Published:Updated:

வெடிங் விஷ்லிஸ்ட்!

வெடிங் விஷ்லிஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெடிங் விஷ்லிஸ்ட்!

கிஃப்ட்

டுத்த மாதம் செல்லவிருக்கிற திருமணத்துக்கு இன்றே உடை முதல் நகை வரை முடிவு செய்துவிடுவோம்.

திருமணத் தேதியை சரிபார்க்க திருமணத்துக்கு முதல்நாள் கூட பத்திரிகையை எடுத்து உறுதிப்படுத்திக் கொள்வோம்.

எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும், ஒரு விஷயத்தைத் தவிர.

திருமணத் தம்பதிக்கு என்ன அன்பளிப்பு கொடுப்பது? இதைப் பற்றிப் பெரிதாக யோசித்திருக்கவே மாட்டோம்.

கடைசி நேரப் பரபரப்பில், போகிற போக்கில், கண்களில் தென்படுகிற கடையில் நுழைந்து, பட்ஜெட் அனுமதிக்கும் தொகையில் ஏதோ ஒன்றை வாங்கி, ஆடம்பரமாக பேக் செய்து, பெருமையாகக் கொடுத்துவிட்டு வருவோம். என்ன வாங்குவதென்றே தெரியவில்லையா? இருக்கவே இருக்கிறது பொக்கே.

வெடிங் விஷ்லிஸ்ட்!

இப்படி பல தருணங்களில் பலருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்புகள் அவர்களால் உண்மையிலேயே விரும்பப்படுகின்றனவா? உபயோகப் படுத்தப்படுகின்றனவா?

`இல்லை’ என்பதே பெரும்பாலான வர்களின் பதிலாக இருக்கும்.

‘`90 சதவிகித திருமண அன்பளிப்புகள் உபயோகமற்றவை’’ என்கிறார் கனிகா சுப்பையா, ‘வெட்டிங் விஷ்லிஸ்ட்’ என்கிற ஆன்லைன் போர்ட்டலின் சிஇஓ.

‘’கடந்த இருபது ஆண்டுகளில் அன்பளிப்பு கொடுக்கும் மக்களின் மனோபாவம் மாறியிருக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது என்பதைவிடவும், கிஃப்ட்பேக் எப்படியிருக்கிறது என்பதில்தான் அவர்களது கவனம் அதிகமாக இருக்கிறது’’ என்கிறார் கனிகா. வெட்டிங் விஷ்லிஸ்ட் என்கிற இவரது புதுமையான முயற்சி, அன்பளிப்புகள் கொடுப்பதிலும் பெறுவதிலும் நாம் சந்திக்கிற நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கிறது.

‘`சண்டிகரில் பிறந்தேன். சிகாகோ பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படிப்பைத் தொடர்ந்து எம்பிஏ-வும் முடித்தேன். கலிஃபோர்னியாவில் சில காலம் மைக்ரோ ஸ்ட்ராட்டஜி துறையில் பணிபுரிந்திருக்கிறேன். பல வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. அங்கே பெரும்பாலான தம்பதிகள் திருமணத்துக்கு முன்பு வெடிங் ரெஜிஸ்ட்ரி ஆரம்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஜோடிகள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான தேவைகளை - அதாவது என்ன மாதிரியான பரிசுப்பொருள்களின் தேவை இருக்கிறது எனப் பதிவு செய்து, உறவினர்கள், நண்பர்களுக்கு அறிவிப்பார்கள். இவை அனைத்தும் டிஜிட்டல் முறையில் (ஆப்ஸ் உதவியுடன்) நடக்கும். அந்த முறை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததையும் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் இப்படியான வழிமுறைகள் எதுவும் இல்லை. இங்கே தம்பதிகளுக்கு என்ன தேவை என்பதில் அன்பளிப்பு கொடுப்பவர்கள் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. சிலருக்கு உண்மையிலேயே பயனுள்ள அன்பளிப்புகளாகக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனாலும், என்ன கொடுப்பது என்கிற தெளிவு இருக்காது. வேறு வழியின்றி, போட்டோ ஃப்ரேம், சுவர் கடிகாரம் போன்ற வழக்கமான எதையோ ஒன்றைக் கொடுப்பார்கள். தங்களுக்கு வந்த அன்பளிப்புகளில் தேவையில்லாதவற்றை அப்படியே, வேறொரு உறவினர் திருமணத்துக்குக் கொடுக்கும் தம்பதிகளும் பல குடும்பங்களில்  இருக்கிறார்கள். இதற்குத் தீர்வாக வெளிநாட்டில் உள்ளதுபோல நம்மூரிலும் வெடிங் ரெஜிஸ்ட்ரி கான்செப்ட்டை ஆரம்பிக்கலாமா என யோசித்தேன். என்னுடைய ஐடியாவைக் கேள்விப்பட்ட பலரும் பாராட்டினார்கள்... வரவேற்றார்கள். ‘வெடிங் விஷ்லிஸ்ட்’ ஆரம்பமானது இப்படித்தான்’’ என்கிறவர், இந்த ஆன்லைன் ரெஜிஸ்ட்ரியின் சிறப்புகளை விளக்குகிறார்.

‘`வெடிங் விஷ்லிஸ்ட்டைத் தொடர்புகொண்டு, அந்த ஆன்லைன் போர்ட்டலில், திருமண தம்பதிகள், தங்களுக்கு என்னவெல்லாம் அன்பளிப்புகளாக வந்தால் நன்றாக இருக்கும் எனப் பட்டியல் போடுவார்கள். அதை அவர்கள் திருமணத்துக்கு அழைத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் அன்பளிப்புகளைத் தேர்வு செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் நான்கைந்து பேராகச் சேர்ந்தும் அன்பளிப்புக்கான செலவைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆன்லைன் வாடிக்கையாளர் பரிசுத் தளமான ‘செர்ரிடின்’, வெடிங் விஷ்லிஸ்ட்டின் பரிசுப் பங்குதாரராக இருக்கிறது. அதனால், மணமக்கள் விரும்பக்கூடிய அன்பளிப்புப் பொருள்கள் பலவும் வெட்டிங் விஷ்லிஸ்ட்டிலேயே பட்டியலிடப் பட்டிருக்கும்.

வெடிங் விஷ்லிஸ்ட்!

கிரியேட், ஷேர் மற்றும் ரிசீவ் என இதில் மூன்று நிலைகள் உள்ளன. ஒவ்வொரு தம்பதியரும் இந்த அனுபவத்தை உணரலாம். வீட்டு உபயோகப் பொருள், அலங்காரப் பொருள், ஹனிமூன் பேக்கேஜ், ஸ்பா, பிரைடல் மேக்கப் வரை அது எதுவாகவும் இருக்கலாம். இந்த பிராண்டில்தான் பொருள்கள் வேண்டும் என்றுகூடக் குறிப்பிடலாம். பிறகு , அந்தப் பட்டியல் திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்களுக்குப் பகிரப்படும். அன்பளிப்பு கொடுப்பவர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கேற்ற பொருளைக் கொடுப்பதாகத் தேர்வு செய்வார்கள். அதற்கான பணத்தைச் செலுத்தி, தம்பதிக்கு அதை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அந்தத் தகவலும் திருமணமாகப் போகிற தம்பதிக்கு அனுப்பப்படும். இதனால், கடைசி நிமிடக் குழப்பம், நேரமின்மை போன்றவை தவிர்க்கப்படுவதுடன், நாம் கொடுக்கும் அன்பளிப்பு மணமக்களுக்குப் பிடிக்குமா, பயன்படுமா என்கிற கேள்விகளுக்கும் இடமின்றிப் போகிறது. அன்பளிப்பைப் பெற்றுக்கொண்ட தம்பதி, அதைக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் ஆப்ஷனும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தம்பதிகளிடம் இருந்து எந்தக் கட்டணமும் பெறப்படுவதில்லை...’’ என்கிற கனிகாவுக்கு மிகக் குறுகிய காலத்தில் இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பில் மிகுந்த பூரிப்பு.

‘`இந்த கான்செப்ட் இளைய தலைமுறையினருக்கு மட்டும்தான் பிடிக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். பாட்டி ஒருவர், வெட்டிங் விஷ்லிஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் புரிந்துகொண்டு, அதன் மூலமாக தனது உறவினருக்கு அன்பளிப்பு கொடுக்க முன்வந்தது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது...’’ என்றஉதாரணத்தையும் முன்வைக்கிறார் கனிகா.

இனி அன்பளிப்புகள் மட்டுமின்றி அன்பளித்தவர்களும் நினைவில் நிற்பார்கள் ஆயுளுக்கும்!

- ஆர்.வைதேகி