Published:Updated:

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’
‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

பிரீமியம் ஸ்டோரி

ந்து மத திருமணச் சடங்கில் முக்கியமாக இடம்பெறும் பந்தற்கால், அரசாணிக்கால் ஆகியவை கர்ப்பக்கிரகத்தில் அமைந்து, இறைவன் பார்வதியை மணம்புரிந்த திருமணக்கோலத்தில் காட்சித் தரும் ஒரே தலம் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள திருவீழிமிழலை திருத்தலம்தான். அழகிய மாமுலையம்மை உடனாய அருள்மிகு வீழிநாதர் வீற்றிருக்கும் இக்கோயில், சோழநாட்டுக் காவிரித் தென்கரை தலங்களில் 61-வது தலமாக போற்றப்படுகிறது. ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படும் இங்குள்ள வீழிநாதரின் திருவுருவமே தமிழகத்தில் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். சேந்தனாரின் ‘திருவிசைப்பா’, அருணகிரிநாதரின் ‘திருப்புகழ்’, ஞானதேசிகரின் ‘பிள்ளைத்தமிழ்’, காளமேகப் புலவரின் ‘தனிப்பாடல்’ என பலராலும் போற்றப்பட்ட இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனக் கோயில்.

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

தல வரலாறு

இந்த ஊரில் வசித்த காத்தியாயன முனிவர் குழந்தைப்பேறு வேண்டி கடும் தவம்புரிய, அவருக்கு அருள்பாலித்த அம்பிகையிடம், ‘தாயே, நீயே எனக்கு மகளாக பிறக்க வேண்டும்; சிவபெருமானை மணந்து, மணக்கோலத்தில் காட்சித்தர வேண்டும்’ என்று வேண்டினார். அதன்படி மகள் பிறக்க, கார்த்தியாயினி என்ற பெயர்சூட்டி, மணப்பருவத்தில் திருமணம் செய்துகொள்ள இறைவனே மணமகனாக வருகிறார். கார்த்தியாயினிக்கு குழப்பம் உண்டாக்க ஆயிரம் உருவமாக இறைவன் காட்சித் தருகிறார்.  `யாருக்கு மாலை சூடுவது?’ எனத் தவித்த கார்த்தியாயினி, நந்திதேவரின் உதவியை நாடினார். அவர் கண்ஜாடையால் அடையாளம்காட்ட, இறைவன் திருவிளையாடலை எண்ணி அம்பாள் நாணத்துடன் சுவாமி திருவடியைப் பார்க்க, மற்ற மாய உருவங்கள் மறைய... சிவபெருமானுக்கு மாலை சூடினார். நந்திதேவரை சாட்சியாக வைத்து திருமணம் நடந்ததால் கோயில் விமானத்தில்கூட நந்தியுடன் திருமணக் கோலத்தில் சுவாமி, அம்பாள் இருப்பதைக் காணலாம். இந்த ஊர் பெண்ணை மணந்ததால் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார். 

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

மகாலிங்க குருக்கள், “திருமணம் ஆகாத பெண்கள் மாப்பிள்ளை சுவாமிக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்துவிட்டு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்று, சுவாமி முன் உள்ள பந்தக்காலை மூன்றுமுறை வலம்வந்து வணங்க வேண்டும்.  அதன்பின் அந்த மாலையை வீட்டுக்குக் கொண்டுசென்று பூஜை அறையில் வைத்து 48 நாள்கள் நாங்கள் சொல்லித்தரும் மூன்று மந்திரங்களைக் கூறி வழிபட்டால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது இந்த தலத்தின் விசேஷம் ஆகும்.

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

விஷ்ணு, சக்ராயுதம் வேண்டி ஆயிரம் தாமரை மலர்களைக்கொண்டு தினமும் பூஜை செய்ய... ஒருநாள் இறைவன் ஒரு பூவை எடுத்து மறைத்துவிட, விஷ்ணு தனது வலது கண்ணையே தாமரை மலராக்கி பூஜையை முடித்தார். உடனே அவருக்கு சக்ராயுதம் அளித்தார் சுவாமி. அந்த விஷ்ணு தங்கியிருந்த ஊர்தான் பக்கத்தில் உள்ள விஷ்ணுபுரம். விஷ்ணுவின் விழி மலரால் வணங்கப்பட்ட வீழிநாதரை கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் வந்து வணங்கினால் நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

சிறந்த சிவபக்தனான சுவேதகேது சிவபூஜையில் இருந்தபோது, அவனுடைய ஆயுள் முடிய இருந்தது. எனவே, யமன் சுவேதகேதுவின் உயிரைக் கவர பாசக்கயிற்றை வீசினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் யமனை சம்ஹாரம் செய்தார். பின்னர் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி யமனை மீண்டும் உயிர்ப்பித்தார். அதனால் திருக்கடவூர் போலவே இங்கேயும் தம்பதிகள் ஆயுஷ ஹோம பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்’’ என்றார்.

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

அருகில் உள்ள ஆண்டார்பந்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், “நான் இதுவரை திருமணமாகாத பெண்கள் 50-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து மாப்பிள்ளை சுவாமியிடம் வழிபாடு செய்து அவர்களுக்கு ஒரு மண்டலத்துக்குள் திருமணம் கைகூடி இருப்பதைக் கண்டவன். இங்கு வந்து வேண்டி திருமணம் நடந்த அனிதா - கௌதம் தம்பதியை அழைத்து வந்திருக்கிறேன். திருமணம் ஆகாத பெண்களுக்கு இக்கோயில் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுகிறேன். இதற்கு எதையும் எதிர்பார்க்காமல் இறைத் தொண்டாகவே செய்கிறேன்” என்றார். 

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

ஓதுவார் பழனிவேல், “மக்களுக்கு உணவு பஞ்சம் தீர்க்க திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவருக்கும் படிகாசு கொடுத்த திருத்தலம் இது. அந்த பீடங்களில் பக்தர்கள் கொண்டுவரும் காசுகளை வைத்து தேவார பாசுரங்கள் பாடி பூஜை செய்து தருகிறேன்.  இதனை அவரவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று, மண்கலசத்தில் முக்கால் பாகம் கல் உப்பை நிரப்பி, அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் பையில் பூஜை செய்த காசுகளை வைத்து வீழிநாதரை, `வாசி தீரவே காசு நல்குவீர்’ என்ற தேவாரப் பாடல்பாடி வணங்கி வந்தால் அந்த வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. தினந்தோறும் திருமண வரம் வேண்டி வருவோரைப் போலவே செல்வம் வேண்டியும் வருகிறார்கள். குறிப்பாக திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியிலிருந்து நிறைய பேர் வருகிறார்கள்” என்றார். 

பிச்சைமணி குருக்கள், “கர்ப்பக்கிரகத்தின் பின்புறம் உள்ள துவாரம் வழியே தினந்தோறும் சாயரட்சை வேளையில் பச்சைக்கிளி பறந்து வந்து சுவாமியின் தோளில் அமர்ந்து செல்வது அற்புதக் காட்சியாகும்.  பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்பார்கள்.  இக்கோயிலில் வேண்டுதல் செய்துவிட்டு பிராகாரம் சுற்றி வரும்போது பச்சைக்கிளி கத்தினால் வேண்டுதல் பலிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இது இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று” என்று முடித்தார்.

- மு.இராகவன், படங்கள்: க.சதீஷ்குமார்

‘மாப்பிள்ளை சுவாமியை வணங்கினால் மணக்கோலம் நிச்சயம்!’

கோயிலுக்குச் செல்வது எப்படி?

இத்தலம் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது.  பூந்தோட்டம் வழியாகச் செல்லும் பேருந்து மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 32 கி.மீ தொலைவிலும் உள்ளது. ‘தென்கரை’ என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே அரை கிலோ மீட்டர் தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு