Published:Updated:

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

கோயில்

‘`ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்த வேண்டும் என்று பழமொழி கூறுவதை பார்த்திருக்கிறோம். அது தவறு... ஆயிரம் பேரிடமாவது போய் சொல்லித் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே சரி. ஆமாம்... திருமணம் என்பது நம் வாழ்க்கையின் இன்னொரு வாசலை திறந்துவைக்கும் சாவி். ஊரும் உறவும் நட்புகளும் சங்கமித்து, புதிய உறவைச் சேர்த்துவைக்கும் கொண்டாட்டமே திருமணம். ஊர் அறிய நடந்தால்தான் திருமணம் சிறக்கும். அப்போதைய சாட்சியங்களும் அதுவே. அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் அமைந்துவிடாது. பணமும் புகழும் இருந்தாலும், மண வாழ்க்கை மனம்போல வாய்த்திடாது. அதுக்கென்று காலம் கூடி வர வேண்டும். அதனால்தான், பல குடும்பங்களில் திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

அழகும் அந்தஸ்தும் இருந்தும், ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தள்ளிப்போக அவர்களுக்குத் தெரியாமலே பல காரணங்கள் இருக்கலாம். அத்தனை தடைகளையும் தாண்டி திருமணம் நடைபெறும்போதுதான் பெற்றோருக்கு நிம்மதி. அப்படிப்பட்ட தடைகளையும் எளிமையாக்கி நமக்கு நல்லதொரு திருமண வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கென்றே சில கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் முக்கியமானது திருச்சுனை அகத்தீஸ்வரர் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில், மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கருங்காலக்குடி அருகில் உள்ளது. கடம்ப வனக்காடாக இருந்த இடம் இது.

இக்கோயிலின் ஸ்தல புராணம் சுவாரஸ்யமானது. சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் திருமணம் நடக்கவிருந்ததால், முப்பத்து முக்கோடி தேவர்களும் உலக மக்களும் வட எல்லையான கயிலைக்கு வர, பாரம் தாங்காது உலகின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்துவிட்டது. உலக சமநிலைக்காக அகத்திய மாமுனி தென்திசைக்குப் புறப்பட்டார். அகத்தியர் நினைக்கும் இடத்தில் நினைத்த நேரத்தில் திருமணக் கோலத்தில் ஈசன் காட்சியளிப்பதாக வாக்குக்கொடுத்தார். இதனால், திருமணத்தைக் காணாது கிளம்பிய அகத்தியருக்கு வழியில் தாகம் ஏற்பட்டது. பாறைகளும் குன்றுகளும் நிறைந்த ஒரு வறண்ட பகுதியில், தன் கைகளால் பாறையில் குழிதோண்ட, அங்கே ஒரு சுனை தோன்றியுள்ளது. தாகம் தணிந்த முனிவர் அங்கேயே நீராடி ஈசனைக்காண வேண்டினார்.சித்தமெல்லாம் சிவம் மட்டுமே கொண்ட குறுமுனிக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். மனங்குளிர்ந்த அகத்தியர், அச்சுனை அருகிலேயே பாறையில் நீர் தெளித்து லிங்க உருவம் செய்து வழிபட்டு, இத்தல இறைவனை வணங்குவோருக்கு மனக்குழப்பங்கள் எல்லாம் நீங்கி அக அமைதியைத் தந்தருள வேண்டும், மக்கள் மகிழ்வுடன் வாழ திருமணங்கள் போன்ற சுபகாரியங்களுக்குத் துணை நின்று அருள வேண்டும் என்று வேண்டுகிறார். ஈசனும் அவ்வாறே அருள்புரிகிறார்.

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

பின்னாளில் மதுரையை ஆண்டுவந்த மாறன் சுந்தரபாண்டியன், பாறை சிவலிங்கத்தைச் சுற்றிலும் கோயில் எழுப்பி, வழிபடத் தொடங்கினான்.

அகத்தியரின் பெயராலேயே இறைவன் அகத்தீஸ்வரர் எனவும், அம்மன் பாடகவள்ளித் தாயார் என்ற திருநாமத்துடனும் வீற்றிருக்கின்றனர். அகத்தியர், சுனை தோண்டி வழிபட்டதால் இவ்வூருக்குத் திருச்சுனை என்ற பெயரே வழக்காகியது. திருச்சுனை குன்றின் எதிர்ப்புறத்திலுள்ள பிரான்மலை உச்சியிலிருந்துதான் ஈசன் திருமணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்துள்ளார்.

மன அமைதிக்காகவும், திருமணங்களில் ஏற்படும் தோஷம், சங்கடங்கள் போன்ற பல இடையூறுகளையும் இன்னல்களையும் நீக்கி திருமணம் நல்லபடியாக நடக்க அகத்தீஸ்வரர் அருள்புரிகிறார். பெரும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதால், இக்கோயில் எல்லோராலும் போற்றிப் புகழப்படுகிறது. திருமண தோஷம் விலகவும், இல்வாழ்க்கை நல்லவிதமாக அமையவும் இங்கு பலரும் வேண்டிக் கொள்ள வருகிறார்கள். நல்லவிதமாக திருமணம் முடித்தவர்களும் கடவுளுக்கு நன்றியைத் தெரிவிக்க வருகிறார்கள்.

திருமணக்கோலம் கண்ட தலமாதலால், திருச்சுனை கிராமத்தைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்தினரும் இக்கோயிலில்தான் திருமணம் செய்கின்றனர். இதைச் சமூக சடங்காகவே மாற்றிக்கொண்டுள்ளனர்.

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!
திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

திருமணத்தடை உள்ள பெண்கள், தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் பாடக வள்ளி அம்மனுக்கு மாங்கல்யமும் பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால் திருமணம் கைகூடும். ஆண்கள், கிழக்கு நோக்கி அழகுற அமர்ந்திருக்கும் அகத்தீஸ்வரருக்கு மாலை வழங்கி வேண்டிக்கொண்டால், இறைவன் விரைவில் கல்யாண மாலை வழங்குவார் என்பது  நம்பிக்கை.

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

அகத்திய முனிவருக்கென தனி சந்நிதியும் இருக்கிறது. மேலும், தனி சந்நிதிகளில் விநாயகர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்கையம்மன், பைரவர், ரேவதியுடன் சந்திரன், உஷாதேவி - பிரத்யுஷா தேவியுடன் சூரியன், நவகிரகங்கள் காட்சியளிக்கின்றனர்.

கோயிலின் பின்புறம் அகத்திய முனி ஏற்படுத்திய வற்றாத சுனை இன்றளவும் உள்ளது. மன்னன் மாறன் சுந்தரபாண்டியன் இத்திருத்தலத்தின் கட்டுமானப் பணியை ஏற்றபோது அவருக்குத் துணையாக நின்று உதவிபுரிந்த பெரிய ஆண்டி, சின்ன ஆண்டி, வெள்ளையம்மாள் ஆகிய மூவருக்கும் கோயிலின் ஒரு தூணில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை இவர்களின் வம்சாவளியினர் இத்தூணைக் குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர். இத்தூணுக்கு மட்டும் தனி பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரமும் தீர்த்தமாக திருச்சுனையும் உள்ளன.

கோயிலில் முக்கிய திருவிழாவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கல்யாண முகூர்த்த நாளிலும் தவறாமல் திருமணங்கள் பல நடத்திவைக்கிறார் அகத்தீஸ்வரர். திருமண தோஷங்கள் உள்ளவர்களுக்கு ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, கோயிலில் பின்புறமாக வாழை மரத்தைக் கட்டி அதற்கு உடை சாத்தி, தாலி கட்டி, தேங்காய், மஞ்சள் கிழங்கு, மஞ்சள், குங்குமம், ஊதுபத்தி, சூடம், எலுமிச்சை போன்ற பொருள்கள் வைத்து பூஜைகள் செய்து, அவர்கள் கையாலயே வாழை மரத்தை வெட்டி, மும்முறை தீர்த்தமாடி இறைவனை வேண்டியபின் சந்நிதியைவிட்டு கிளம்பி, திரும்பிப் பார்க்காமல் வீடு சென்றால், சில மாதங்களிலேயே திருமணம் நடக்கும் என்பதும் ஐதீகம்.

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

நாம் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் கயிலாயத்துக்குள் நுழைந்துவிட்டதுபோல உணர்வோம். சிறிதுநேரம் அங்கு அமர்ந்திருந்தால் தெய்விக நிலை நம்மை சூழும். எதிரில் பார்த்தால் சிவபெருமான் திருமணக் காட்சி தெரிவதுபோல மனம் மயங்கும். மனதிலிருந்த இறுக்கமெல்லாம் அகன்றுவிடும். அங்கிருந்து புது உற்சாகத்துடன் கிளம்புவோம்.

திருமணம் ஆகவில்லையே என்று புலம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர் தங்கள் பையனையோ, பெண்ணையோ இங்கு அழைத்துவந்து வணங்கிச் சென்றால் தொட்டது துலங்கும்.

- சே.சின்னதுரை

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரையும் மாலை 4.30 மணியிலிருந்து 7 மணி வரையும்.

பேருந்து வழி: திருச்சியிலிருந்து மதுரை செல்கிற அனைத்து பேருந்துகளும் கருங்காலக்குடியில் நின்று செல்லும்.