Published:Updated:

ஆனந்தக் கண்ணீரில் ஐந்து ஜோடிகள் !

ஆனந்தக் கண்ணீரில் ஐந்து ஜோடிகள் !

டிசம்பர் 26 அன்று சென்னையில் ஜாலிடே! 'அவள் - விவெல்’ இணைந்து நடத்திய இனிதான இந்த வைபவத்தை கொண்டாட உற்சாகமாகத் திரண்டு வந்தனர் சென்னைத் தோழிகள்.

ஆனந்தக் கண்ணீரில் ஐந்து ஜோடிகள் !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் நாள், கிறிஸ்துமஸ் அன்று... தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முன்தேர்வுப் போட்டிகளுக்கு, அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஆஜரான வாசகிகள், ''வீட்டுக்குப் போய் நல்லா ஹோம் வொர்க் பண்ணிப் பார்க்கணும். அப்போதான் நாளைக்கு ஃபைனல்ஸ் வாய்ப்பு வந்தா... வின் பண்ண முடியும்'' என்று சந்தோஷ டென்ஷனுடன் விடை பெற்றனர்.

26-ம் தேதி காலை காலை ஏழு மணிக்கே, அண்ணாநகர் விஜய் ஸ்ரீமஹால் முன்பாக திரள ஆரம்பித்துவிட்டனர் தோழிகள். ஒன்பது மணி வாக்கில் அரங்குக்குள் அனுமதிக்கப்பட, அந்த நிமிஷத்திலேயே அவர்களாகவே தொடங்கிவிட்டனர் ஜாலி டே கொண்டாட்டத்தை! ஆம், ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த டப்பாங்குத்து பாடல்களுக்கு ஏற்ப டான்ஸ் போட்டு பட்டையக் கிளப்பினர் தோழிகள். 10 மணிக்கு தொகுப்பாளர் அபீக்ஷா பட், கலர்ஃபுல் கொண்டாட்டத்துக்கு கியாரன்டி கொடுத்தபடி மேடை ஏறும் வரை ஓயவில்லை ஆட்டம்!

'அலைபாயுதே கண்ணா...’ என்று கவிச்சித்ரா ஆடிய பரதத்தைத் தொடர்ந்து கலகலவென ஆரம்பமாயின போட்டிகள். 'நகைச்சுவை நேர’த்தில் ரேவதி கணேஷ§ம், சரோஜாவும் ரகளை பண்ணியது டீச்சர் - ஸ்டூடன்ட் காம்பினேஷனில். 'தேசபக்தி பாடல் பாடுங்க’ என்று ரேவதி சொல்ல, 'புலி உறுமுது’ பாடல் பாடி, ''தேசம் முழுக்க பாடற பாட்டுதானே தேசபக்தி பாடல்?!'' என்று சரோஜா நியாயம் சொல்ல அரங்கே அதிர்ந்தது. அடுத்து, வரலாறு பற்றிக் கேட்க, 'கரிகாலன் காலைப் போல...’ என்று பாடியது செம நக்கல்ஸ்!

ஆனந்தக் கண்ணீரில் ஐந்து ஜோடிகள் !

'சவாலே சமாளி!’ போட்டியில் ''கணவருக்கும், அண்ணிக்கும் பிரச்னை. உங்க அண்ணனுக்கு தொழில்ல நஷ்டம். உங்களுக்குப் போட்ட நகைகளை உதவியா கேட்டா, கணவரை எப்படி சமாதானப்படுத்தி, அண்ணனுக்கு உதவுவீங்க?'' என்று அனிதா சக்திவேலிடம் கேட்டபோது, ''எனக்கு உடம்பு சரியில்லங்கனு கணவர்கிட்ட சொல்லி, அண்ணியை எங்க வீட்டுக்கு ரெண்டு நாள் வரவழைச்சுடுவேன். எல்லா வேலையும் செஞ்சு முடிச்சு, அண்ணி செஞ்சதா கணவர்கிட்ட சொல்லி நல்லபேரு வாங்கிக் கொடுத்து, அப்புறம் அண்ணன் கஷ்டத்தை எடுத்துச் சொல்லி ஹெல்ப் பண்ணச் சொல்வேன்'' என்று விக்ரமன் படத்துக்கான மினி ஸ்க்ரிப்ட்டை மேடையில் ரெடி செய்து கிளாப்ஸ் வாங்கினார் அனிதா!

வாசகியர் வழக்காடு மன்றம், ஜோடி அறிதல், மௌனமொழி, ரகசியம் சொல்லவா, பாரதியார் பாடல், விளம்பரம் என்று நீண்ட அத்தனை போட்டிகளும் விறுவிறு. இடையிடையே 'திடீர் போட்டி’கள் அறிவிக்கப்பட, சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது. ''ரெண்டு, மூணு மெட்டிகள் போட்ட பெண்கள் எல்லாம் வாங்க...'', ''இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடறவங்க எல்லாம் வாங்க...'' என்று அபீக்ஷா பட் அழைக்க, 13 மெட்டிப் பெண்கள், பிறந்த நாள் பேபி வசந்தி, சாந்தி அனைவரும் மேடையேறி பெற்றுக் கொண்டனர் சர்ப்ரைஸ் பரிசுகளை!

பியூட்டிஷியன் அபர்ணா தந்த அழகுப் பராமரிப்பு டிப்ஸ்கள் அனைவரையும் ஈர்த்தன. வாசகிகள், ஐ.டி.சி. நிறுவன தயாரிப்புப் பொருட்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் தந்தார் அந்நிறுவனத்தைச் சேர்ந்த அருண்.

பார்வையாளராக வந்திருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் பேத்தி ராமலட்சுமி 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்’ பாடலை 'ஸ்பெஷல் பரிசாக’ வாசகிகளுக்குப் பாடி அசத்தினார். 'அவள் - விவெல்’ ஜாலிடே மூலமாக பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த தோழிகள் மேடை ஏறிய தருணங்கள், பரவசம். ஆல்பா பானு - பிரேமலதா, ''நாங்க 20 வருஷம் கழிச்சு இங்க சந்திக்கறோம்...'' என்று நெகிழ, பிருந்தா - மல்லிகா சம்பத் ''நாங்க 28 வருஷம்!'' என்று குஷியாக, சாந்தி - காமாட்சி ''நாங்க 42 வருஷம்!'' என்று உற்சாகப்பட, கிருஷ்ணகுமாரி- கண்ணகி ''நாங்க மூணாப்பு படிக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ்'’ என மகிழ்ச்சி காட்ட... இறுதியாக, ''நாங்க 50 வருஷம்!'' என்று ஆனந்தமானார்கள் மேகம்மாள் - லோகாம்பாள்! அந்த ஐந்து ஜோடி கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

நிறைவாக, பரிசு வழங்கும் படலம்... முதல் பரிசாக கேஸ் ஸ்டவ், குக்கர்கள்; இரண்டாம் பரிசாக எலெக்ட்ரிக் குக்கர்கள்; மூன்றாம் பரிசாக குக்கர் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பம்பர் பரிசுக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தி.நகர் விஜயலட்சுமி. மொத்தம் இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பரிசுகள். ஆனந்த ஆச்சர்யம் அப்பியிருந்த கண்களுடன் பரிசுகளை அள்ளிக் கொண்டனர் தோழிகள்.

க.நாகப்பன்
படங்கள் : பொன்.காசிராஜன்