Published:Updated:

இருக்கண்குடி ஆத்தா !

அருள் தரும் அம்மன் உலா !

கரு.முத்து
படங்கள் : என். ஜி.மணிகண்டன்

பேருந்து, வேன், கார், டெம்போ என்று வகை வகையான வாகனங்கள் பக்தர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தின் அந்த குக்கிராமத்தை நோக்கி படையெடுக்கின்றன. கிராமத்தை வாகனங்கள் நெருங்குவதுதான் தாமதம்... அவசர அவசரமாக இறங்குகிறவர்களில் சிலர் ஓட்டமாக ஓடுகிறார்கள், சிலர் ஆடிக்கொண்டே செல்கிறார்கள், சிலர் பாடிக்கொண்டே செல்கிறார்கள்... அத்தனையும் இருக்கண்குடி ஆத்தாளைத் தேடித்தான்!

இருக்கண்குடி ஆத்தா !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

சாத்தூர் அருகில் இருக்கும் இருக்கண்குடி எனும் இந்தக் குக்கிராமத்தில், இத்தனை பெரிய பக்தர்கள் கூட்டத்தை யாருமே எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அது நடக்கிறது. தினந்தோறும் பத்தாயிரம் பேரும்... வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் சராசரியாக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் மாரியம்மனை தரிசிக்க வருகிறார்கள்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முழு நிர்வாகமும் இங்குள்ள பரம்பரை அறங்காவலர்களான பூசாரிகளின் கையில்தான். அதில்தான் அடங்கியிருக்கிறது ஆலய வரலாறும்!

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் வசித்து வந்தார் சிவயோகஞான சித்தர். அம்பாளின் தீவிர பக்தரான அவர், ''நான் யோகநிஷ்டையாகும் இடத்தில் நீ வந்து சிவசொரூபியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும்'' என்று பராசக்தியிடம் வரம் கேட்டார். வரமளித்த அன்னை, ''நீ யோகநிஷ்டையாகும் இடம்... நதிகள் சங்கமிக்கும் இடமாக இருக்க வேண்டும்'' என்று கூற, அதன்படியே இந்த இருக்கண்குடி தேடி வந்து நிஷ்டையில் ஆழ்ந்தார் சித்தர். வெகுகாலம் கழித்து ஏற்பட்ட ஊழிப் பிரளயத்தில், எங்கிருந்தோ வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட பராசக்தியின் திருஉருவச் சிலையன்று இந்த இடம் வந்ததும் சுழலில் இருந்து விடுபட்டு பூமிக்குள் புதைந்தது.

இருக்கண்குடி ஆத்தா !

ஒரு நாள்... அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், அங்கு சாணம் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். கிளம்பும்போது ஒரு பெண்ணின் சாணக்கூடையை மட்டும் தூக்க முடியவில்லை. சாணத்தை அகற்றிவிட்டு முயற்சித்தாலும் முடியவில்லை. ஊரார் கூடி, ''இதென்ன ஆச்சர்யம்!'' என்று வியக்க, அந்த கூடைப் பெண்ணுக்கு அருள் வந்தது. ''நான் ஆத்தா வந்திருக்கேன். இங்கேதான் இருக்கேன். என்னை வெளியில எடுங்க. உங்களுக்கு காவலா நான் இருப்பேன்'' என்று சொல்ல, மெய்சிலிர்த்த மக்கள்... அந்த இடத்தை தோண்ட, வெளிப்பட்டது அம்மன் சிலை! ''ஆத்தா தாயே...'' என்று பரவசமான பக்தர்கள், கூரை வேய்ந்து கோயில் கட்டினர். அக்கம் பக்கமெல்லாம் புகழ் பரவிப் பெருக... கூரை கோயிலும் அடுக்கடுக்காக பல மாற்றங்கள் கண்டு, பிரமாண்ட ஆலயமாக உயர்ந்தது. அன்று சாணக்கூடை சுமந்த பெண்ணின் வழி வந்த குடும்பத்தினர்தான்... இன்று கோயிலின் பரம்பரை அறங்காவலர், பூசாரி பதவிகளில் இருக்கிறார்கள்.

வடக்கே அர்ச்சுனா நதியும், தெற்கே வைப்பாறும் ஓட... நடுவில் இருக்கிறது கோயில். நதிகள் இரண்டும் கோயில் தாண்டி ஒன்றாக சங்கமிக்கின்றன. சந்தியின் உள்ளே கிழக்கு பார்த்த நிலையில், வலது காலை மடித்து அமர்ந்திருக்கிறாள் அன்னை. கைகளில் திரிசூலம், பாசம், கபாலம், உடுக்கை ஏந்தியிருக்கிறாள். தன் குழந்தைகள் எந்த வேண்டுதலோடு வந்து நின்றாலும், தாயுள்ளத்தோடு நிறைவேற்றித் தரும் இந்த அம்மனின் சிலை கிடைத்த இடத்தையும், 'அம்மன் பிறந்த இடம்' என்று வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் உள்ளவர்கள்... சந்நிதிக்கு நேரே வயிற்றில், தலையில், மார்பில் என மாவிளக்கு ஏந்தி படுத்திருக்கிறார்கள். எலுமிச்சையில் விளக்கேற்றி அம்மனை நினைத்து உருகிறார்கள். அங்கிருக்கும் வேப்ப மரத்தின் அடியில் மெழுகி கோலமிட்டு விளக்கேற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

இங்கே ஆயிரம் கண் பானை எடுப்பது, தீச்சட்டி எடுப்பது, அங்கப்பிரதட்சணம் செய்வது என்று நேர்த்திக் கடன்கள் நிறைய இருந்தாலும்... முடி காணிக்கையே பிரதானமாக இருக்கிறது. திருவிழா நேரத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் வரை முடி காணிக்கை செலுத்துகிறார்கள். காணிக்கையாகும் முடி, வருடத்துக்கு 1 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகிறது.

கணவர் மாரிமுத்துவுக்கு முடி காணிக்கை செலுத்தி, ஆத்தாளுக்கு பொங்கல் வைத்துவிட்டு அமர்ந்திருந்தார் திருநெல்வேலியைச் சேர்ந்த மகேஷ்வரி. ''இவருக்கு திடீர்னு நடக்க முடியாம, கையைத் தூக்க முடியாம போயிடுச்சு. வைத்தியம் பார்த்தெல்லாம் சரிப்பட்டு வரல. கடைசியில இங்க அழைச்சுக்கிட்டு வந்து, 'குணமாக்கி கொடு தாயே’னு கண்ணீர் வடிச்சு, திருநீறு போட்டு கூட்டிக்கிட்டுப் போனேன். அதுக்குப் பிறகு குணமாயிடுச்சு. அந்த நேர்த்திக்கடனுக்குதான் இந்த மொட்டையும், பொங்கலும். இனிமேயும் ஏதும் குறையில்லாம, குற்றம் வராம இவதான் எங்கள காப்பாத்தணும்'' என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கினார் மகேஷ்வரி.

இருக்கண்குடி ஆத்தா !

விளக்கேற்றி வைத்துவிட்டு கூட்டத்திலிருந்து குடும்பத்துடன் வெளிவந்தார் கோவில்பட்டி மாரியம்மாள். ''பிள்ளை குட்டிங்கள யாரை நம்பி வளர்க்கிறோம்... இவளை நம்பித்தானே?! 'நல்லா வெச்சுக்கடி தாயே’னு அவகிட்ட வந்து கேட்டா போதும். ஒரு நோய் நொடி அண்டாம, காத்துக்கருப்பு நெருங்காம பார்த்துக்குவா ஆத்தா. உயிரைக் காக்கறவளுக்கு நாங்க தலை முடியைத் தவிர வேற என்னத்தை தர முடியும்?! வருஷத்துக்கு ஒருதரம் வந்து மொட்டை போட்டு எங்கடனை தீர்த்துட்டுப் போயிடுவேன்...'' என்று வெள்ளந்தி பேச்சில் விளக்கம் கொடுத்தார் மாரியம்மாள்.

கோயிலின் உள்ளேயிருக்கும் மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் அப்படியே ஆணி அடித்தாற்போல் நாள் முழுதும் அமர்ந்திருக்கிறார்கள். அதை நாம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்க... ''அவங்கள்லாம் 'வயனம்' காக்கறாங்க... இங்க இருக்கற முக்கியமான பிரார்த்தனைகள்ல அதுவும் ஒண்ணு'' என்று சொன்னார் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரிகளில் ஒருவரான ராமர்.

''அதென்ன வயனம்?'' என்ற கேள்விக்கு அவரே பதில் தொடர்ந்தார்...

இருக்கண்குடி ஆத்தா !

''எதிர்பாராத விதத்துல கண் தெரியாம போறவங்க, புத்தி சுவாதீனமில்லாதவங்க, தீராத உடல் வலியால அவஸ்தைபடறவங்க, அம்மைநோய் கண்டு வெகுநாட்களா இறங்காதவங்க... இப்படிப்பட்டவங்கள்லாம் இங்க வந்து 11 நாள், 21 நாள்னு அவங்கவங்க விருப்பப்படி கோயில்ல தங்குவாங்க. சதா சர்வ காலமும் ஆத்தாளோட சந்நிதியில அவளை நினைச்சு பிரார்த்திச்சுக்கிட்டே இருந்தா, அந்தக் காலத்துக்குள்ள அவங்களோட நோய் தீர்ந்துடும். இதைத்தான் 'வயனம் காத்தல்’னு சொல்லுவாங்க.

எந்த தீராத வியாதியா இருந்தாலும் தீரும், எப்படிப்பட்ட வேண்டுதலா இருந்தாலும் நடக்கும். இதை என் அனுபவத்துல லட்சக்கணக்குல பார்த்திருக்கேன். ஆத்தா நடத்திக் காட்டுவா!'' என்று வியந்து போற்றினார் ராமர்.

வாய் பேசாதவராக இங்கு வந்து வயனம் காத்து பேச்சும், கவித்திறனும் கிடைக்கப் பெற்ற பெருநாழி கந்தசாமிப் புலவர் பாடிய பாடல் வரிகள் -

எப்படிச் செல்வது?

மதுரை-திருநெல்வேலி சாலையில் இருக்கும் சாத்தூரில் இறங்கினால், அங்கிருந்து கிழக்கில் எட்டு கிலோ மீட்டரில் இருக்கிறது இருக்கண்குடி. பேருந்துகள், ஆட்டோ, கார் என்று வாகன வசதிக்கு குறைவில்லை. வெள்ளி, செவ்வாய், ஞாயிறுக்கிழமைகளில் காலை 5.00 - இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 5.30 - மதியம் 1.30 மணி, மாலை 4 - இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

அலுவலக தொலைபேசி எண்கள்: 04562-259614, 259864

 'எத்தலம் சென்று பணிந்தாலும்
இத்தலம் வந்து பணிந்தார்க்கே
இடர் தீருமம்மா இருக்கண்குடி மாரிமுத்தே’
- சக்தி வருவாள்...