Published:Updated:

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!
ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

பிரீமியம் ஸ்டோரி

ரே நாட்டில் வாழும் தமிழர்களின் திருமணங்களிலேயே சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேறுபடும். அப்படியிருக்க, வேறொரு நாட்டில் வசிக்கும் தமிழர்களின் திருமணங்களில் வழக்கங்கள் மாறுபடுவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள். வேற்றுமொழிக் கலப்பு இல்லாமல் அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது காதில் தேன் பாய்வதுபோல இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மொழியைக் கொண்டாடும் அவர்கள், தங்களின் திருமணத்தையும் பாரம்பர்யம் மாறாமல் ரசனையோடு அழகாகக் கொண்டாடுகிறார்கள். ஈழத் தமிழர் திருமணங்களின் சடங்குகளையும், சம்பிரதாய முறைகளையும் நம்மிடம் அழகாக விவரிக்கிறார், எழுத்தாளரும் ஈழத் தமிழருமான அகர முதல்வன்.  

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

சம்பந்தக் கலப்பு!

மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையை பார்த்தபிறகு, `திருமணத்துக்குச் சம்மதம்’ என இருவீட்டினரும் மனமுவந்து முடிவு செய்தபின், அனைவரும் ஒன்றுகூடி சம்மதத்தை உறுதி செய்யும்விதமாக நடக்கும் சடங்கை சம்பந்தக் கலப்பு என்பார்கள். 

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

பொன்னுருக்கு!

திருமணத்துக்கு முன்பு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கத்தைப் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டினரிடம் கொடுப்பர். மாப்பிள்ளை வீட்டில் நகை செய்பவரை வரவழைத்து மாங்கல்யத்தை வடிவமைப்பார்கள். திருமாங்கல்யத்தில் விருப்பத்துக்கு ஏற்றவாறு கடவுள் உருவங்களையும் சேர்த்து அணிந்துகொள்ளலாம். ஆனால், தாலிக்கான மொத்தப் பவுனும், 9 அல்லது 11 என்ற ஒற்றை எண்ணிக்கையில் இருப்பது அவசியம்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!அரசாணிக்கால்!

முற்காலத்தில் திருமணத்துக்கு மன்னர்களை அழைப்பது வழக்கமாக இருந்தது. எல்லாத் திருமணங்களுக்கும் அவர் போக முடியாத காரணத்தால், அரசு ஆணிக்கோல் அனுப்பிவைப்பார். பின்னர், அது அரசு ஆணைக்கோல் என மருவி... அரசாணிக்கால் என்றாகிவிட்டது. அரசரிடம் இருந்து அரசு ஆணைக்கோல் வந்துவிட்டால்... அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அதை இன்றைய காலத்துக்கு ஏற்ப கல்யாண முருங்கை மரக்கிளை ஒன்றைவைத்து, அதற்குப் பட்டு அணிவித்து, அலங்காரம் செய்து சிறப்பிக்கிறார்கள். அதேபோல், மணமக்களின் வீட்டு வாசலில் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்படும். இரு வாழைக்குலைகளின் முனைகளிலும் செவ்விளநீர் ஒன்று கட்டித் தொங்கவிடப்படும்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

அங்குரார்ப்பணம்!

ஐந்து அல்லது ஏழு என்ற ஒற்றை எண்ணிக்கையிலான சுமங்கலிப் பெண்கள் குழு, சந்திரக் கும்பத்துக்கு முன் ஒரு மண்சட்டியை வைத்து, அதில் நவதானியங்களை இட்டுத் தண்ணீர் தெளித்து, மலர் தூவி பூஜை செய்வார்கள். ‘நவதானியங்கள் செழித்து வளர்வதுபோல... புதுமணத் தம்பதியும் வாழ்க்கையில் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சடங்கு’ எனக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தப் பூஜை முடிந்த பின்பு, அதில் கலந்துகொண்ட பெண்களுக்கு வெற்றிலை, வாழைப்பழம், பூ முதலியவற்றை வைத்துக்கொடுத்து உபசாரம் செய்வார்கள்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

பாலறுகு வைத்தல்!

திருமண நாள் காலையில், நல்ல நேரம் பார்த்துச் செய்யப்படும் சடங்கு இது. மாப்பிள்ளையை மணைமேல் அமர்த்தி, அவர் கையில் வெற்றிலை கொடுக்கப்படும். பிறகு, அவர் தலையில் வெள்ளைத் துணி ஒன்று போடப்படும் (மொட்டாக்கு போடுதல்). அவருக்கு எதிரில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அதில் அறுகம்புல் இட்டு வைக்கப்பட்டிருக்கும். இரு வீட்டாரும் இரு கைகளால் அந்தப் பாலைத் தொட்டு மாப்பிள்ளையின் தலையில் வைக்க வேண்டும். இந்தச் சடங்கு முடிந்ததும் மாப்பிள்ளை குளித்து விட்டுத் திருமணத்துக்குத் தயார் ஆவார்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

தலைப்பாகை அணிவித்தல்!

திருமணத்துக்குத் தயார் ஆன மாப்பிள்ளைக்கு, மணப்பெண்ணின் சகோதரர் தலைப்பாகை கட்டுவார். மாப்பிள்ளையும், மணப்பெண்ணின் சகோதரருக்குத் தலைப்பாகை கட்டுவார்.

ரட்சாபந்தனம் (காப்புக் கட்டுதல்)!

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி... அதில் தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், காப்பு கட்டும் நூல் ஆகியவற்றை வைத்து, பூஜை செய்து மாப்பிள்ளையின் வலது கை மணிக்கட்டில் காப்பு கட்டுவார்கள். அதன்பிறகு புரோகிதர் மாப்பிள்ளை வீட்டாரிடம் தேங்காய் உடைக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் அரசாணிக்காலுக்குச் சடங்கு செய்வார். திருமணம் நடக்கவிருக்கும் நல்ல நாளில்... தம்பதியை பீடை, பிணி அணுகாமல் இருப்பதற்காகவும், துன்பங்களும் இடையூறு களும் வராமல் இருப்பதற்காகவும் இந்தக் காப்பு கட்டப்படுகிறது.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

மணப்பெண் அழைப்பு!

மணமகளை அலங்கரித்து, முகத்திரை அணிவித்து... அவருடைய தோழிகளும், பெற்றோரும் மணமேடைக்கு அழைத்து வருவார்கள். அவரை, மணமகனுக்கு வலப்பக்கத்தில் அமரச் செய்வார்கள். மணமகனுக்குச் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் இவருக்கும் செய்யப்படும். பிறகு, மணப்பெண்ணுடைய இடது கை மணிக்கட்டில் காப்பு கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். 

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

கன்னிகாதானம்!

மணப்பெண்ணுக்குக் காப்பு கட்டி முடித்த பிறகு, இருவரின் பெற்றோரையும் அழைத்து மணமக்களுக்கு அருகில் அமரச் செய்வர். மணப்பெண்ணின் பெற்றோர், பெண்ணுக்கு வலது புறமும்... மாப்பிள்ளையின் பெற்றோர், மணமகனின் வலதுபுறமும் அமர்வர். மணப்பெண்ணின் பெற்றோர், மணமகனின் பெற்றோருக்கும், மணமகனின் பெற்றோர், மணப்பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு, பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பெண்ணின் தந்தை மணமகளின் கரம்பிடித்து, மாப்பிள்ளையின் கையில் ஒப்படைப்பார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மங்கள வாத்தியம் முழங்க, பெண் வீட்டார் ஒருவர், தேங்காய் உடைக்க... மணமகன் பெண்ணைத் தானம் எடுப்பார். இதன்பிறகு, மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த தாலியோடு இருக்கும் கூறைப்பட்டுப்புடவைக்குப் பூஜை செய்து, அங்கிருக்கும் பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். அதன் பின்னர் மணமகன், அதை மணமகளிடம் கொடுப்பார். மணப்பெண்ணும் தன் தோழிகளுடன் சென்று கூறைப்பட்டுப்புடவை அணிந்து வருவார். இதற்கிடையில், திருமாங்கல்யத்துக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படும். மணவறையைச் சுற்றி இருப்பவர்களுக்கு மலர்கள் கொடுக்கப்படும். 

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

கூறைப் புடவையை உடுத்தி வந்த மணமகள், மீண்டும் மணமகனின் வலதுபுறத்தில் அமர்வார். குறித்த சுபமுகூர்த்த நேரத்தில் புரோகிதர் ஆசீர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை, மணமகன் இரு கைகளால் பெற்றுக்கொண்டு, கெட்டி மேளம் முழங்க, மாப்பிள்ளை வீட்டார் தேங்காய் உடைக்க, மணப்பெண்ணின் கழுத்தில் பூட்டுவார். அப்போது, மணப்பெண்ணின் பின்னால் தீபம் பிடிக்கப்பட, அங்கிருக்கும் பெரியோர்கள் மலர்கள் தூவி வாழ்த்துவர்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

மாலை மாற்றுதல்!

திருமணம் முடிந்தப் பிறகு, மணப்பெண் மாப்பிள்ளையின் இடப்புறத்துக்கு வந்து விடுவார். பின்னர், மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும். இருமனம் சேர்ந்து ஒருமனமாகி... இல்வாழ்க்கையைத் தொடங்கும் விதமாக மாலையை மூன்று முறை மாற்றிக்கொள்வார்கள். அதன்பிறகு, மணமகன் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அலங்காரப் பொருள்கள் மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும். அப்போது, மணமக்கள் இருவரும் கண்ணாடி பார்த்துக்கொள்வார்கள். மணமக்கள் இருவரும் தங்களது மங்கலக் கோலத்தைப் பார்த்து ரசித்துக் கொள்வதற்காகவே இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.

பால், பழம் கொடுத்தல்!

வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டி... வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் மணமகள், முதலில் மணமகனுக்கு மூன்றுமுறை கொடுக்க வேண்டும். பிறகு, மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு மூன்றுமுறை கொடுக்க வேண்டும். இந்தச் சடங்கின் போது இருவருக்கும் நடுவே ஒரு துணியைத் திரையாக பிடித்துக்கொள்வர். 

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

ஏழடி நடத்தல்!

திருமணம் முடிந்த பிறகு, மணப்பெண் அணிந்திருக்கும் முகத்திரை விலக்கப்படும். அதன் பின்னர், மணமகளின் கையை மணமகன் பிடிப்பார். முதுமையடைந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்பதே அதன் பொருள். மணமகனின் வலக்கையை, மணப்பெண் பிடித்து ஏழடி நடக்க வேண்டும். இப்படி அவர்கள் நடந்துசெல்லும் ஏழடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

அம்மி மிதித்து... அருந்ததி பார்த்தல்!

மணமகன் கையால் மணப்பெண்ணின் வலது காலைத் தூக்கி... அம்மியின் மீது வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிக்கப்படும். அம்மிக்கல்லைப்போல நிலையாக நின்று எதிரிகளைச் சகித்துக்கொள்ள வேண்டும்; அந்தக் கல்லைப்போல இன்பதுன்பங்களை தாங்கிக்கொண்டு, உறுதியாகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பிறகு, இன்னொருமுறை வலம் வந்து... அதேபோன்று இடது காலிலும் மெட்டி அணிவிக்கப்படும். மூன்றாம் சுற்று முடிந்த பிறகு, மண்டபத்தின் வாசலுக்கு வந்து நட்சத்திரங்களுக்கு சடங்குகள் செய்து... மணமக்களுக்கு அருந்ததி காட்டப்படும்.
 
கணையாழி எடுத்தல்!

அக்னியை மூன்றுமுறை சுற்றி வந்தபிறகு... கிழக்குப் பக்கத்தில் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து கணையாழியைத் தேடி எடுக்க வேண்டும். அதேபோல் மூன்று முறை தேடி எடுக்க வேண்டும். இதில் யார் கையில் மோதிரம் கிடைக்கிறது என்பதில் போட்டி இருப்பதுபோல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் எனும் உள்கருத்தும் உள்ளது. வாழ்க்கையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

ஆசீர்வதித்து அட்சதை தூவுதல்!

புரோகிதர் மணமக்களைக் கிழக்கு நோக்கி நிற்கவைத்து, மந்திரம் சொல்லி ஆசீர்வதிப்பார். அதன்பின் பெற்றோர் ஆசீர்வாதம் செய்வார்கள். கூடியிருக்கும் பெரியோர்கள் பச்சை அரிசி, அறுகம்புல், மஞ்சள் கலந்த கலவையை... இரண்டு கைகளால் எடுத்து, மணமக்களின் தலையில் மூன்றுமுறை இட்டவுடன் சடங்குகள் முடிவடையும்.

ஈழத் தமிழரின் திருமண சடங்குகள்!

ஆரத்தி காட்டுதல்!

மணமக்கள் இருவரும் கையில் கட்டப்பட்டிருந்தக் காப்புகளைக் கழற்றி, அதனுடன் குருதட்சணையையும் வெற்றிலையில் வைத்து... புரோகிதரிடம் கொடுப்பார்கள். சுமங்கலிப் பெண்கள் மணமக்களை ஆரத்தி எடுப்பார்கள். தீய சக்தியால் தீமைகள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அதன் பின்னர், மணமக்கள் கோயிலுக்குச் சென்று... கடவுளை வணங்கிவிட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்வார்கள். அங்கும் ஆரத்தி எடுக்கப்படும். மணமக்கள் இருவரும் தங்களது வலது காலை எடுத்துவைத்து வீட்டுக்குள் சென்றதும், பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள். மணமக்களுக்கு உணவாக முதலில் பால் கொடுப்பார்கள். பிறகு, ஒரே இலையில் மணமக்களுக்கு உணவு பரிமாறப்படும். முதலில் மணமகள் மாப்பிள்ளைக்கும் அடுத்து மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கும் என மாறி மாறி ஊட்டிக்கொள்வார்கள்.

ஈழத் தமிழர்களின் தமிழைப்போலவே அழகாக இருக்கின்றன... அவர்களுடைய திருமணச் சடங்குகளும்!

 - நந்தினி சுப்பிரமணி, படங்கள்: ஃபோகஸ் ஸ்டூடியோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு