Published:Updated:

உலகையே ஈர்க்கும் 'இங்க்'லேடி !

இரா.வினோத்

உலகையே ஈர்க்கும் 'இங்க்'லேடி !

இரா.வினோத்

Published:Updated:
##~##

பக்கத்து வீட்டுப் பெண்போல் எளிமையாக, சிநேகத்தோடு, நம்மை வரவேற்கிறார் லஷ்மி ப்ரதுரி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2010-ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் இடம்பிடித்த பவர்ஃபுல் லேடி!

இந்தியாவின் மிக முக்கியமான ஹோஸ்ட்களில் ஒருவர், உலகளவில், கார்ப்பரேட் கான்ஃபரன்ஸ் அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவனாக கருதப்படும் 'டெட் கான்ஃபரன்ஸ்’ எனும் அமைப்புடன் இணைந்து, இந்தியாவில் புதிய சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் 'தி இங்க் கான்ஃபரன்ஸ்’  அமைப்பின் தலைவர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய சிந்தனையாளர், நாடகக் கலைஞர், சமூக சேவகி... இன்னும் இன்னும் நீளும் லஷ்மி ப்ரதுரியின் பன்முகங்கள்தான், பவர்ஃபுல் லேடியாக இவரை உயர்த்தியிருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூரு, இந்திரா நகரில் உள்ள வீட்டில், ஆவி பறக்கும் காபி உபசரிப்போடு ஆரம்பித்தார் லஷ்மி... ''பிறந்தது சென்னையில்தான். அப்பா திருமலை ராவ், பத்மபூஷண் அவார்ட் வாங்கிய சுதந்திர போராட்ட வீரர், டாக்டர். நான் பிறந்ததும் எங்கம்மா இறந்துட, பாட்டிதான் வளர்த்தாங்க.

உலகையே ஈர்க்கும் 'இங்க்'லேடி !

ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஹைதராபாத்துலதான். பி.எஸ்சி. மேத்ஸ்ல 95% மார்க் வாங்கினதால், மும்பை ஐ.ஐ.டி-யில ஸீட் கிடைச்சுது. அங்கேயும் நல்ல பர்சன்டேஜ் வாங்க, பஜாஜ் இன்ஸ்டிடியூட்ல எம்.பி.ஏ. சான்ஸ். 'இரண்டாவதா ஃபைனான்ஸ் சப்ஜெக்ட்ல ஒரு எம்.பி.ஏ. படிக்க, அமெரிக்காவுல இருக்கற போர்ட்லாந்து யூனிவர்சிட்டிக்கு போகட்டுமா?'னு அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்டு நின்னேன். அது... 1983. அப்பல்லாம் மிடில் கிளாஸ் பொண்ணு, தனியா வெளிநாட்டுக்குப் போறது, கிட்டத்தட்ட நிலவுக்குப் போற மாதிரிதான். ஆனாலும் என் விருப்பப்படியே அனுப்பி வெச்சார் அப்பா. இன்னிக்கு நான் அடைஞ்சுருக்கிற எல்லா வெற்றிகளுக்கும் காரணம்... ஒரு தோழனா இருந்து என்னை உற்சாகப்படுத்தின அப்பாதான்!'' என்ற லஷ்மிக்கு, போர்ட்லாந்தில்தான் அவருக்கான வாசல்களும், வெளிச்சங்களும் கிடைத்திருக்கின்றன.

''தன்னம்பிக்கை, நுனிநாக்கு ஆங்கிலம், எதிலும் வேகமாக செயல்படும் ஆற்றல், நெகட்டிவ் சிந்தனைகளை பாசிட்டிவா மாற்றும் மனசு, எழுத்து, பேச்சு, கலை, நாடகம்னு எல்லா திசைகளிலும் என்னை மாஸ்டராக்கியது... போர்ட்லாந்துதான்.

அந்த யுனிவர்சிட்டியில் நான் ஒருத்தி மட்டும்தான் இந்தியன். எல்லா கல்லூரி விழாக்களுக்கும் புடவையில்தான் போவேன். 'பிரவுனிஷ் வுமன்’னு ஒதுக்காம, என் திறமையையும் நம்ம கலாசாரத்தையும் அவங்க கொண்டாடி ஊக்குவிச்சதோட விளைவுதான் என் வளர்ச்சி!

அங்க நாடகம்ங்கறது... பொழுதுபோக்கு வரிசையில இல்லை; நாட்டையே புரட்டிப்போடும் மீடியம். வலி நிறைந்த கறுப்பின மக்களோட சரித்திர நாடகங்களை ஒரு பார்வையாளரா இருந்து பார்த்த எனக்குள்ளயும் அந்தக் கலை இறங்க, நானும் நாடகக் குழுவில் சேர்ந்தேன். சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட திருநங்கைகளோட உரிமையைப் பேசின நவீன நாடகமான 'கலர் கேர்ள்ஸ்’தான், என்னோட முதல் நாடகம். அதில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை மேடையேற்றினேன்'' என்றவர், படிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

''92% மார்க் எடுத்து, அமெரிக்காவில் 'இன்டெல்’ கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜரா வேலையில் சேந்தேன். இந்தியாவைப் பத்தி பேச்சு வரும்போது எல்லாம், 'அது ஏழை நாடு, அழுக்கா இருக்கும், நிறைய சேரிகள் இருக்கும்’னு பேசற அமெரிக்கர்கள்கிட்ட, 'அது தவறான எண்ணம்... அது திறமைசாலிகளின் நாடு, கலாசார, பண்பாட்டுச் சிறப்புள்ள நாடு’னு மறுத்துப் பேசுற என்னை யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க. என் பன்முகத் திறமையை, இந்தியாவோட சிறப்பை அமெரிக்காவில் உரக்கச் சொல்றதுக்காக பயன்படுத்தினேன். அமெரிக்க கவர்மென்ட் ரேடியோவில், இந்தியா பத்தி பேசுறது, முதன்மைப் பத்திரிகைகளில் இந்தியா பத்தி எழுதுறது, அமெரிக்கா வர்ற இந்திய பிரபலங்களை பேட்டி எடுக்கறனு... இந்தியா குறித்த மேலான சிந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமா அந்த நாட்டுல விதைச்சேன்'' என்றவருக்கு, அதன் தொடர்ச்சியாக... விளம்பரம், கம்யூனிகேஷன், ஹெ.ஆர். என 'இன்டெல்’ கம்பெனியின் பல பொறுப்புகளும் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இடையில், மனைவி என்கிற புரமோஷனும் கிடைத்திருக்கிறது.

''கணவர் ரஜத் ரக்கிட், அமெரிக்க வாழ் பெங்காலிக்காரர். காதல் கல்யாணம்தான். எங்கப்பா இறந்ததும், அவரோட இழப்பைத் தாங்க முடியாம, ஆறுதலுக்காக இந்தியா வந்துட்டேன். எட்டு வயசு மகனோட நான் இங்க தங்கிட, கணவர் மட்டும் அமெரிக்காவுலயே இருக்கார். அடிக்கடி போய் பார்த்துட்டு வர்ற அதே கையோட, அமெரிக்காவுல எனக்கு இருக்கிற வேலைகளையும் முடிச்சுட்டு வந்துடுவேன்'' என்றவர், சமூக சேவையிலும் அக்கறை காட்டுகிறார். இங்கே... அமெரிக்கா உதவித்தொகை மூலம் கிராமப்புற ஏழைக் குழந்தைகள் மற்றும் டீச்சர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி கொடுத்திருப்பதோடு... ஒரு லட்சம் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரும்  கொடுத்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இப்படி உதவியிருக்கிறார்.

தனது 'தி இங்க் கான்ஃபரன்ஸ்’ பற்றிப் பேச ஆரம்பித்ததும், இன்னும் பெருமை வந்தமர்கிறது லஷ்மி முகத்தில்.

''டெட் (TED -Technology Entertainment and Design) என்பது, யு.எஸ் மற்றும் யு.கே-வில் மட்டும் பரவலான தலைப்புகளில் கார்ப்ரேட் கருத்தரங்குகளை நடத்துகிற புகழ்பெற்ற தொண்டு அமைப்பு. அந்தக் கருத்தரங்குகளில் கலந்துகிட்ட 'பிரசன்ட்டர்ஸ்’ பட்டியல், பில் க்ளின்டன், பில் கேட்ஸில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் வரை நீளும். அந்தளவுக்கு அறிவில், பேச்சாற்றலில் செறிவானவர்கள் ஏறும் மேடை அது.

நம் நாட்டிலும் இப்படி பிரமாண்ட, தரமான கருத்தரங்குகள் நடத்தணும்ங்கிற ஆர்வ மிகுதியில், 'இந்தியாவிலும் கான்ஃபரன்ஸ் நடத்துங்க'னு ஒவ்வொரு வருஷமும் அந்த அமைப்பினர்கள்கிட்ட கேட்பேன். இளக்காரமா சிரிச்சுட்டுப் போயிடுவாங்க. இப்படி ஒண்ணுல்ல... ரெண்டில்ல... பதினோரு வருஷமா மனம் தளராம, தொடர்ந்து அவங்களை அப்ரோஷ் பண்ணிட்டே இருந்தேன். கடைசியா நானே ஒரு டீமை உருவாக்கி... காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நம் நாட்டின் மொழி, கலாச்சாரம், உணவு, கண்டுபிடிப்புகள், திறமைகள், கலைகள்னு ஸ்டடி செய்து, 'டெட்’கிட்ட சமர்பிச்சேன். 'வாவ்!’னு ஆச்சர்யமானவங்க, 'எங்ககூட டை-அப் வெச்சு, நீங்களே இந்தியாவில் கான்ஃப்ரன்ஸ் நடத்துங்க’னு சொன்னாங்க. அமெரிக்கா, ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் மறுபக்கத்தையே பார்க்க விரும்பாத 'டெட்’... எனக்கு 'ஓ.கே’ சொன்ன சந்தோஷத்திலும், பொறுப்பிலும் உருவானதுதான் 'இங்க்' (INK- INnovation Knowledge)’'' என்றவர்,

''இங்க் அமைப்போட முதல் கருத்தரங்குல பொருளாதார வசதியில்லாம அங்கங்கே மறைஞ்சு கிடந்த 300 திறமையாளர்களைத் தேடிப்பிடிச்சு மேடை ஏத்தினோம். கலை, அறிவியல், இசை, விளையாட்டு, தொழில்நுட்பம், சுயதொழில்னு இயங்கிட்டு இருந்த அவங்க மேல வெளிச்சம் பாய்ச்சினோம். 'டெட்’கிட்ட இருந்து பாராட்டு கிடைக்க, எங்க வெற்றியை உறுதி செஞ்சுகிட்டோம்.

இந்த வருஷம் டிசம்பர் மாசம் ஜெய்ப்பூரில் ரெண்டாவது 'இங்க்’ கான்ஃபரன்ஸ் நடக்க இருக்கு. இதுல ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறமையாளர்கள் பங்கேற்கப் போறாங்க'' என்ற லஷ்மி,

''எங்க இங்க், உலகின் பார்வையை இன்னும் இந்தியா நோக்கித் திருப்பும்!''

- நம்பிக்கையோடு சிரிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism