Published:Updated:

`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

Published:Updated:
`நமக்கு என்ன பிரச்னை?' - உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா? #RelationshipGoals #Motivation

ஆயிரம் கனவுகளோடு மணவாழ்க்கையில் காலடி எடுத்துவைப்பவர்களில், சிலரால் மட்டுமே கனவுகளை நிஜமாக்க முடிகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறை வேறுபட்டாலும், பிரச்னை என்னவோ ஒரே வட்டத்துக்குள்தான் பயணிக்கிறது. அதில் வேலைப்பளு, பணம், வீட்டுடைமை மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்னைகள்தான் அதிகம்.

கணவன்-மனைவிக்கிடையே புரிதல் இல்லாமலும், தீர்வை நோக்கி நகராமல் கிளைகள்போல் பிரச்னையை உருவாக்குவதிலும் இருக்கும் வேகம், பிரச்னையை எப்படித் தடுக்கலாம், வந்தாலும் எப்படிச் சமாளிக்கலாம் என்பதில் ஏனோ முதல் கியரிலேயே நின்றுவிடுகிறது. 

திருமண வாழ்வில் அதிகம் ஏற்படும் பிரச்னையும் அதற்கான தீர்வையும் இனி பார்ப்போம்...


வீடா... அலுவலகமா?

அதிக வேலைப்பளு காரணமாக அலுவலகத்தை வீடாய் மாற்றிய கணவன் நடுநிசியில் வீடு திரும்பியபோது, மனைவி மீது கோபம்கொள்கிறான். காரணம், அவனின் அலுவலக ஆவணங்களை அவள் சீராக அடுக்கிவைத்ததுதான். (இதுக்கெல்லாமா கோபம்!) சரி, இது ஒருபக்கம் இருக்கட்டும்.

மற்றுமொரு நாள், வீட்டில் இருக்கும் பொருள்களைக்கொண்டு தான் சமைத்த உணவுகளை கணவனுக்குப் பரிமாறி, தனக்கெனக் கொஞ்சம் எடுத்து தனியே வைத்துவிட்டு, மற்ற வீட்டுவேலைகளைச் செய்யச் செல்கிறாள் மனைவி. பேய்ப்பசியில் இருந்த கணவன், அவளுடைய உணவையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடுகிறான். அதே பேய்ப்பசியில் சாப்பிடலாம் என வந்து பார்த்த மனைவிக்கு, ஏமாற்றம் கலந்த ஆத்திரம். ``மளிகைப் பொருள்கள் வாங்கணும்னு ஆயிரம் தடவ சொல்லிட்டேன். வீட்ல சமைக்கிறதுக்கு இப்போ எந்த பொருளும் இல்லை. எல்லாம் மறந்துபோகுதுல்ல. உங்களுக்கு கொஞ்சம்கூட என்மேல அக்கறையே இல்லை. உங்களுக்கு என்னதான் ஆச்சு?" என்று பாத்திரங்களை உடைக்கும் மனைவி.

இப்படி சின்னச் சின்னச் சண்டையில்தான் எல்லா பிரச்னைகளும் தொடங்குகின்றன. 

`உங்களுக்கு என்ன ஆச்சு?' என்று சாதாரணமாகச் சொல்கிறோம். ஆனால், `நமக்கு என்ன ஆச்சு?' என்று இருவரும் கேட்டுக்கொண்டால், இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே முடக்கிவிடலாம். அந்தந்த நாளில் நடைபெறும் விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்வதன்மூலம், இருவருக்குள் இருக்கும் புரிதல் அதிகமாகும். உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்' செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!

வீட்டுவேலை எனக்கானதா!

விலங்கு, பறவைகள், மனிதர்கள் என பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் பின்பற்றும் கொடுமையான ஒரு ரூல், வீட்டுக்குவேலைகள் பெண்களுக்கானது என்பதே. இப்படி ஒரு பிம்பம், தெரிந்தோ தெரியாமலோ நம் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. தப்பித்தவறி ஏதோ ஒரு நாள் ஆண்கள் வீட்டுவேலைகள் செய்துவிட்டால் போதும், அதைச் சொல்லிக்கொண்டே மீதி 364 நாள்களைக் கழித்துவிடுவார்கள். காலங்கள் மாறிவரும் நிலையில், தற்போது ஆண்களும் அனைத்து வேலைகளையும் சமமாகப் பகிர்ந்து செய்தாலும், பெரும்பாலான வீடுகளில் பிரச்னைக்கு இதுவும் ஒரு காரணம். ஏனெனில், தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம்.

பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

டிஜிட்டலுக்கு குட் பை:

உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை'விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை' சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. வாரத்தில் எத்தனை நாள், ஸாரி ஸாரி... எத்தனை மணி நேரம் இருவரும் ஒன்றாக முகம் பார்த்துப் பேசிக்கொள்கிறீர்கள்? சொல்லப்போனால், `டைம் ஆச்சு... ஷூ எங்கே... சாக்ஸ் எங்கே?' என்று கேட்டு பதில் வருவதற்குள் படபடவெனப் பறந்து செல்கிற பார்ட்னர்ஸ்தான் இன்று அதிகம். இதில், இருவருக்குமான புரிதல் எந்த அளவுக்கு இருக்கப்போகிறது? இந்த வேகத்தில், குழந்தைகளை எப்படி சரிவர கவனிக்க முடியும்? உங்களின் அன்பு, உங்கள் பார்ட்னருக்கே முழுதாய் போய்ச்சேரவில்லை. பிறகு எப்படி குழந்தைக்கெல்லாம்..!

குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது. இதனால்தான் என்னவோ, சமீபத்தில் திருமணமான பாலிவுட் ஃபேஷன் ஐகான் சோனம் கபூர் மற்றும் அவருடைய கணவர் ஆனந்த் அஹுஜா இருவரும், `வீட்டில் தொலைபேசி உபயோகிக்க மாட்டோம்' என ஒப்பந்தம் செய்துகொண்டனர்போல! அனைவரும் இதைப் பின்பற்றலாமே!

காசு, பணம், துட்டு, Money... Money

வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி... இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் - மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை' இருக்கும் வரையில் `காசு' வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் - மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.

மொத்தத்தில், உங்கள் படுபிஸி ஷெட்யூலில் சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது?