Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம்
ஓவியங்கள்: ஹரன்

இலங்கை எங்க இருக்கு..? அத்தை வீட்டுல!

குட்டீஸ் குறும்பு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்கள் பக்கத்து வீட்டு 'இன்டலிஜென்ட் பியூட்டி’ லிங்கேஸ்வரனுக்கு அடிக்கடி பாடங்கள் சொல்லித் தருவேன். ஒரு நாள் அட்லஸை வைத்துக்கொண்டு நாட்டின் பெயர், தலைநகர் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அன்று அவன் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களிடம் அவன் பாட்டி, ''எங்க லிங்கேஸுக்கு எல்லா நாடுகளும் தெரியும்...'' என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். உடனே அவர்கள், ''இலங்கை எங்க இருக்கு செல்லம்?'' என்று ஆர்வமாகக் கேட்க... அவன் கொஞ்சம்கூட தாமதிக்காமல், ''ம்ம்... இலங்கை எங்க எஸ்தர் அத்தை வீட்டுல இருக்கு!'' என்று சொல்லியிருக்கிறான். கேட்டவர்கள் புரியாமல் விழிக்க, அவனின் பாட்டி அசடு வழிந்து, ''அட்லஸ் பக்கத்து வீட்டுல இருக்கு. அது இருந்தா இலங்கையைக் காட்ட முடியுங்கறதத்தான் அப்படி சொல்றான்'' என்று விளக்க, அவர்கள் அடக்க முடியாமல் சிரித்துள்ளார்கள். அதைக் கேள்விப்பட்ட என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை... இப்போது அதை நினைக்கும் போதும்கூட!

- ஜி.எஸ்தர் ராஜாத்தி, மதுரை

'வெட்கம், மானம் இல்லையா..?’

குட்டீஸ் குறும்பு !

என் மகனுக்கு எங்கள் வீட்டு நாய்க்குட்டி 'ஆல்வின்’ என்றால் உயிர். அதைத் திட்டினாலோ, அடித்தாலோ  குட்டி எரிமலையாகி விடுவான். ஒரு நாள் பள்ளி விட்டு வொயிட் யூனிஃபார்மில் வந்திருந்த மகனின் மேல் சேற்றுக் கால்களுடன் ஆல்வின் ஆசையாக  ஏற, 'ஐயோ... இதை எப்படித் துவைக்கிறது’ என்று கோபத்தில் அதனை அடித்து விரட்டினேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு வந்ததே கோபம். அதை எதிர்நோக்கத் துணிவில்லாமல், நைஸாக நழுவி விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என் மகனிடம், ''எங்கடா ஆல்வின்..?'' என்று கேட்க, ''அதுக்கென்ன வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா..? அது அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கும்'' என்று அவன் கத்த... சிரிப்பு வெடித்து விட்டது எனக்கு. எதற்கெடுத்தாலும், ''எனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா... நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்'' என்று அடிக்கடி நான் வீட்டில் கத்துவதை அன்றிலிருந்து நிறுத்திவிட்டேன் என்பது... டெயில் பீஸ்!  

- ஜான்ஸி, தேவூர்

'நான்தான் ஃபர்ஸ்ட்!’

குட்டீஸ் குறும்பு !

என் மகன் அர்விந்த்தும், உறவினர் மகள் ப்ரதிமாஸ்ரீயும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். அன்று ஹோம்வொர்க் செய்யாமல் அடம் பிடித்த மகனிடம், ''பாரு... நீ இப்படி படிக்காம இருந்து லாஸ்ட் ரேங்க் வாங்கப்போற. ப்ரதிமாதான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கப்போறா...'' என்றேன். வேகமாக என்னருகில் வந்தவன், ''யார் சொன்னது? எங்க கிளாஸ்லயே நான்தான் ஃபர்ஸ்ட்!'' என்றவன், ''எங்க மிஸ் தினமும் என் பெயரைத்தான் ஃபர்ஸ்ட் சொல்லுவாங்க. நான்தான் ஃபர்ஸ்ட்டா 'யெஸ் மிஸ்’ சொல்வேன்!'' என்று பொரிய, அட்டெண்டன்ஸில் முதல் பெயராக இருக்கும் தன்னை 'கிளாஸ் ஃபர்ஸ்ட்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவன் வெகுளித்தனத்தை எண்ணிச் சிரித்தேன். குழந்தைகள் தன்னை மற்ற குழந்தையோடு ஒப்பிடுவதைத் துளியும் விரும்புவதில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்!

- வி.விஜி விஜயசங்கர், சென்னை-59

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150