Published:Updated:

வேலு பேசறேன் தாயி..!

வடிவேலு ஓவியம்: கண்ணா

வேலு பேசறேன் தாயி..!

வடிவேலு ஓவியம்: கண்ணா

Published:Updated:
 ##~##

எம் மாமியார் நாகம்மாள் பத்தி போனவாட்டி சொன்னேன்ல... அவுக வூட்டு குலசாமி கதையவும் ஒங்ககிட்ட மறக்காம சொல்லணும்!

எம் மாமியார் வூட்ல என்ன நல்லது கெட்டது நடந்தாலும்... உடையநாச்சிங்கிற சாமி பேரச் சொல்லித்தான் ஆரம்பிப்பாக. ஒரு பெட்டியத் தெறப்பாக... அதுக்குள்ள பளபளனு ஒரு மாங்கல்யம் இருக்கும்... அதப் பாத்து, 'தாயே... உடையநாச்சி, நீதான் ஆத்தா காப்பாத்தணும்’னு மனசார வேண்டுவாக. பல தடவை இத நான் பாத்திருக்கேன். எதப் பாத்தாலும் நம்ம மண்டைக்குள்ளதான் குளுகுளுனு வண்டி ஓட ஆரம்பிச்சுடுமே... ஒரு நாளு ஆர்வம் அடங்காம, 'உடையநாச்சிங்கிறது யாரு..?’னு கேட்டேன். அவுக சொன்ன சம்பவத்தைக் கேட்டு அப்புடியே ஆடிப் போயிட்டேன் தாயி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலு பேசறேன் தாயி..!

அந்தக் காலத்துல சின்னஞ்சிறுசுலயே கல்யாணப் பேச்ச முடிச்சு வெச்சுருவாக இல்லியா... அந்த மாதிரி எம் மாமியார் குடும்பத்துல இருந்த உடையநாச்சிங்கிற ஏழு வயசுப் பொண்ணுக்கு, எட்டு வயசுப் பையனை பேசி முடிச்சுட்டாக. சம்பிரதாயமா செய்ய வேண்டியதை எல்லாம் முடிச்சுட்டு, பொண்ணு வயசுக்கு வந்த ஒடனே ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்... அதுவரைக்கும் ரெண்டு பேரும் அவுக அவுக வூட்ல இருக்கலாம்னு சொல்லி இருக்காக.

இடையில மாப்ள பையனுக்கு திடீர்னு ஒடம்பு சொகமில்லாமப் போயிருச்சு. படுத்த படுக்கையா கெடக்கிற தகவல் உடையநாச்சிக்கு தெரிய வர, கோயிலுக்குப் போயி, 'தாயே, எம் புருஷனுக்கு வந்துருக்கிற வியாதிய எனக்குக் கொடுத்திடு. அவரைக் காப்பாத்திடு’னு வேண்டியிருக்கு. கோயில்ல இருந்து வூட்டுக்கு வந்த பொண்ணுக்கு, ஒடம்பு சொகமில்லாமப் போயி... வாந்தி, வயித்தாலனு ராவு முச்சூடும் போராடின பொண்ணு, உயிரை விட்டிருச்சு. அதே நேரத்தில, மாப்ள பையன் ஒடம்பு தேறி, நடந்தே உடையநாச்சி வூட்ல வந்து நின்னிருக்கான். பொண்ணு செத்துப்போன சேதியச் சொன்னா... மாப்ள மனசு ஒடஞ்சு போயிடுமேனு தயங்கினவுக, 'ஒறவுக்காரக வூட்டுக்கு போயிருக்கு. இப்ப பாக்க முடியாது’னு சொல்லியிருக்காக.

மாப்ள பையனுக்கு மனசு கேட்கல. பொண்ண பாக்க முடியலியேனு புலம்பினபடியே தூங்கப் போயிருக்காப்ல. அப்போ கனவுல உடையநாச்சி வந்திருக்கு. 'மாமா, என்னய பாக்கணும்னு ஆசப்படாத... நா செத்துப் போயிட்டேன். ஆனாலும் நா ஒங்கூடவேதான் இருப்பேன். என்னய நெனச்சுக் கவலைப்படாம நீ நல்லபடியா கல்யாணம் கட்டிக்க மாமா. ஆணு, பொண்ணுனு யாரு பொறந்தாலும் அவசியம் எம்பேரை வையி மாமா’னு உருக்கமா சொல்லிட்டு மறைஞ்சுடுச்சாம். அதிலேர்ந்து இன்னிவரைக்கும் என் மாமியார் வூட்டு வகையறாக்கள் உடையநாச்சியை தெய்வமா கும்பிடறாக. உடையநாச்சியோட மாங்கல்யத்தை இன்னிக்கும் அப்படியே பத்திரப்படுத்தி வெச்சுருக்காக.

அந்தக் காலத்துல புருஷன் - பொண்டாட்டிங்கிற ஒறவு எவ்வளவு ஆத்மார்த்தமா இருந்துருக்குங்கறதுக்கு, இதவிட வேற எந்தக் கதையச் சொல்ல..? அடுத்தவங்களோட பாரத்தை சொமக்கிறப்ப எல்லாம், எல்லாரும் தாயா மாறிடுறோம். அந்த அர்ப்பணிப்பும் அன்பும்தான் அந்தக் கால தம்பதிகளை ஆயுசுக்கும் பிரியாதபடி கட்டிப்போட்டு வெச்சிருந்திருக்கு.

இந்தக் காலத்தில எத்தன பேரு அப்புடி இருக்கோம்? புருசனுக்காக பொஞ்சாதியோ, பொஞ்சாதிக்காக புருசனோ எத்தன வீடுகள்ல விட்டுக்கொடுத்து வாழுறோம்? ஒரு சின்ன வார்த்தை பொறுக்காம விவகாரத்து கேட்டு கோர்ட்டுல போயி நிக்கிறவுககிட்ட, அங்க வக்கீலு ஆயிரங் கேள்வி கேட்பாரு. வீட்டுல ஒரு கேள்வி பொறுக்காம கோபப்பட்டு, ஓராயிரம் கேள்விகளுக்கு ஆளாகி நிக்கிறவுக எத்தன பேரு...?

ஆபீஸுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை நாம குடும்பத்துக்கு கொடுக்குறது இல்ல... வேலை வேலைனு ஓடுற அவசரத்துல புருசன்-பொண்டாட்டிங்குற ஆத்மார்த்தத்த நெனச்சுப் பாக்க நேரமில்லாமப் போயிடுது.

கொஞ்ச நாளைக்கு முன்ன ஒரு சேதி படிச்சிருப்பீக... புருசனோட கொறட்டை சத்தம் பொறுக்காம ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு போன கதைய. அதேநேரம், ரெண்டு காலும் இல்லாத புருசனை வண்டியில வெச்சு தள்ளிகிட்டுப் போற எத்தனையோ தாய்மார்களும் நம்மளக் கடந்து போறாக.

தாயிகளா... நா சொல்றேன்னு தப்பா நெனக்காதீக... எதையும் சொமக்க கத்துக்கங்க. கர்ப்பப்பை மட்டுமில்ல தாயி... ஒங்களோட நெஞ்சமும் நெறய விஷயங்கள சொமக்க தெரிஞ்சதுதான். கர்ப்ப காலத்தில மட்டுமில்ல... காலாகாலத்துக்கும் பொண்ணா பொறந்தவுக தாயாதான் வாழுறாக!

- நெறய்ய பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism