Published:Updated:

சரளா மிஸ்...

ஒரு கண்ணீர் கதை! ம.பிரியதர்ஷினி படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ப.சரவணகுமார்

சரளா மிஸ்...

ஒரு கண்ணீர் கதை! ம.பிரியதர்ஷினி படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

''நீங்க பாடம் நடத்துறது பிடிக்கும் மிஸ். உங்களையும் ரொம்பப் பிடிக்கும். ஹேப்பி டீச்சர்ஸ் டே!''

- கிருத்திகா, 2-ம் வகுப்பு, பி செக்ஷன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இரண்டு மாதங்களுக்கு முன் வந்து சென்ற ஆசிரியர் தினத்தன்று (செப்டம்பர்-5, 2011) சரளா மிஸ்ஸுக்கு வந்து குவிந்த வாழ்த்து அட்டைகளுள் ஒன்றுதான் இது. இப்போது சரளா மிஸ் இந்த உலகத்தில் இல்லை. மழைநீர் கால்வாய்க்காகவெட்டப்பட்டு மூடப்படாமல் இருந்த குழியில் தவறி விழுந்து, அதில் நிரம்பியிருந்த மழைநீருக்கு இரையாகிப் போய்விட்டார்... சமீபத்திய பேய் மழையின்போது!

சென்னை, எம்.ஜி.ஆர். நகரில், இரண்டே அறைகளாகக் குறுகியிருக்கிறது சரளாவின் வீடு. இறுதிச் சடங்குகளை முடித்து வீடே ஜீவனற்றுக் கிடக்கிறது. தன் குரலில் ஜீவனை தட்டி எழுப்பிப் பேச ஆரம்பித்தார் சரளாவின் அம்மா அம்சா.

''எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். சரளா மூணாவது பொண்ணு. என் வீட்டுக்காரர் குடிச்சே எல்லாத்தையும் அழிச்சுட்டார். பிள்ளை கள்ல நல்லா படிக்கிறவ சரளாதான்ங்கிறதால, அவளை மட்டும் கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம். டீச்சர் டிரெயினிங் முடிச்சுட்டு, பி.எஸ்சி. படிச்சா. எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பா. ஆரம்பத்துல ஒரு ஸ்கூல்ல வேலை பார்த்தா. ரொம்பக் குறைவான சம்பளம். ரெண்டு மாசத்துக்கு முன்னதான் எம்.ஜி.ஆர். நகர்ல இருக்கற அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல சேர்ந்து, மூவாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கினா. அவளுக்காகவேதான் ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம்...''

சரளா மிஸ்...

- மாலைக்கு நடுவில் புகைப்படமாக இருக்கும் சரளாவை, ஒரு முறை நம் கண்கள் துழாவித் திரும்பின.

''தன்னோட மூவாயிரம் ரூவா சம்பளத்துல எங்க குடும்பத்தை கட்டும் சிட்டுமா தாங்கினா சரளா. தினமும் ஸ்கூல் விட்டதும் அங்கேயே புள்ளைங்களுக்கு டியூஷன் எடுப்பா. ஆனா, பணத்துக்காக டியூஷன் எடுக்கறதுல அவளுக்கு விருப்பம் இல்ல. நான்தான், 'நாம அந்த நிலையில இல்லையேம்மா. முடியாதவங்ககிட்ட குறைச்சலா ஃபீஸ் வாங்கிக்க’னு சொன்னேன்.

ஒரு நாள், 'அம்மா... ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலீசுலதான் பேசுறாங்க. எனக்குப் புரியுது. ஆனா, திருப்பிப் பேச முடியல. அதனால இங்கிலீசுல பேசறதுக்கு படிக்க (ஸ்போக்கன் இங்கிலீஷ்) போறேன்'னு சொல்லி, தி.நகர்ல இருக்கற இங்கிலீசு கிளாஸ்ல சேர்ந்தா'' என்றவர், அறையின் மூலையில் கிடக்கும் சரளாவின் இங்கிலீஷ் புத்தகங்களை கண்ணீர் மல்க நம்மிடம் காட்டினார்.

''ஸ்கூல், டியூஷன் முடிச்சு வீட்டுக்கு வந்துட்டு, உடனே இங்கிலீசு கிளாஸுக்கு போயிட்டு, நைட் எட்டரை மணிக்குத்தான் திரும்பி வருவா. அன்னிக்கு மழையா இருந்ததால செல்போனை வீட்டுலயே வெச்சுட்டு போயிட்டா. நைட் ஒன்பது மணியாகியும் வராதால... பதற்றமாயிடுச்சு. அவ படிக்கப் போன ஸ்கூல் பேருகூட எங்களுக்குத் தெரியாது. நார்த் உஸ்மான் ரோடுங்கிறது மட்டும் தெரியும்ங்கிறதால... அங்க போய் ஸ்கூலைக் கண்டுபிடிச்சுக் கேட்டோம். வழக்கமான டயத்துக்குக் கிளம்பிட்டதா சொன்னாங்க. முட்டி அளவு தண்ணி நின்ன ரோட்டுல, கண்ணுக்குத் தெரிஞ்சவரை தேடிட்டு, போலீஸ்ல புகார் கொடுக்க போனப்ப... அங்க இங்கனு அலையவிட்டாங்க. வெறுத்துப் போய் வீட்டுக்கு வந்துட்டோம்''

- இரவெல்லாம் வெளியில் மழை கொட்டித் தீர்க்க, வீட்டுக்குள் அச்சமும், அழுகையுமாக கழிந்திருக்கிறது சரளாவின் உறவுகளுக்கு.

சரளா மிஸ்...

''மறுநாள் காலையில ஆறு மணிக்கு மறுபடியும் உஸ்மான் ரோட்டுக்கு போய்த் தேடினோம்...'' எனும்போதே குரல் உடைந்து கண்ணீர் வழிகிறது அம்சாவுக்கு. துடைத்துக் கொண்டே தொடர்ந்தார்.

''குப்பையெல்லாம் அரிச்சுக் கிடக்க, எம் பொண்ணு அதுக்கு நடுவுல, ஒரு குப்பைத்தொட்டி பக்கத்துல மல்லாந்து கிடந்தா. அவளை அப்படி ஒரு கோலத்துல பார்த்து பெத்த உசுரு செத்தே போச்சு. ஸ்கூல் பசங்களுக்கு அப்பப்ப கொடுக்கிறதுக்காக எப்பவும் பையில சாக்லேட் வச்சிருப்பா. அந்தப் பையோடதான் அவ கிடந்தா'' என்றவர், மேற்கொண்டு பேசமுடியாமல் கதறினார்.

''கஷ்டப்பட்ட எங்க குடும்பத்துல இருந்து படிப்பால முன்னுக்கு வந்த சரளாவால, அவ்ளோ பெருமைப்பட்டோம். நம்பிக்கையா இருந்தோம். டியூஷன் குழந்தைங்ககிட்ட, 'தப்பு செஞ்சா கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்’னு சொல்லிட்டே இருப்பா. இப்ப யாரோ செஞ்ச தப்புக்கு என் பொண்ணோட உயிரைப் பறிச்சுட்டானே அந்தக் கடவுள்..!'' என்று கதறி அழுத அம்சாவைத் தேற்றத் தெம்பற்று இருந்தோம் நாம்.

சரளாவுக்கு... தமிழக அரசு சார்பில்

சரளா மிஸ்...

2 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரளா இறந்த அடுத்தடுத்த நாட்களில்... சென்னை முழுக்க மாநகராட்சி சார்பில் தோண்டிப் போடப்பட்டிருக்கும் குழிகளை 'எச்சரிக்கை' போர்டும், சிவப்பு நிற ரிப்பன்களும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன. மேற்கொண்டு சென்னையில் வேறு மனித உயிர்கள் பலியாகிவிடாமல் காத்திருக்கும் சரளாவின் மறைவுக்குப் பிறகாவது... எப்போதுமே லேட்டாக விழித்துக் கொள்ளும் தனது போக்கை, அரசு இயந்திரம் மாற்றிக் கொள்ளுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism