Published:Updated:

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

விர்ச்சுவல் ரியாலிட்டி

ல்லாத் திருமணங்களிலும் வீடியோ எடுப்பதென்பது கட்டாயச் சடங்காகவே மாறிவிட்டது. திருமணம் முடிந்ததும் அந்த வீடியோ உறவினர்கள், நண்பர்கள் என எல்லார் வீடுகளுக்கும் ஒரு ரவுண்டு போய்த் திரும்பும். திருமணமான புதிதில் மணமக்களும் அதைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து மகிழ்வார்கள். திருமணமான அடுத்த மாதமே அந்த வீடியோ, வீட்டின் மூலையில் முடங்கும். குழந்தை பிறந்ததும் அதற்குப் போட்டுக் காட்டுவதற்காக மீண்டும் அதைத் தேடி எடுப்பார்கள். அதே வேகத்தில் மீண்டும் அது பழைய இடத்தில் முடங்கும். சம்பந்தப்பட்ட மணமக்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும் அந்த வீடியோ பதிவு.

ஆனால், விர்ச்சுவல்  ரியாலிட்டி - அதாவது `மெய்நிகர் உண்மை’ வீடியோ அப்படியல்ல. காலத்துக்கும் சலிக்காது. பார்க்கிற யாருடனும் பெர்சனலாக தொடர்புபடுத்துகிற வகையில் அமைவதே அதன் சிறப்பு. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ வீடியோவைச் சென்னையில் பிரபலப்படுத்தி வருகிறார்கள் ‘டெலிபோர்ட் 360’ நிறுவனத்தை நடத்தும் நந்தகுமார், தரணீதரன் மற்றும் மனோபாரதி.
அதென்ன விர்ச்சுவல் ரியாலிட்டி? திருமண வீடியோக்களில் அதன் பங்கு என்ன? அதில் அப்படி என்ன சுவாரஸ்யம்? விளக்கமாகப் பேசுகிறார்கள் நண்பர்கள்.

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

‘`நான் எப்படிப் பிறந்தேன் என்கிற கேள்வி எல்லா குழந்தைக்கும் இருக்கும். பெற்றோரின் திருமண போட்டோ ஆல்பத்தையும் வீடியோ பதிவையும் பார்க்கிற குழந்தைக்கு அதில் தான் ஏன் இல்லை என்கிற இன்னொரு கேள்வியும் எழும். ‘நீ அப்போ இல்லடா... அப்புறம்தான் பிறந்தே...’ மழுப்பலான பதிலைச் சொல்லிக் குழந்தையைச் சமாளிப்பார்கள் பெற்றோர். சமீபகாலம் வரை இதுதான் நிலைமை. இனிவரும் காலத்தில் திருமணம் செய்யப் போகிற தம்பதியருக்குக் குழந்தையின் சவாலான கேள்வியை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்காது.

`எங்கக் கல்யாணம் நடக்கும்போது நீ பிறக்கலை. ஆனா, அந்தக் கல்யாணத்துக்கு நீ போய் அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணலாம்’ எனச் சொல்ல முடியும். 

`அதெப்படி... கால எந்திரத்தில் கடந்த காலத்துக்கா அழைத்துச் செல்ல முடியும்?’ என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். கால எந்திரமோ, மாய மந்திரமோ தேவையே இல்லை. வெர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோகிராபியின் உதவியால் இது நூறு சதவிகிதம் சாத்தியம். வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் கல்யாணத்தை வீடியோவாகப் பதிவாக்கினால், குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையும் தன் பெற்றோரின் திருமணத்தில் கூடவே இருந்தது போன்று உணரும்.’’ - அசத்தல் உதாரணத்துடன் அழகாக ஆரம்பிக்கிறார்கள் நண்பர்கள்.

“கல்யாண வீடியோதான் பல வருஷங்களா இருக்கே... கல்யாணத்துக்கு வராத யாரும் எப்போதும் அதைப் போட்டுப் பார்க்க முடியுமே... இதுல என்ன புதுசு... என்கிற கேள்வியும் அடுத்து உங்களுக்கு வரும்.
உண்மைதான்... கல்யாண வீடியோ என்பது ஏதோ ஓர் இடத்தில் வீடியோ கேமராவை வைத்து வீடியோகிராபர் ஷூட் செய்வார். அவர் நினைத்த கோணங்களில் அவர் விரும்புகிற காட்சிகளை மட்டுமே படம்பிடிப்பார். கல்யாணத்துக்கு வர முடியாதவர்கள் அதைப் பார்க்கும்போது, சம்பவ இடத்தில் என்னவெல்லாம் நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். ஆனால், கல்யாணத்தைப் பார்க்க முடியாத நபரை, வீடியோ பார்க்கும்போது தானும் அந்தக் கல்யாணத்தில் இருந்ததைப் போலவே உணரச்செய்வதுதான் விர்ச்சுவல்  ரியாலிட்டி வீடியோ...’’ - விளக்கம் சொன்னபடியே, அந்த அனுபவத்தை நம்மையும் உணரச் செய்கிறார்கள்.

`விர்ச்சுவல்  ரியாலிட்டி கிட்’டை கண்களில் மாட்டிக் கொண்டதும், நமக்கு நாம் இருக்கும் சூழல் மறந்து, மறைந்து போகிறது. திருமண மண்டபத்தில், மணமக்கள் அமர்ந்திருக்கும் மேடையின் எதிரில் முதல் வரிசையில் நாமும் இருப்பது போல உணர்கிறோம். இடப்பக்கம், வலப்பக்கம், பின்பக்கம் என எங்கே திரும்பினாலும் கல்யாண வீட்டின் களேபரம் களை கட்டியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அண்ணாந்து பார்த்தால் மேற்கூரை அலங்காரம் பிரமிப்பூட்டுகிறது.

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

மணமக்களின் உறவினர்களில் ஒருவர், ‘வாங்க... வாங்க... டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்கிறார். நம்மையும் அறியாமல் அவருக்குப் பதில் சொல்ல விழைகிறோம். அடுத்து தாலியைத் தட்டில் வைத்து, அட்சதையுடன் கொண்டு வருகிறார்கள். நம் முன்பும் தட்டை நீட்டுகிறார்கள். நாமும் நம் நிலை மறந்து அட்சதையை எடுக்கக் கையை நீட்டுகிறோம். மேளம் கொட்டி, தாலி கட்டப்படும்போது நமக்குப் பின்னால் இருந்து பறந்து வருகிற அட்சதையை நம்மாலும் உணர முடிகிறது.

அடுத்து ‘பாகுபலி 2’ ஸ்பெஷல் புரமோஷனையே விர்ச்சுவல் ரியாலிட்டியில் எடுத்திருக்கும் காட்சியையும் நமக்குக் காட்டுகிறார்கள்.

பிரமாண்ட பாகுபலி செட்.... இயக்குநர் ராஜமெளலி அத்தனை மரியாதையுடன் நம்மை வரவேற்கிறார். திடீரென வருகிறார் அனுஷ்கா. ‘கண்ணை மூடித்திறந்து பாருங்கள்... ஆச்சர்யம் காத்திருக்கிறது’ என்கிறார். அடுத்த நொடியே இன்னொரு பிரமாண்ட செட்டில் நாம் அந்தரத்தில் உட்கார்ந்திருப்பது போல உணர்கிறோம். ராணாவும் சத்யராஜும் நெருக்கத்தில் வந்து நம்மைக் கலாய்த்துவிட்டுப் போகிறார்கள். இட, வலப்பக்கங்களில் அரண்மனைக் காவலர்களின் அணிவகுப்பு. பின்னால் திரும்பினால் வானுயரக் கோட்டை, வாய் பிளக்க வைக்கிறது. பாகுபலி செட்டின் நடுவில் அமர்ந்தபடி அத்தனையையும் நேரடியாகப் பார்க்கிற மாதிரி உணர்கிறோம்.

இதுதான் வெர்ச்சுவல் ரியாலிட்டி... பிரமிக்க வைக்கிறது; பிரமாண்டப்படுத்துகிறது.

‘`முதலில் கம்ப்யூட்டர் வந்தது. கீ போர்டும் மவுஸும் உபயோகித்தோம். பிறகு லேப்டாப் வந்தது. இப்போது ஸ்மார்ட்போன் உபயோகிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்புவரை சூப்பர் கம்ப்யூட்டர் என்று சொல்லப்பட்டது, இன்று நம் எல்லோர் கைகளிலும் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இதையும் விட முன்னேறியிருப்போம். அப்படியொரு பரிணாம வளர்ச்சிதான் விர்ச்சுவல் ரியாலிட்டி.

``ஓரிடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் டி.வி இயங்கிக் கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த டி.வி இல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் அதைப் பார்க்க முடியுமானால்? நாம் இருக்கும் இடத்துக்கு அந்த டி.வி-யைக் கொண்டு வர முடிவதுதான் விர்ச்சுவல்  ரியாலிட்டி...’’ - இன்னும் விளக்கமாகப் புரியவைக்கிறார்கள்.

திருமணத்துக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள், வெர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோவுக்கும் சேர்த்தே செலவழிக்க சம்மதிப்பதாகச் சொல்கிறார்கள் இவர்கள்.

‘`பிரத்யேக ஆப்ஸ் மூலம் கல்யாணம் நடக்கப்போகிறவரின் அழைப்பிதழை ஸ்கேன் செய்தால், மணமகனும் மணமகளும் சேர்ந்தே வந்து ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பது போன்றும் இதில் செய்ய முடியும்.

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

நிச்சயதார்த்தத்தில் இருந்தே வீடியோ கேட்பவர்களும் இருக்கிறார்கள்... பிறகு ப்ரீ வெட்டிங் ஷூட், அடுத்து திருமணம், ரிசப்ஷன் என வளைகாப்பு வரை ஒரு கதைபோலக் கொண்டுவர முடியுமா எனக் கேட்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அதற்கு இந்த வீடியோவை அருமையான அன்பளிப்பாகக் கொடுக்க முடியும். அம்மா அப்பாவின் திருமணத்தை அந்த இடத்தில் இருந்தபடியே பார்த்த அலாதியான அனுபவத்தைக் குழந்தைக்குக் கொடுக்கிற வி.ஆர். தொழில்நுட்பத்தை மிகப்பெரிய விஞ்ஞான வரம் என்றே சொல்லலாம்.

நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ திருமணத்துக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கென்றே பிரத்யேகமாக வீடியோ ஷூட் செய்து, ‘எங்க கல்யாணத்துக்கு உங்களால வர முடியலை. நீங்க இல்லாத குறையைப் போக்கத்தான் இந்த வி.ஆர் வீடியோ’னு சொல்லி அவர்களுக்கே அனுப்புகிறார்கள். கல்யாணத்துக்கு வர முடியவில்லை என்பதை மீறி, இந்த விர்ச்சுவல்  ரியாலிட்டி வீடியோவைப் பார்க்கிறபோது அவர்களும் அந்த இடத்தில் இருந்தது மாதிரி உணர்வார்கள்...’’ - கேட்கிற யாருக்கும் சுவாரஸ்யம் கூட்டும் இவர்களது விளக்கம்.

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் உண்மை!

`வி.ஆர் அனுபவத்துக்குத் தயாராவது ரொம்பவே சிம்பிள். அதற்கான கிட்டை, ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் போதும். வழக்கமான கேமரா தவிர்த்து, இதற்கென பிரத்யேக கேமராக்கள் இருக்கின்றன. அவற்றுக்கு 360 டிகிரி கேமரா என்று பெயர். இந்த கேமரா, சம்பவ இடத்தின் எல்லாத் திசைகளையும் படம்பிடிக்கும். ஆறு கேமரா இருக்கும். ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொருவிதமான அவுட்புட் வரும். கடைசியில் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துக் கோள வடிவில் கொண்டுவர வேண்டும். எடிட் செய்து, தேவைப்பட்டால் மியூசிக் சேர்த்து, யாராவது பேச விரும்பினால் அதையும் சேர்த்து முழுமையாக்கப்படும்.  மொத்தமே 7 முதல் 10 நிமிடங்கள்தான் இந்த வீடியோ பதிவு இருக்கும். எனவே, முன்கூட்டியே மணமக்களுடன் இதைப் பற்றிப் பேசி அவர்கள் எந்த விஷயங்கள் எல்லாம் அவசியம் வீடியாவில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

ரூபாய் இரண்டரை லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது இதற்கான பட்ஜெட். இது இரண்டு நாள்களுக்குமான கவரேஜ் செலவு.  இதையே இரண்டு பகுதிகளாகக் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். வருங்காலக் குழந்தைக்குக் காட்டுவதற் கான வீடியோ ஒன்று, நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்டவும் ஞாபகார்த்தமாகப் பத்திரப்படுத்தவும் இன்னொன்று. விர்ச்சுவல்  ரியாலிட்டி கிட் மற்றும் உபயோகிக்கிற முறைகள் எல்லாம் இந்தச் செலவில் அடக்கம்’’ - அவசியத் தகவல்களுடன் முடிக்கிறார்கள்.

மெய்நிகர் உண்மையை மெய்சிலிர்க்க அனுபவிக்கத் தயாரா?

- ஆர்.வைதேகி