Published:Updated:

தரை துடைக்கும் வேலை....அகில இந்திய தலைவி !

ஸ்ம்ருதி இரானியின் சூப்பர் கிராஃப்...

பி.ஆரோக்கியவேல்
படங்கள்: பொன்காசிராஜன்

தரை துடைக்கும் வேலை....அகில இந்திய தலைவி !

''விலை உயர்ந்த பொருட்களை வாங்குபவர்களை எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். ஆகையால்... நாலு பேருக்குத் தெரியும்படி வெங்காயம், பூண்டு போன்றவற்றை வாங்காதீர்கள்!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை தனது பொதுக்கூட்ட மேடைகளில் இப்படி 'சுருக்’கென்று கிண்டலடிக்கும் பெண்... ஸ்ம்ருதி இரானி!

பி.ஜே.பி-யின் பிரபல பிரசார பீரங்கி ஸ்ம்ருதி. அவரின் சுறுசுறுப்பு இப்போது, பி.ஜே.பி-யின் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக உயர்த்தியிருக்கிறது. கட்சியின் முதல் கட்ட தலைவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு டெல்லி, மும்பை, லக்னோ... என்று ஊர் ஊராகப் பறந்து, செயற்குழு, பொதுக்குழு, செயல் வீரர் கூட்டம் என சுழன்று கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்... கிடைத்தது ஒரு சந்திப்பு.

##~##

''இந்தியின் பிரபல நடிகை. சோனி,  9 எக்ஸ், ஜீ சேனல்களின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்; பரபர அரசியல் பேச்சாளர்; கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார் என்று வாழும் கூட்டுக் குடும்பவாசி! ஒரே சமயத்தில் இத்தனை முகங்களிலும் எப்படி இயங்குகிறீர்கள்?!'' என்று ஆச்சர்யக் கேள்வியுடன் ஆரம்பித்தோம்.

'' எத்தனையோ ஆண்கள் என்னைப் போல இப்படி பல வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் யாரிடமாவது, 'நீங்கள் எப்படி சார் ஒரே சமயத்தில் உங்க மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு அப்பாவாகவும், ஆபீஸில் அதிகாரியாகவும் இருக்கிறீர்கள்?!’ என்று ஏன் கேட்பதில்லை? பெண்கள் என்றால் பல வேலைகளைச் செய்ய முடியாது என்று நீங்களாக ஏன் கற்பனை செய்து கொள்கிறீர்கள்?'' என்று சூடாக ஆரம்பித்தவர், அடுத்த நிமிடமே குரலை இனிமையாக்கித் தொடர்ந்தார்.

''சரியான கணவரைத் தேர்தெடுத்து, அவரைப் புரிந்து கொண்டு, நம்மையும் அவருக்கு புரிய வைத்துவிட்டால்... எந்தப் பிரச்னையும் வராது. ஒரு பெண்ணால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதுவும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறோம் என்பதால், குழந்தைகள் பற்றி எனக்கு கவலை இல்லை... ஒரு மாதம் தொடர்ச்சியாக வெளியூர் சுற்றுப்பயணம் செய்தால்கூட!'' என்கிறார் கண்கள் சிரிக்க.

வழக்கமான பெண்கள் வட்டத்திலிருந்து வெளி வந்து, பொதுத் தளங்களில் ஸ்மிருதியை இயங்க வைத்த சூழ்நிலை, அவரின் கடந்த காலம் கற்றுத் தந்த பாடங்களே!

''டெல்லியில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த பெண். பள்ளியில் படிக்கும்போதே, சிறு சிறு தேவைகளுக்கு அப்பாவை எதிர்பார்த்து நிற்கும் பழக்கம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், விடுமுறை நாட்களில் பொம்மைகள் விற்பேன். 'லட்சணமான பொண்ணு... இப்படி கடைவீதிக்கு வியாபாரம் பண்ணப் போகலாமா..?’ என்று எல்லா வீடுகளையும் போல என் வீட்டிலும் பயமுறுத்தினார்கள். ஆனால், 'லட்சணமாக இருப்பதென்பது என் பலம். அதையே நீங்கள் பலவீனமாக மாற்றி முடக்கிவிடாதீர்கள் ப்ளீஸ்...’ என்று பல முறை அவர்களுக்கு உணர்த்தினேன். ஏற்றுக் கொண்டார்கள்!

என்னுடைய பதினெட்டாவது வயதில் 'மிஸ். இந்தியா’ போட்டியில் கலந்துகொள்ள நினைத்தேன். 'அழகிப் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராவதற்கு மும்பைக்குச் செல்கிறேன்’ என்று வீட்டில் சொன்னபோது, மீண்டும் ஆயிரமாயிரம் கேள்விகள், கவலைகள். அனைவரையும் சமாதானப்படுத்தி, அப்பாவிடம் அடம் பிடித்து இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு மும்பை போனேன். மாதக் கணக்கில் பயிற்சி எடுத்தேன். புகழ்பெற்ற ஒரு டிசைனரை அணுகி பெரும் தொகை செலவு செய்து ஆடைகளை வடிவமைத்து வாங்கினேன். ஆனால், போட்டியில் ஜெயிக்க முடியவில்லை. கடன்காரியாக வீடு திரும்பவும் தன்மானம் இடம் தரவில்லை. பல இடங்களிலும் வேலை தேடி அலைந்தேன். தரையை சுத்தம் செய்யும் வேலைகூட பார்த்தேன். அந்தச் சமயத்தில்தான் அதிர்ஷ்டவசமாக விளம்பர வாய்ப்பு ஒன்று கிடைத்தது. தொடர்ந்து, டி.வி. சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. முன்னேறி, டி.வி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர் அளவுக்கு உயர்ந்தேன்'' என்றவருக்கு இதற்குப் பின் கிடைத்த இடம்தான்... அரசியல்!

''நிறைய பிரச்னைகளும், அதைச் சமாளிக்கும் திறனும் எனக்கு இப்படி பல தளங்களிலும் இயங்கும்போதுதான் கிடைத்தது. அப்போதுதான் அரசியல் பக்கமும் என் ஆர்வம் அரும்பியது. 'லாப அரசியலு’க்காக அன்றி, மக்கள் நலனுக்கான ஆத்மார்த்த அக்கறையுடன் அதிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். பி.ஜே.பி. என்னை அடைக்கலப்படுத்தியது. சுறுசுறுப்பான கட்சிப் பணிகளால், கவனம் பெற்றேன். காங்கிரஸின் பெரும் தூண்களில் ஒருவரான கபில் சிபலை, டெல்லி சாந்தினி சௌக்  தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட, பி.ஜே.பி-யில் என்னை தேர்ந்தெடுக்குமளவுக்கு, அரசியல் களம் தேர்ந்தேன். இப்போது உட்சபட்சமாக, கட்சியின் 'அகில இந்திய மகளிரணித் தலைவி’ பதவி என்னை இன்னும் பொறுப்பாக்கி இருக்கிறது. கடமைகள் காத்திருக்கின்றன...''

- ஸ்ம்ருதியின் கண்களில் தீர்க்கம்.

''கட்சி சார்புடைய அரசியல் பிரமுகராக அல்ல... ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து முட்டி மோதி, இன்று நாடு கவனிக்கும் ஒரு பொறுப்பில் அமர்ந்திருக்கும் பெண்ணாக உள்ள தகுதியில், என் சகோதரிகளுக்கு சில நம்பிக்கை வார்த்தைகள் பகிர விரும்புகிறேன். பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், வெளியே வர வேண்டும். அப்படி வரும்போது ஆரம்பத்தில் ஒரு 'ஈவ் டீஸிங்’ பிரச்னையே இமாலயப் பிரச்னையாகத் தெரியலாம். ஆனால், அவர்கள் இன்னும் வெளி உலகத்தை நேராக சந்திக்க சந்திக்க, இதைவிட பெரிய பிரச்னைகள் எல்லாம் வரும். 'ஈவ் டீஸிங்’ என்பது சாதாரண விஷயமாகிவிடும். அப்படித்தான்... மேலே போகப் போக பிரச்னைகள் பழகிவிடும். தன்னம்பிக்கை இறுகிவிடும். ஒவ்வொரு பிரச்னையிலும் வெற்றி, தோல்வி என்று எது கிடைத்தாலும், கண்டிப்பாக ஒரு படிப்பினை கிடைக்கும். அது நம்மை இன்னும் மெருகேற்றும்!''

- ஸ்ம்ருதி பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது கட்சி நிர்வாகிகள் வந்துவிட... நமக்கு விடை கொடுத்து, அந்த மீட்டிங் மேடையில் கம்பீரமாக ஏறி அமர்கிறார்!