Published:Updated:

38 வயதில் சுகப்பிரசவம்...

சபாஷ் ஐஸ் !பி.ஆரோக்கியவேல்

38 வயதில் சுகப்பிரசவம்...

சபாஷ் ஐஸ் !பி.ஆரோக்கியவேல்

Published:Updated:
##~##

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயைப் பார்த்து, 'உன்போல் அழகி பிறக்கவும் இல்லை. இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை’ என்று ஒருவேளை பாடினாரோ... பாடவில்லையோ... இப்போது அது உண்மையாகியிருக்கிறது. 'ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது' என்பதுதானே... இன்றைய இந்தியாவின் தலைப்புச் செய்தி.

21 வயதுப் பெண்களே இப்போது 'சிசேரியன்’ செய்துகொள்ளும்போது, ஐஸ்வர்யா ராய் 38 வயதில், தானே முன்வந்து சுகப்பிரசவம் நிகழ்த்தியிருப்பது, செய்தியின் மதிப்பைக் கூட்டுகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''30 வயதானாலே பிரசவத்தின் சிரமங்களை அப்பெண்ணின் உடல் தாங்காது என்பது, உருவாக்கப்பட்ட ஒரு பொய் என்பதை, ஐஸ்வர்யா ராய் தன் பிரசவத்தின் மூலம் பெண்களுக்கு அழுத்தமாகச் சொல்லிஇருக்கிறார்!'' என்று மருத்துவர்கள் அனைவரும் அவரைப் பாராட்ட,

''ஆம்... இது நான் விரும்பி எடுத்த முடிவு!'' என்கிறார் பிள்ளை பெற்றிருக்கும் அந்தப் பச்சை உடம்புக்காரி!  

38 வயதில் சுகப்பிரசவம்...

''குழந்தை பெற்றுக் கொள்வதில் என்ன சாதனை என்று இச்செய்தியை, இத்தனை கொண்டாடுகிறார்கள்..?'' என்று கேட்டுவிட முடியாது. காரணம், கிராமங்களில் இருந்து பெருநகரங்கள் வரை பெருகி வரும் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை. இளம்பெண்கள்கூட, 'ஐயோ... அந்த வலியை யார் தாங்குறது... சிசேரியன்தான் ஓ.கே’ என்று முடிவெடுக்கிறார்கள்.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குத் தலைப்பிரசவம் என்றால், சம்பந்தப்பட்ட பெண் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பெரியவர்களும்கூட 'ரிஸ்க் எடுக்க வேண்டாம்... ஆபரேஷன் செய்துடலாம்’ என்று மருத்துவர்களை நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். சிசேரியன் செய்தால் ஃபீஸ் கூடுதலாக கிடைக்கும் என்று ஒரு சில மருத்துவமனைகளும் அற்பமாக ஆசைப்படுகின்றன. இன்னொருபுறம், நாள் நட்சத்திரங்கள் மீதிருக்கும் அளவு கடந்த நம்பிக்கையில் பலரும் சிசேரியனில் விழுகிறார்கள். இப்படிப் பெருகிவரும் சிசேரியன்களால்தான், சுகப்பிரசவம் என்பது ஆச்சர்ய செய்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராயின் இந்த முயற்சி, கண்டிப்பாக பல பெண்களுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கும்.

38 வயதில் சுகப்பிரசவம்...

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத், சுகப்பிரசவத்துக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பகிர்ந்தார். ''குழந்தை தரிப்பதற்கு முன்பிருந்தே வாக்கிங், சமச்சீரான உணவு என்று உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சோர்ந்து படுக்காமல், உடம்பில் இருக்கும் தசைகளுக்கும் மூட்டுகளுக்கும் வேலை கொடுக்கும் வகையில் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று எந்தப் பிரச்னைகளும் இல்லாமல், நம்மால் பிரசவிக்க முடியும் என்ற மன தைரியத்துடனும், அதற்கு ஏற்ற உடல் வலுவுடனும் இருந்தால்... ஐஸ்வர்யா ராய் என்று இல்லை... நாற்பது வயதில் தலைபிரசவத்தை எதிர்கொள்பவர்கள்கூட சுகப்பிரசவம் செய்துகொள்ள முடியும். பிரசவத்தின்போது வலியைக் குறைக்கவும் இப்போது பல வழிமுறைகள் வந்துவிட்டன'' என்ற டாக்டர்,

''சில பெண்களுக்கு ஒன்பதாவது மாதம் வரை இருந்த மன, உடல் வலு, பிரசவ வலி எடுத்தவுடன் பறந்துவிடும். 'என்னால முடியாது...’ என்று அரற்றுவார்கள். அந்தப் பயம் தேவையில்லை. லேபர் வார்டில் மருத்துவரின் வழிகாட்டலின்படி நடந்து, மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பிரசவம் சுலபமாகும். சக்தியை எல்லாம் அழுது கத்துவதில் செலவழிக்கக் கூடாது. இயற்கையின் இன்னுமோர் ஆச்சர்யம், பிரசவம். எந்தப் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 விநாடிகள் வலி எடுத்தால், அடுத்த மூன்று நிமிடங்களுக்கு வலி இருக்காது. மீண்டும் 45 விநாடிகள் வலி, மூன்று நிமிடம் வலியின்மை என்று தொடரும். அந்த மூன்று நிமிடங்களில், கர்ப்பிணிகள் தங்களை வலியில் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கர்ப்

பிணியின் இடுப்பு எலும்பு அமைப்பு சரியாக இருந்து, குழந்தையின் தலை அளவும் சரியாக இருந்தால்... அந்த சுகப்பிரசவம் சுலபமாக முடிந்துவிடும்!'' என்றார் நம்பிக்கை கொடுத்து!

வாழ்க்கையின் வரமான குழந்தைக் காக, சில மணி நேர வலி பொறுக்க மாட்டோமா என்ன..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism