Published:Updated:

எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்!

ன்றைய சூழ்நிலையில் 28 வயதுக்குள் வேலை, வருமானம், சேமிப்பு என்று பொருளாதார அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்ட பிறகே திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள், தங்கள் திருமணச் செலவுகளுக்கு முழுக்க முழுக்கப் பெற்றோரைச் சார்ந்திருக்காமல் அதில் தங்களின் பங்களிப்பையும் தருகிறார்கள்.

எல்லோரும் கொண்டாடுவோம்!



இன்னொரு பக்கம் பெண்களின் திருமண வயதும் கூடி வருவதால், தங்கள் திருமணச் செலவுகளுக்குப் பெர்சனல் லோன் எடுத்து, திருமணத்துக்குப்பின் அந்தத் தொகையைத் தங்களின் சம்பளத்திலிருந்து செலுத்தும் பெண்களையும் பார்க்க முடிகிறது. அதற்கு அவர்களின் கணவர்களும் ஒத்துழைப்புத் தருவது அழகு.

இது ஒருபுறமிருக்க, ஈவன்ட், மெஹந்தி, ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி போன்ற சடங்குகள் தவிர்த்த கேளிக்கை அம்சங்களுக்குப் பெற்றோர்களிடம் பணம் கேட்காமல், அவற்றைத் தங்களின் செலவில் நிறைவேற்றிக்கொள்வதையும் பார்க்கமுடிகிறது. வீட்டில் கல்யாணப் பேச்சு தொடங்கியதுமே, பேச்சுலர்ஸ் பார்ட்டியில் இருந்து போட்டோகிராபி வரை,  தங்களின் ‘வெடிங் ட்ரீம்’ ஆக இருக்கும் பல விஷயங்களுக்குத் தாங்களே சேமிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களும் இளம் பெண்களும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பிரைடல் மேக்கப் பேக்கேஜ் 25,000 ரூபாய் என்றால், ‘ஓகே! நான் கொடுத்திடறேன் மம்மி’ என்கிறார்கள் சில பெண்கள்.

காதல் திருமணங்களில், இருவீட்டுப் பெற்றோரும் ஸ்ருதி சேர்ந்திராத அந்தக் கொதிநிலையில், தங்களின் திருமணச் செலவுகளை முழுக்க முழுக்கத் தாங்களே எதிர்கொண்டு மாலைமாற்றிக்கொள்கிறார்கள் இன்றைய தலைமுறையினர் சிலர். அதற்கும் மேலாக, திருமண நிச்சயத்துக்குப்பின் போனில் பேச ஆரம்பிக்கும் ஆண் - பெண் இருவரும் திட்டமிட்டு, இணைந்து வங்கிக் கடன் பெற்று, திருமணத்துக்கு முன்னரே நிலம், வீடு என்று வாங்கி தங்கள் பெயரில் பதிவு செய்து, தங்களுக்குத் தாங்களே திருமணப் பரிசு கொடுத்துக்கொள்ளும் சாமர்த்தியசாலிகளாகவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு, திருமணம் என்பது தங்கள் வாழ்வின் முக்கிய நாள் என்பதையும் தாண்டி, அதைத் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மறக்க முடியாத நாளாக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கு உறுதுணையாக  திருமணம் சார்ந்த புதுப்புது விஷயங்கள் இந்த இதழ் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் வைபவத்தை இன்னும் வண்ணமயமாக மெருகேற்றிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

- ஆசிரியர்