Published:Updated:

என் குடும்பம் ! - பி. வாசு

எம்.குணா

என் குடும்பம் ! - பி. வாசு

எம்.குணா

Published:Updated:
##~##

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு வெற்றிப் படங்களை வெளியிட்டவர், டைரக்டர் பி.வாசு. 'மன்னன்’, 'ரிக்ஷா மாமா’ என்று ஓர் ஆண்டின் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியான வாசுவின் இரண்டு படங்களும் 100 நாட்கள் தாண்டி ஓடியபோதும், தன் கேரியரில் தொடர்ந்து 12 வெற்றிப் படங்கள் இயக்கியபோதும், பணிவைவிட்டு என்றும் அகலாதவர். அவர் வெற்றிக்குப் பின் ஒளி(ர்)ந்திருக்கும் சக்தி, அவர் மனைவி சாந்தி!

''அப்பா பீதாம்பரம் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரோட ஆஸ்தான மேக்கப் மேன். அண்ணன்கள் மூணுபேர், தங்கைகள் ரெண்டு பேர், இவங்களோட நான்னு, எங்க குடும்பம் ரொம்பப் பெருசு. எப்பவுமே கல்யாண வீடு மாதிரி கலகலனு கூட்டம் இருக்கும். பொதுவா, பையன் மேலதான் பொண்ணுங்க ஆசைப்படுவாங்க. ஆனா, சாந்தி, எங்க கூட்டுக் குடும்பத்துல வாக்கப்பட ஆசைப்பட்டு, அதனால் என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டா. எங்க அப்பாவோட கடைசித் தங்கை மகள்தான் சாந்தி. சின்ன வயசுல இருந்தே எங்க வீட்டில் வளர்ந்தவ...'' என்று வாசு சொல்ல, தலையசைவில் அதை ஆமோதித்தார் சாந்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் குடும்பம் ! - பி. வாசு

''கல்யாணமான புதுசுல நானும் சாந்தியும் சேர்ந்து பார்த்த முதல் படம், 'மூன்றாம் பிறை’. 'நானே டிக்கெட் எடுத்துடறேன்...’னு சொல்லிட்டா. பார்த்தா, 16 டிக்கெட் எடுத்திருந்தா. புதுமண ஜோடியா, 16 பேர்கூட சேர்ந்து முதல் படம் பார்த்த அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

அதுவாச்சும் பரவாயில்லை. என்னோட 'லவ் பேர்ட்ஸ்’ பட ஷூட்டிங் லண்டன்ல நடந்தப்போ, ஃபேமிலியையும் கூட்டிட்டுப் போனேன். அப்போ என் பையன் சக்திக்கு 8 வயசு. மகள் அபிராமிக்கு ஒன்றரை வயசு. புது க்ளைமேட், பிடிக்காத சாப்பாடுனு அடம்பிடிச்ச குழந்தைங்களைக்கூட சமாளிச்சுட்டேன். ஆனா, 'அத்தை, மாமாவை விட்டுட்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது? வீட்டுக்குப் போகணும்... அவங்களைப் பார்க்கணும்போல் இருக்கு’னு அனத்த ஆரம்பிச்ச சாந்தியை சமாதானப்படுத்தவே முடியல. ஒருவழியா ஃப்ளைட் பிடிச்சு தமிழ்நாட்டுக்கு அனுப்பினதும்தான் அவளுக்கு சந்தோஷமாச்சு!'' என்று சாந்தி தன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தை வாசு பெருமையுடன் சொல்ல,

''எல்லா பொண்ணுங்களுக்கும் பிறந்த வீடு, புகுந்த வீடுனு ஒரு பிரிவுக்கோடு இருக்கும். எனக்கு ரெண்டுமே ஒண்ணா அமைஞ்சது என் பாக்கியம். இது எத்தனை பேருக்குக் கிடைக்கும்..?'' என்று தன் அன்புக்கு அடர்த்தி கூட்டினார் சாந்தி.

என் குடும்பம் ! - பி. வாசு

''ஆரம்பத்தில் டைரக்டர் ஸ்ரீதர் சார்கிட்ட 'மீனவ நண்பன்’, 'இளமை ஊஞ்ச லாடுகிறது’, 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்’ படங்கள்ல உதவி டைரக்டரா வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் 'மெல்லப் பேசுங்கள்’ படத்தை நானும், சந்தானபாரதியும் சேர்ந்து பாரதி-வாசுங்கற பேர்ல இயக்கினோம். அந்த சமயத்தில்தான் எனக்குத் திருமணம் நிச்சயமாச்சு. 1982-ல் எம்.ஜி.ஆர்-தான் கல்யாணத்தை நடத்தி வெச்சார். அதுக்குப் பிறகு நானும், சந்தான பாரதியும் சேர்ந்து 'பன்னீர் புஷ்பங்கள்’, 'மதுமலர்’, 'நீதியின் நிழல்’னு மூணுபடங்கள் செய்தோம். பிறகு, நாலு வருஷம் படமே இல்லை. அப்போ எல்லாம் எனக்குக் கை கொடுத்தது, 'கல்யாண பரிசு’ தங்கவேலு சாரோட ஐடியாதான். தினமும் 'சினிமா டிஸ்கஷன் போறேன்’னு சாந்திகிட்ட பொய் சொல்லிட்டு, வாசு வீட்டுக்குப் போவேன். அங்கே இருந்து நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடப் போயிடுவோம்.

வேலை இல்லைனு சொல்லியிருந்தா, சாந்தி கோபப்பட்டிருக்க மாட்டா, என்னைக் காயப்படுத்தியிருக்க மாட்டா. ஆனா, எனக்காக வருத்தப்பட்டிருப்பா. என்னைத் திட்டினாகூட வாங்கிக்கலாம். ஆனா... அந்த வருத்தத்தையும் வெளிக்காட்டாம உள்ளுக்குள்ளயே வெச்சு அவ கஷ்டப்படுறதை எப்படித் தாங்கிக்க முடியும்? அதனால, நம்ம வீட்டுக்காரர் கதை, படம், வாய்ப்புனு இயங்கிட்டே இருக்காருங்கிற நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்துட்டு, இன்னொரு பக்கம் நான் என் முயற்சிகளைத் தொடர்ந்துட்டு இருந்தேன்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'பயணங்கள் முடிவதில்லை’, 'குங்குமச்சிமிழ்’, 'அம்மன் கோயில் கிழக்கால’, 'மெல்லத் திறந்தது கதவு’ வெற்றிப் படங்களுக்கு நான்தான் திரைக்கதை எழுதினேன். அந்த வெற்றிகள் எனக்கு பெட்ரோல் போட்டுச்சு. 1997-ல் நான் இயக்கிய 'என் தங்கச்சி படிச்சவ’ படத்தில் 'நல்ல காலம் பொறந்துடுச்சு...’னு ஒரு பாட்டு எழுதியிருப்பார் கங்கை அமரன். எனக்கும் அப்போதான் நல்ல காலம் பொறந்துச்சு. இடையில் கழிந்த இக்கட்டான நாட்களை, சாந்தியோட பொறுமை என்னைச் சிரமம் இல்லாம கடக்க வச்சது!''

- 'கதை சொல்லி' வாசு, தன் கதை சொன்ன விதமும் சுவாரஸ்யம்!

''இவர் டைரக்ட் செய்த 'நடிகன்’ படத்தில் குஷ்புவோட தம்பியா சக்தியை சத்யராஜ் சார் நடிக்க வெச்சார். அப்புறம் 'சின்னத்தம்பி’ படத்துல சின்ன வயசு பிரபுவா அவனை என் கணவர் நடிக்க வெச்சார். அதைத் தொடர்ந்து அவனுக்கு குழந்தை நட்சத்திர வாய்ப்புகள் வந்தது. ஆனா, நான் பிடிவாதமா மறுத்துட்டேன். 'முதல்ல அவன் படிப்பை முடிக்கட்டும். அப்புறம் நடிக்கட்டும்’னு நான் எடுத்த முடிவை, என் கணவர் தொந்தரவு செய்யவே இல்ல. எம்.பி.ஏ. முடிச்ச பிறகுதான் சக்தி ஹீரோ ஆனான். பொண்ணு அபிராமி, இப்போ ஆர்க்கிடெக்சர் படிக்கிறா. அவளோட எதிர்காலத்துக்கான முடிவுகளையும் என்னிடம்தான் விட்டிருக்கார். இப்படி குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரத்தையும், பொறுப்பையும் எனக்குக் கொடுத்திருக்கிறார் என் கணவர். அதுதான் ஒரு கணவன், மனைவிக்குக் கொடுக்கிற முக்கியமான மரியாதைனு நான் நினைக்கிறேன்.

அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல சாப்பிட உட்கார்ந்தா... இலை போட, பரிமாற, கை கழுவினதும் டவல் தரனு அவரைச் சுற்றி ஆறு பேர் எப்பவும் நின்னு கவனிப்பாங்க. ஆனா, வீட்டுக்குள்ள நுழையும்போது, சாந்தி கணவனா, சக்தி அப்பாவாதான் வருவார். நான் சமைத்த சாப்பாட்டை, என்னை உட்கார வெச்சு பரிமாறுவார்.

பிள்ளைங்ககிட்ட தகப்பனா மட்டும் இல்லை... தோழனா உட்கார்ந்து நிறைய பேசுவார். இப்படி ஒரு அப்பாவா நாமும் இருக்கணும்னு சக்தியும், இப்படி ஒரு அப்பா நாளைக்கு நம்ம குழந்தைக்கும் கிடைக்கணும்னு அபியும் சந்தோஷப்படுற அளவுக்கு, அவர் ஓர் அற்புதமான அப்பா; அந்தப் பெருமையை எனக்குக் கொடுத்திருக்கிற அன்பான கணவர்!'' என்று கண்களில் மகிழ்ச்சி வழிய சொன்னார் சாந்தி.

பேச்சைத் தொடந்த வாசு, ''ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் கல்ச்சுரல் விழாவுக்கு சீஃப் கெஸ்ட்டா போனப்பதான் ஸ்மிருதியை சந்திச்சான் சக்தி. அவங்க மேல விருப்பம் ஏற்பட்டு, பேசிப் பழகினான். ஆனாலும் 'என் பேரன்ட்ஸ் சம்மதிச்சாதான் கல்யாணம்’னு முதல்லயே பொண்ணுகிட்ட சொல்லிட்டான். அப்புறம் எங்ககிட்ட மெள்ள விஷயத்தைச் சொன்னான். எத்தனையோ காதல் படங்கள் எடுத்திருக்கிற நான், என் மகனோட காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பேனா! இப்ப எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமக கிடைச்சுட்டா. ஸ்மிருதியோட பேரன்ட்ஸுக்கு அவங்க எதிர்பார்த்த மாதிரியான மாப்பிள்ளை கிடைச்சுட்டான். இதைவிட எங்களுக்கு வேற என்ன வேணும்?!'' என்று மனத்திருப்தி தந்த புன்னகையுடன் சொன்ன வாசுவை, ஆனந்தத்துடன் பார்த்தார் சாந்தி.

ஸ்ருதியும் லயமும் இணைந்தது போன்ற முழுமையான நிறைவு இருவர் முகத்திலும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism