Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

அவர், உங்கள் எல்லாருக்கும் தெரிந்த பிரபல மனிதர்தான். பல முறை டி.வி-யில் விளம்பரமாக வந்து, தன் வர்த்தக சிறப்பை அவர் சொல்லும்போது, சென்னைக்கு வெளியே இருப்பவர்கள்கூட பார்த்திருப்பீர்கள்.

மிகப்பெரிய மாளிகை அவருக்கு... எத்தனையோ அறைகள் அதில்! அவருடைய ரத்த சொந்தங்களுக்கும் குடும்பம் குடும்பமாக அந்த மாளிகைக்குள்தான் வாழ்க்கை. அந்த மெகா கூட்டுக் குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ரொம்ப அபூர்வம்தான். அப்படியே சின்னச் சின்ன சலசலப்புகள் எழுந்தாலும், குடும்பத்து பெரிய தலையான அந்த வர்த்தக பிரபலம் தலையிட்டு அமைதியைக் கொண்டு வந்துவிடுவாராம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊருக்கெல்லாம், கிரைண்டர், மிக்ஸி, டி.வி. என்று விற்கும் அவர் வீட்டில், மற்ற பொருட்கள் எல்லாம் எப்படியோ... டி.வி. மட்டும் ஒன்றே ஒன்றுதான். அதுவும் வயதில் பழுத்து, வயோதிகம் காரணமாக படுக்கையிலேயே அதிகம் இருக்கும் அவருடைய தாயாரின் அறையில்தான்.

'எல்லாத்திலும் தாராளம் காட்டுற பெரியவருக்கு, டி.வி. விஷயத்துல மட்டும் என்ன கஞ்சத்தனம்? குடும்பத்துக்கு ஒண்ணா ஒவ்வொரு ரூம்லயும் வைக்கச் சொல்லியா கேக்கிறோம். ஹால்ல மட்டுமாவது இன்னொண்ணு வெச்சாத்தான் என்ன?' என்று குடும்பத்துப் பெண்கள் சிலருக்கு வருத்தம் இருந்ததாம்.

கலகலப்பான ஒரு நல்ல நாளின்போது, அவரிடம் அதை வாய்விட்டே கேட்டபோது, பிரபலம் சொன்ன பதில் என்னவாம் தெரியுமா...

''எத்தனை டி.வி-யைக் கொண்டாந்து இறக்கணும்னாலும் பிரச்னையில்ல... அது ஒரு செலவா? ஆனா, அப்புறம் நம்ம அம்மாவை கவனிக்க யாருக்கு நேரமிருக்கும்? சாயங்காலம் மூணு, நாலு மணி நேரமாச்சும் எல்லாரும் வந்து அம்மாவோட கட்டில சுத்தி உக்காந்து அரட்டையடிச்சுக்கிட்டே சீரியல் பார்க்கறீங்கதானே! அந்த நேரம்தான், உங்களையெல்லாம் அம்மா சந்தோஷமா பார்த்துக்கிட்டிருக்கு, புரியுதா?''

என்ன தோழியரே... இதில் தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது... மற்றவை உங்கள் சிந்தனைக்கே!

இனிய கூட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!

உரிமையுடன்

நமக்குள்ளே ....

ஆசிரியர்