Published:Updated:

அனுபங்கள் பேசுகின்றன !

அனுபங்கள் பேசுகின்றன !

எப்படி வரும் மின்சாரப் பற்றாக்குறை?!  

அனுபங்கள் பேசுகின்றன !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். மண்டபத்தில் நான் நுழைந்த சமயம், எல்லோரும் பெண் அழைப்புக்காக அருகே உள்ள கோயிலுக்குச் சென்றிருந்தனர். தெருமுனையில் பெண் ஊர்வலம் வந்ததும், ஒருவர் அவசரமாக வந்து மண்டபத்தில் அலங்கார பல்புகளை எரியவிட்டார். பெண் அழைப்பு முடிந்து, சாப்பாடு முடிந்ததும், வெளிச்சத்துக்குத் தேவையான லைட்டுகளை மட்டும் எரிய வைத்துவிட்டு, மற்ற விளக்குகளை அணைத்து விட்டார். மக்கள் எங்கே படுத்து இருந்தனரோ, அங்கே மட்டும் ஃபேன்களை ஒட விட்டார். விடியற்காலை மறுபடியும் தேவையான இடங்களில் லைட்டுகளை எரியவிட்டார். அந்த மண்டபத்தில் லைட், ஃபேன் முதலான எல்லாவற்றுக்கும் ஒரே இடத்தில் ஸ்விட்ச் போர்டு வைத்து, அதற்கு கதவும் போடப்பட்டு, அதைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆளையும் போட்டிருந்தனர். அவருடைய வேலை... தேவையான நேரத்தில், தேவையான இடத்துக்கு லைட்டும் ஃபேனும் போட வேண்டும், மற்ற நேரத்தில் நிறுத்திவிட வேண்டும் என்பதுதான்.

இதேபோல் எல்லோரும் திட்டமிட்டால்... எப்படி வரும் மின்சாரப் பற்றாக்குறை?!  

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர் 

பாஸ்புக் செக்கிங் உஷார்!

அனுபங்கள் பேசுகின்றன !

வங்கிக்குச் செல்லும்போதெல்லாம் பாஸ் புக்கில் என்ட்ரி போட்டு, செக் செய்து, கடைசி பேலன்ஸில் 'டிக்’ செய்து வைத்துக் கொள்வது என் வழக்கம். சென்ற முறை சென்றபோது, நான் எடுக்காத ஒரு தொகை டெபிட் செய்யப்பட்டிருந்தது. விசாரித்ததில், 'லாக்கர் வாடகை’ என்றனர். பதினைந்து நாட்கள் கழித்து திரும்பவும் செல்கையில், அதேபோல் இருமடங்கு தொகை டெபிட் செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களிடம் விவரம் கேட்க, ''லாக்கர் வாடகை, சமீபத்தில் இரு மடங்காக உயர்ந்து விட்டது'' என்றனர். ''ஆனால், ஏற்கெனவே பழையபடி ஒரு தொகையை டெபிட் செய்துவிட்டீர்களே?'' என்று நான் கேட்டதும், சம்பந்தப்பட்ட அதிகாரி, கணக்கை மீண்டும் சரிபார்த்து விட்டு, ''அந்தத் தொகையை மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டில் கிரெடிட் செய்து விடுகிறோம்'' என்று கூறினர்.

வங்கிக்காரர்கள் பல கணக்குகளைக் கையாளும்போது, தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க, நாம்தானே உஷாராக இருக்க வேண்டும்?!

- மீரா ஸ்ரீதர், திருச்சி

ஓர் உயிருக்காவது..!

அனுபங்கள் பேசுகின்றன !

கோகுலாஷ்டமிக்கு மாவு அரைக்க ரைஸ் மில்லுக்குச் சென்றபோது, ஏகப்பட்ட கூட்டம். மாவு அரைக்க, கல்லாவைப் பார்த்துக் கொள்ள என்று ஒரே ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்பதை அவரின் தோற்றம் சொன்னது. என் முறை வந்தபோது, மிகுந்த வேலையால் சோர்வுற்றிருந்தவர், ''இத்தனை மாவு அரைச்சு தர்றேன்... நமக்கு யாராவது பலகாரம் குடுப்பாங்களா..?'' என்றார், சின்ன சிரிப்பில் அலுப்பை மறைத்து. உருகிவிட்ட நான், கோகுலாஷ்டமி முடிந்தவுடன் முறுக்கு, தேன்குழல், சீடை, சோமாசி, அப்பம், ஓமப்பொடி வகைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவரில் போட்டு அவரிடம் கொடுத்தேன். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், ''நல்லா இருக்கோணும்மா நீ'' என்று கண்கள் பனிக்க வாழ்த்தினார். பல்லுயிர் ஓம்பாவிட்டாலும், ஓர் உயிருக்காவது பகுத்து கொடுத்தோம் என்பதில் பண்டிகையை மீறிய சந்தோஷம் எனக்கு!

- பூமா ராகவன், சென்னை-101

எரிச்சல்... எச்சரிக்கை!

அனுபங்கள் பேசுகின்றன !

கேஸ் அடுப்பில் எதைச் சமைத்தாலும், 'சிம்’மில் வைத்து சமைப்பதுதான் என் பழக்கம். 'சிம்’மில் வைத்துவிட்டு உட்கார்ந்து காய் நறுக்கலாம், தொட்டில் ஆட்டலாம், பைப்பில் தண்ணீர் பிடிக்கலாம்... இப்படி பல வேலைகள் பார்க்கலாம், சமையல் வேலையும் நடந்து கொண்டு இருக்கும் என்று என் செயலுக்கு நியாயமும் சொல்வேன். ஒரு நாள் பாலை அடுப்பில் வைத்துவிட்டு, பிள்ளைகளைத் தூங்க வைக்க படுக்கை அறைக்கு வந்த நான்... பகல் நேர வேலை பளுவால் கண்ணயர்ந்து விட்டேன். அடுப்பில் இருந்த பால் கொதித்து, வற்றி, அடி பிடித்து தீய்ந்து, வீடு முழுக்க பரவிய வாசனை படுக்கை அறைக்கும் வந்தது. சூழ்நிலையை உணர்ந்து தூக்கத்திலிருந்து தூக்கிவாரிப் போட எழுந்தவள், ஓடிச் சென்று அடுப்பை ஆஃப் செய்தேன். ' 'சிம்’ல வெச்சுட்டு அதை மறந்து போயிடாத’, 'படுக்கறதுக்கு முன்னால ரெகுலேட்டரை ஆஃப் செஞ்சுட்டுப் படு’ என்றெல்லாம் என் கணவர் அடிக்கடி சொல்லும்போது எரிச்சலடைந்த எனக்கு, அன்றிலிருந்துதான் எரிச்சல் எச்சரிக்கையாக மாறியது!

- சுகுணா கதிரேசன், சென்னை-91

இரட்டைச் செலவு வைத்த ஓட்டுநர் உரிமம்!

அனுபங்கள் பேசுகின்றன !

என் கணவரின் ஓட்டுநர் உரிமம் காலாவதியானதால், அருகில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு சென்று புதுப்பித்தார். ஆனால், நான்கு மாதங்களிலேயே மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிலைமை வந்தது. விஷயம் இதுதான்... தற்போது 40, 50 மற்றும் 60 வயது பூர்த்தி அடையும்போது ஓட்டுநர் உரிமத்தை மருத்துவச் சான்றிதழ் கொடுத்துப் புதுப்பிக்க வேண்டும் என்று புதிதாக விதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறதாம். நான்கு மாதங்களுக்கு முன்பு புதுப்பித்தவருக்கு, தற்போது 50 வயது பூர்த்தியாகிவிடவே, மீண்டும் புதுப்பிக்க வேண் டிய நிலை.

அதே ஓட்டுநர் பயிற்சிப் பள் ளிக்குச் சென்று, ''இந்த விதி முறைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும்தானே... சரியாக கவனித்து சொல்லியிருந்தால், ஒன்றாகவே புதுப்பித்திருப்போமே... எங்களுக்கு இந்த இரட்டைச் செலவு இல்லையே'' என்றதற்கு எந்த பதிலும் இல்லை. பணத்தைச் செலவு செய்வது நாம்தானே... அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

- வரலஷ்மி ராகவன், சென்னை-53