவு செய்தோம். நிலமை இன்னும் மோசமாத்தான் ஆச்சுது.

லஷ்மி !

இந்த நிலையில்தான் எங்களுக்கே தெரியாம, கான்பூர் நீதிமன்றத்துல, 'எங்க சக்திக்கும் மீறின மருத்துவச் செலவுக்கு வழியில்லாததால், என்னைக் கருணைக் கொலை செய்துடுங்க’னு இவளே மனு போட்டிருக்கா. விஷயம் தெரிஞ்சு அதிர்ந்து போயிட்டோம். 'கருணைக் கொலைக்கு அனுமதிக்க முடியாது' என்று சொன்ன நீதி மன்றம், 'மருத்துவச் செலவுக்காக மத்திய சுகாதார ஆணையம் 12 லட்ச ரூபாய் அளிக்கும்’னு சொல்லிடுச்சு.

மனதில் கொஞ்சம் தெம்பு ஊற, டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போனோம். 'வேலூர், சி.எம்.சி. மருத்துவமனையில்தான் உரிய சிகிச்சை கிடைக்கும்'னு அனுப்பி வெச்சுட்டாங்க. தினம் ரூம் வாடகை, சாப்பாட்டுச் செலவு, சிகிச்சைனு கையில் இருந்த கடைசிப் பணமும் கரைஞ்சுட்டு இருக்கு. மத்திய அரசோ, 'நீங்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் பணம் கொடுக்க முடியும். சி.எம்.சி. தனியார் மருத்துவமனை என்பதால் செலவுகளை ஏற்க முடியாது’னு சொல்றாங்க. இப்போ கடவுளும் கைவிட்ட மாதிரி உணர்றோம்!''

- சோகத்தின் கனம் தாங்காமல் அந்த அறையே திணறியதுபோல் இருந்தது.

''இதுமாதிரி நோய் இனி யாருக்கும் வரக்கூடாதுங்கிறதுதான் இப்போ என் பிரார்த்தனை!''

- இரண்டொரு வார்த்தைகள்தான் வந்தன லஷ்மியிடமிருந்து. மரணத்துக்கு மனு போட்டவராக இருந்தாலும், அவருடைய கண்களில் வாழ்வுக்கான ஏக்கம் தேங்கியே இருக்கிறது... வழி கிடைக்கட்டும்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism